தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்தது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்தது

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1982 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த 1982 பேரில் 1933 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமிருப்பவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வரும்போது சோதிக்கப்பட்டதில் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்கள்.

1982 பேரில் 1477 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆகவே சென்னையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 128 பேரும் காஞ்சிபுரத்தில் 26 பேரும் மதுரையில் 31 பேரும் திருவள்ளூரில் 92 பேரும் திருவண்ணாமலையில் 22 பேரும் தூத்துக்குடியில் 18 பேரும் விழுப்புரத்தில் 16 பேரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நீலகிரி, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில்தான் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லாத நிலை இருந்தது. ஆனால், இன்று திருப்பூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. இதில் எட்டு பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்த 18 பேரில் 17 பேர் வேறு தீவிரமான உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் என்றும் ஒரே ஒருவர் மட்டுமே வேறு நோய்களால் பாதிக்கப்படாமல், கொரோனாவால் உயிரிழந்தவர் என்றும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

38 வயதான அந்த நபர் சென்னையைச் சேர்ந்தவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் 15 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் செங்கல்பட்டையும் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். 4 பேர் பெண்கள், 14 பேர் ஆண்கள்.

தற்போது 18,281 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: