பீலா ராஜேஷ் மாற்றம்: தமிழக சுகாதாரத்துறைச் செயலராக ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது ஏன்?

பீலா ராஜேஷ்

தமிழக சுகாதாரத் துறைச் செயலராக இருந்த பீலா ராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய சுகாதாரத் துறைச் செயலராக ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சுகாதாரத் துறையின் செயலராக ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் பீலா ராஜேஷ் செயல்பட்டுவந்தார். இந்த நிலையில், தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் அந்தத் துறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, வர்த்தக வரி மற்றும் பதிவுத் துறையின் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் புதிய சுகாதாரத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் அவர் தொடர்ந்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், FACEBOOK

கொரோனா தொற்று தமிழ்நாட்டில் பரவ ஆரம்பித்த காலத்தில், பீலா ராஜேஷின் செயல்பாடுகள் குறிப்பிடத்தகுந்த பாராட்டைப் பெற்றன. குறிப்பாக அவர் செய்தியாளர் சந்திப்புகளைக் கையாண்ட விதம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், அதற்குப் பிறகு அவரது செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்துச் செல்வதில்லை என்ற புகார் எழுந்தது. அந்தக் கட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையரான ஜெ. ராதாகிருஷ்ணனும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மிக வேகமாக நடக்க ஆரம்பித்தது. தினமும் 1,800க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்தப் பின்னணியில்தான் ஜெ. ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பீலா ராஜேஷ் சுகாதாரத் துறைச் செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக ராதாகிருஷ்ணன்தான் சுகாதாரத் துறைச் செயலராக இருந்தார். அவர் எட்டு ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்திருந்தார். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி அவர் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டார்.

இப்போது மீண்டும் ஜெ. ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: