குஜராத்தில் அதிகமாக நிகழும் கொரோனா வைரஸ் மரணங்கள்: 'குஜராத் மாடல்' தோல்வியா?

  • நிதின் ஸ்ரீவத்சவா
  • பிபிசி
குஜராத்தில் கொரோனா மரணம் அதிகரிக்கக் காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

கடந்த மே 20-ம் தேதி பர்வீன் பானு மூச்சு விடச் சிரமப்பட்டார். உடனே அவரது மகன் அமீர் பதான் பர்வீனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

54 வயதான தனது தாய்க்கு சக்கரை நோய் மற்றும் இதய நோய் பிரச்சனைகள் இருந்ததால் தான் மிகுந்த கவலையடைந்ததாக பதான் கூறுகிறார். அகமதாபாத்தில் இவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கோம்டிபூர் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்திருந்தது பதானை மேலும் கவலையடைய வைத்தது.

தனது தாயை மருத்துவமனையில் சேர்க்க 30 மணி நேரமாக அலைந்தார் பதான். இரண்டு தனியார் மற்றும் ஒரு அரசு மருத்துவமனையில் படுக்கை இல்லை எனக் கூறி திரும்ப அனுப்பியுள்ளனர்.

இதனால் தாயை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அவரது உடல் நிலை மோசமடைந்ததால் மறுநாள் காலை இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அகமதாபாத் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், ஆக்சிஜன் அளித்துள்ளனர். மேலும் அன்று இரவு அவரை வென்டிலேட்டரில் வைத்துள்ளனர். ஆனால், ஒரு மணி நேரம் கழித்து அதிகாலை 1.29 மணிக்கு அவர் இறந்துள்ளார்.

அதன் பின்னர் வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு மருத்துவமனை பதில் அளிக்கவில்லை. ஆனால், தனது தாயை முன்னரே மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் அவர் பிழைத்திருப்பார் என பதான் கூறுகிறார்.

அகமதாபாத் அரசு மருத்துவமனையில் இதுவரை 490 கோவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் இந்த மருத்துவமனை, மோசமான நிலையில் இருப்பதாக விமர்சித்துள்ள குஜராத் உயர் நீதிமன்றம், கொரோனா பெருந்தொற்றை குஜராத் அரசு சரியாகக் கையாளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் குஜராத் அரசு மறுத்து வருகிறது.

இறப்பு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்?

குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தில் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நகராகவும் இது உள்ளது.

21,500 கொரோனா தொற்றுகளுடன் இந்தியாவில் நான்காம் இடத்தில் குஜராத் உள்ளது. ஆனால், இறப்பு விகிதத்தை பொறுத்தவரையில் இந்தியாவிலே அதிகபட்சமாக இங்கு 6.2 சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் இறப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ள நிலையில், குஜராத்தில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

அகமதாபாத் மருத்துவமனைகளில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது பற்றி குஜராத் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, இறந்தவர்களில் 80 சதவீத பேருக்கு ஏற்கனவே வேறு உடல்நல பாதிப்புகள் இருந்ததாக அரசு தெரிவித்தது.

ஆனால், குஜராத்தில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்குச் சரியான ஒரு காரணத்தைச் சொல்வது கடினம் என பொதுச் சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்ற நோய்களும் இருப்பது காரணமாக இருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால், குஜராத்தில் மட்டும் இந்த பிரச்சனை இல்லை. உதாரணமாக இந்தியாவிலே அதிகளவிலான சக்கரை நோயாளிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த கோவிட்-19 மரணங்களில் 60%க்கும் மேல் அகமதாபாத் சிவில் மருத்துமனையில் பதிவாகியுள்ளன.

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினரால்தான் கொரோனா பரவியது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

ஆனால், இதுவும் குஜராத்தில் மட்டும் இருக்கும் பிரச்சனையல்ல. கேரளாவுக்கு அதிகளவிலான வெளிநாட்டினர் வந்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து கூட அதிகமானவர்கள் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.

தொற்று அதிகரிப்பதற்கு இதனைக் காரணமாக குஜராத் அரசு கூறலாம். ஆனால், இறப்பு அதிகமாக இருப்பதற்கு இதனைக் காரணமாகக் கூறமுடியாது.

குறைந்த பரிசோதனை- நம்பிக்கையின்மை

''மக்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வருவது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்'' என அகமதாபாத் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்ஸ் சங்கத்தின் தலைவர் பரத் காத்வி கூறுகிறார்.

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளைச் சேர்க்க மறுக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க பலர் தயங்குகின்றனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் இருக்கும் குறைவான வசதிகள் மற்றும் சிகிச்சையின் மீது நம்பிக்கையின்மை போன்றவை காரணமாக இருக்கலாம்.

'' மக்கள் முன்வந்து கோவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள அச்சப்படுகிறார்கள்,'' என எம்ய்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். மக்களிடையே உள்ள இந்த அச்சமும் கொரோனா பரவ காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே சமயம், அகமதாபாத் நகரில் உள்ள பல பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகளையே அரசு செய்வதாக பொது சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

''குறிப்பாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சனையைச் சமாளிக்க அரசு போதிய கவனம் செலுத்தவில்லை,'' என பொருளாதார பேராசிரியர் கார்த்திகேய பட் கூறுகிறார்.

அகமதாபாத்தில் அதிக மக்கள் நெருக்கம் உள்ள 'ஓல்டு சிட்டி' பகுதியில் உள்ள 11 மண்டலங்களில் 10 மண்டலங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது.

இந்த பகுதியை நகரத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டித்தாலும், பாதிக்கப்பட்ட மண்டலங்களுக்கு உள்ளேயே வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என அவர் கூறுகிறார்.

''மக்கள் நெருக்கமாக வாழும் இந்த பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமற்றது'' என்கிறார் சமூகவியலாளர் கவுராங் ஜெனி.

அறிகுறி தெரிந்த உடனடியாக மருத்துவமனைகளில் சேர வேண்டும் என விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததே இப்பகுதியில் கொரோனா வேகமாகப் பரவ காரணம் என அப்சர்வர் அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

'போதிய வசதிகள் இல்லை'

இந்த பெருந்தொற்றை சமாளிக்க மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை என வைரஸ் பாதிப்பிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் கூறுகின்றனர்.

''பல மணி நேரம் காத்திருப்புக்குப் பின்னரே எனக்குப் படுக்கை கிடைத்தது,'' என அகமதாபாத் அரசு மருத்துவமனையின் கோவிட்-19 வார்டில் 10 நாட்கள் சிகிச்சை பெற்ற லட்சுமி பார்மர் கூறுகிறார்.

'' ஆரம்பத்தில் காலை உணவுகள் தரப்படவில்லை. இது குறித்து உள்ளூர் அரசியல்வாதியிடம் புகார் அளித்தேன். கோவிட்-19 வாட்டில் இருந்த 40-50 நோயாளிக்கு இரண்டு கழிவறைகள் மட்டுமே இருந்தன,'' என்கிறார் 67 வயதான லட்சுமி.

குஜராத் மாநிலத்தில் உள்ள மோசமான மருத்துவ உள்கட்டமைப்புகளை கொரோனா வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

குஜராத்தில் 1000 பேருக்கு 0.3 மருத்துவமனை படுக்கைகள் மட்டுமே உள்ளன. தேசிய அளவில் இந்த விகிதம் 0.55 ஆக உள்ள நிலையில், தேசிய அளவை விட குஜராத்தில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளன என ப்ரூக்கிங்ஸ் அமைப்பின் சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், இங்கு மருத்துவமனை படுக்கைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது.

'' எங்கள் கடமைகளிலிருந்து தவறியாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது மாநிலத்தில் 23 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் எங்களது மருத்துவ ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான சிறந்த மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளோம். தொற்று தற்போது மெதுவாகக் குறைந்து வருகிறது,'' என குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் நிதின்பாய் பட்டேல் கூறுகிறார்.

ஆனால், தொற்றை கட்டுப்படுத்த குஜராத் அரசிடம் போதிய அவசாகம் இருந்தது எனப் பலர் விமர்சிக்கின்றனர். ஏனெனில் நாடு முழுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதாவது மார்ச் 19-ம் தேதி அன்றே குஜராத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்டது.

''அரசு இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆரம்பத்தில் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் என அரசு இயந்திரம் முழுவீச்சில் செயல்பட்டது. ஆனால், காலப்போக்கில் சோர்வடைந்துபோனது,'' என்கிறார் அகமதாபாத் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்ஸ் சங்கத்தின் தலைவர் பரத் காத்வி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: