சென்னையில் கொரோனா உச்சகட்டம்; தளர்வுகளைக் கட்டுப்படுத்த மருத்துவக் குழு பரிந்துரை

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

சென்னையில் உச்ச கட்டத்தில் கொரோனா பரவல் இருப்பதாக தமிழக முதலமைச்சரிடம் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. உடனடியாக தளர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளதாக அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்ப் பரவல் தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். கொரோனா பரவல் துவங்கிய பிறகு ஐந்தாவது முறையாக நடக்கும் கூட்டம் இது.

இந்தக் கூட்டத்தில் சுமார் 10 மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர். மருத்துவர்கள் குகானந்தம், ராமசுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் நேரில் கலந்துகொண்ட நிலையில், சௌமியா சுவாமிநாதன், பிரதீப் கவுர் போன்றவர்கள் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் குகானந்தம், சென்னையில் நோய்த் தொற்று உச்சகட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். "இந்தக் கூட்டத்தில் நோய்த் தொற்றைத் தடுப்பது பற்றிப் பேசினோம். எல்லா நோய்களுமே உச்சத்திற்குச் சென்றுதான் குறையும். இப்போது உச்சத்திற்குச் சென்றுள்ளது. விரைவில் குறையும் எனக் கருதுகிறோம். அதிகமாக சோதனைகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். "

"இப்போது அதன்படி கூடுதலாகச் சோதனைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக சென்னை மாநகரத்தில் சோதனைகள் அதிக அளவில் செய்யப்படுகின்றன. சென்னையில் மட்டும் 17 ஆயிரம் படுக்கைகள் தயாராக இருக்கின்றன."

"மருத்துவக் கல்லூரிகளில் ஐந்தாயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் என 12,500 புதிதாக பேர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக சொன்னார்கள். செவிலியர்கள் மட்டும் 2,000 பேர் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்."

"இந்த நோயைப் பொறுத்தவரை, இரத்த அழுத்தம், புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சனை, நீரிழிவு போன்ற தொற்றா வியாதிகள் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இறப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே சோதனைகளைக் கூடுதலாகச் செய்து, இறப்பைக் குறைக்க முயற்சிக்கிறோம். நோயைத் தடுப்பதில் மக்களின் பங்கேற்பு மிக முக்கியம்."

"சென்னையில் நோய்ப் பரவல் அதிகமிருக்கும் நிலையில், அது குறித்து ஒவ்வொரு வார்டாக ஆராய்ந்தோம். மருத்துவ வசதிகள் என்ன இருக்கிறது எனப் பார்த்தோம். தற்போது சென்னையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. புறநகர் மருத்துவமனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன," என குகானந்தம் தெரிவித்தார்.

அரசிடம் மருத்துவர் குழு அளித்த பரிந்துரைகள் என்னென்ன எனக் கேட்டபோது, "தளர்வுகளை இறுக்கமாக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறோம். அதனை அரசு பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது என்றார் குகானந்தம்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொற்று நோய் நிபுணர் ராமசுப்ரமணியம், "கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அப்படி அதிகரிக்கும்போது சாவுகளும் அதிகரிக்கும். இது எதிர்பார்க்கப்பட்டதுதான். சோதனைகளை அதிகரிக்க வேண்டும், மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும் என வல்லுனர் குழு அளித்த ஆலோசனைகளை அரசு தொடர்ந்து கடைபிடித்துவருகிறது."

"ஆனால், அரசு மட்டும் முயற்சிப்பதால் நோய்த் தொற்று குறையாது. நாம் எல்லோருமே இதனைச் செய்ய வேண்டும். முகக் கவசம் அணிவது, எச்சில் துப்பாமல் இருப்பது, கூட்டம் சேராமல் இருப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பரவலைக் கட்டுப்படுத்துவது கடினம்; மூன்று மாதம் கழித்து இரண்டாவது அலைகூட வரலாம்."

"கொரோனா பரவல் குறித்து எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆனால், அதற்கேற்றபடி அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதில்லை. மிகக் குறைவான அறிகுறிகள் இருந்தாலும் அலட்சியப்படுத்தக்கூடாது. உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ளுதல் மிக அவசியம்."

"நோய்வந்துவிட்டால், வசதியானவர்கள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் அணியலாம். வீட்டிலேயே இருக்க வேண்டும். ஆக்ஸிஜனை உள்வாங்கும் அளவு 94 சதவீதத்திற்கு குறைந்தால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்," எனத் தெரிவித்தார்.

தற்போது என்ன அறிவுரையை மருத்துவக் குழு வழங்கியுள்ளது எனக் கேட்டபோது, "தளர்வுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை எந்தப் பகுதியில் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இனி இந்த விவகாரத்தில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும்" என குகானந்தம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: