கொரோனா ஊரடங்கு: சென்னையில் முடக்கநிலையை அமல்படுத்தும் திட்டமுள்ளதா? தமிழக அரசு விளக்கம்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தமிழக அரசிடம் இல்லையென தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ - பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்படவில்லையென்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அதனைத் தடுக்க முயற்சிகள் ஏதும் எடுக்கப்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று கேள்வியெழுப்பியிருந்தது. அது தொடர்பாக இன்று (ஜூன் 12) பதிலளிக்கும்படியும் கூறியிருந்தது.

இந்த விவகாரம் இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி - சுரேஷ் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அரசின் கூடுதல் வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபல் ஆஜராகி விளக்கமளித்தார்.

அந்த விளக்கத்தில், "சென்னையில் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் 100 சதவீதம் இல்லை" என தெரிவிக்கப்பட்டது. நோய் பரவியுள்ள பகுதிகளில் மட்டும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நோய்பரவலைக் கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, அந்தப் பரிந்துரையின் அடிப்படையில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கு இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.

இதற்கிடையில், சென்னையை விட்டு வெளியேற இ - பாஸ் வழங்கப்படுவதில்லையன செய்திகள் வெளியாவது குறித்து நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் அது பொய்த் தகவல் எனத் தெரிவித்தார். தற்போதும் இ - பாஸ் வழங்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டுமென வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு, ஜூன் 15ஆம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் சில செய்திகள் வெளிவந்த நிலையில் முதல்வரின் இந்த ட்வீட் வெளிவந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: