கொடுமணல் அகழாய்வில் கண்டறியப்பட்டவை பழங்கால ஆஃப்கன் மொழி எழுத்துகளா?

தொல்லியல் ஆராய்ச்சியில் கிடைத்த மண் பொருள்

பட மூலாதாரம், TN Archeology Department

தமிழகத் தொல்லியல் துறையினர் சார்பில் ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் பழங்கால ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பேசிய மொழியின் எழுத்து பொறிக்கப்பட்ட மண் பொருட்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியன.

இதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டினரோடு நேரடியாக வனிகத் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவல்களை முற்றிலுமாக மறுக்கின்றனர் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் மூத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.

நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள கொடுமணலில், மே 27ஆம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஆராய்ச்சி குழுவினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், TN Archeology Department

இதில் சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள், பளிங்கு கற்கள், நாணயங்கள், முதுமக்கள் தாழி, சுடுமண் அடுப்பு, இரும்பு பொருட்கள் மற்றும் கொள்ளுப்பட்டறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிடைக்கப்பெற்ற மண் பொருட்களில் இருக்கும் எழுத்துகள் குறித்து உரிய ஆராய்ச்சிக்கு பின்னர்தான் அவை எந்தமொழியைச் சேர்ந்தவை என தெரியவரும் என்று கூறுகின்றனர் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள்.

இதுகுறித்து பிபிசி தமிழின் மு. ஹரிஹரனிடம் பேசிய கொடுமணல் அகழ்வாராய்ச்சியின் இயக்குநர் ஜெ. ரஞ்சித், "கொடுமணலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் மற்றும் பிற தகவல்கள் உரிய ஆராய்ச்சிக்கு பின்னர்தான் தெரிய வரும். ஆனால், தற்போது கிடைத்துள்ள பொருட்களை ஆராயும்போது, இந்த பகுதியில் மக்கள் நாகரிகம் இருந்ததும், தொழிற்கூடங்கள் மற்றும் வர்த்தகம் நடைபெற்றதும் உறுதியாகியுள்ளது."

"2012ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன. இம்முறை, பல்வேறு வடிவம் மற்றும் அளவிலான இரும்பு, எஃகு பொருட்கள் மற்றும் நெசவுத் தொழிலுக்கான பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே, பண்டைய காலத்தில் இப்பகுதி வர்த்தகத்திற்கான முக்கிய நகரமாக விளங்கியது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது," என தெரிவித்தார்.

பட மூலாதாரம், TN Archeology Department

செப்டம்பர் மாத இறுதிவரை நடைபெறவுள்ள அகழாய்வுப் பணியில் மேலும் பல பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொடுமணல் பகுதியில் சர்வதேச வர்த்தகம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருந்தும். அவை நேரடி வர்த்தகமாக இருந்ததா என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்கின்றனர் மூத்த ஆராய்ச்சியாளர்கள்.

பட மூலாதாரம், TN Archeology Department

"கொடுமணலுக்கும் முசிறிக்கும் வர்த்தக தொடர்பு இருந்துள்ளது. முசிறியிலிருந்து மற்ற நாடுகளுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதற்கான குறிப்புகள் தமிழ் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் உள்ளன," என்கிறார் மூத்த தொல்லியல் ஆய்வாளர் 'கொடுமணல்' ராஜன்.

அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்களை ஆராய்ச்சி செய்து, பிற நாட்டு மொழிகள் எழுதப்பட்டிருப்பது உறுதியானால் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரைப் போன்று கொடுமணலும் தொல்லியல் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: