'கொரோனா தேவிக்கு' தினமும் பூஜை செய்து வழிபடும் கேரள நபர்

Kerala man builds a shrine for 'Corona Devi' to ward off COVID-19 pandemic

முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அதன் இணைய பக்கங்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை : 'கொரோனா தேவி'க்கு தினமும் பூஜை செய்து வழிபடும் கேரள நபர்

உலகம் முழுதும் கொரோனா வைரஸைக் கண்டாலே கடும் அச்சம் நிலவிவருகிறது, தடுப்பு மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் என்று இதை ஒழிக்க மருத்துவ அறிவியல் துறை பாடுபட்டு வரும் நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர் கொரோனா தேவி என்று தன் பூஜை அறையில் கொரோனா பிம்பத்தை வழிபட்டு வருவதாக கூறுகிறது இந்து தமிழ் திசை செய்தி கூறுகிறது.

கடக்கல்லில் உள்ள அனிலன் என்பவர் தனது இந்தப் பழக்கத்தை தன் வழியிலான விழிப்புணர்வுப் பிரசாரம் என்கிறார்.

அவர் கூறும்போது, “கொரோனா வைரஸை பெண் கடவுளாக வணங்குகிறேன் தினமும் அர்ச்சனை செய்து பூஜை செய்கிறேன். இது எதற்காக என்றால் கொரோனா செயல்வீரர்களான சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருந்து, தடுப்பூசி கண்டுப்பிடிப்பில் இறங்கியிருக்கும் விஞ்ஞானிகளுக்காகவும்தான்” என்கிறார்.

நெட்டிசன்கள் இவரைக் கடுமையாக கிண்டல் செய்தும், விமர்சித்து வந்தாலும் அசருவதாக இல்லை அனிலன். ”இது என்னுடைய தனிவழி, விழிப்புணர்வு வழி, ” என்கிறார் அவர்.

தினமணி : "இந்தியாவில் நவம்பர் மாதம் கொரோனா தொற்று உச்ச நிலையை எட்டும்"

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நவம்பர் மாத மத்தியில் உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகள் மற்றும் உயிர் காக்கும் சுவாசக் கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வில் தெரியவந்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் அமைக்கப்பட்ட செயல்பாடுகள் ஆராய்ச்சிக் குழு ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையை குறைக்க உதவியதோடு, தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கால அவகாசத்தையும் அளித்தது.

இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள், வருகிற நவம்பர் முதல் வாரம் வரையிலான தேவையைப் பூா்த்தி செய்யக்கூடிய அளவில்தான் இருக்கும்.

அதன் பிறகு, பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்பதால் தனிமைப்படுத்தலுக்கான படுக்கைகள் 5.4 மாதங்களுக்கும், ஐசியு படுக்கைகள் 4.6 மாதங்களுக்கும், உயிர்காக்கும் கருவிகள் 3.9 மாதங்களுக்கும் தட்டுப்பாட்டுடன் இருக்கும்.

இருந்தபோதும், இந்தப் பற்றாக்குறை என்பது பொதுமுடக்கம் மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் இருந்ததைக் காட்டிலும் 83 சதவீதம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் உதவும் என்றபோதும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தனிமைப்படுத்தப்படுபவர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை கொரோனா தாக்கத்தை குறைக்க முடியும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா : பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பரபங்கி எனும் மாவட்டத்தில், கிலோ கணக்கிலான மாட்டுக்கறி வைத்திருந்த 7 பேரை போலீஸார் பிடித்துள்ளனர்.

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் பிடிபட்டதாக மாவட்ட எஸ்பி அர்விந்த சாருவேதி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஏழு பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: