கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு; 1,843 பேர் பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images
(கோப்புப்படம்)
கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் 44 பேர் பலியாகியுள்ளனர். 1,843 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,500ஐ கடந்துள்ளது.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ள 1,843 பேரில் 1,789 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 13 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மீதமுள்ளவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,344ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18,403 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 7,29,002ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20,678 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இன்று தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட 1,843 பேரில் 1257 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 120 பேர் செங்கல்பட்டை சேர்ந்தவர்கள். 39 பேர் காஞ்சிபுரத்தையும் 33 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள். ராணிப்பேட்டையில் 34 பேரும் தஞ்சாவூரில் 12 பேரும் திருவள்ளூரில் 50 பேரும் திருவண்ணாமலையில் 32 பேரும் தூத்துக்குடியில் 34 பேரும் திருநெல்வேலியில் 17 பேரும் வேலூரில் 20 பேரும் இந்நோய்த் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 33,244 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இன்று உயிரிழந்த 44 பேரில், 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 32 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 11 பேர் கொரோனா தவிர, வேறு எவ்வித நோயாலும் பாதிக்கப்படாதவர்கள். 10 பேர் ஐம்பது வயதுக்குக் குறைவானவர்கள். இவர்களில் நான்கு பேர் 40 வயதுக்குக் குறைவானவர்கள்.
இதற்கிடையில் சென்னையில் காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவை தடுக்க அரசு தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பது தவறான வாதம் எனக் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
"கொரோனாவை எதிர்கொள்வதில் தமிழ்நாடு சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளே இந்த நோயை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றன."
"தமிழ்நாட்டில் சரியான நடவடிக்கைகள் மூலமாக உயிர் காக்கும் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மிக அதிகமான அளவில் சோதனைகள் செய்கிறோம். அதனால், அதிகமான அளவில் நோயுற்றவர்களைக் கண்டுபிடிக்கிறோம். இன்றோடு 25,344 பேரை குணப்படுத்தியிருக்கிறோம். ஆகவே அரசு திணறிக்கொண்டிருக்கிறது என ஸ்டாலின் சொல்வது தவறான வாதம். அரசு திறமையாக செயல்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும், "எண்ணிக்கையை வைத்து அரசியலாக்க வேண்டாம். அரசு வெளிப்படையாக இருக்கிறது. சென்னையில் மட்டும் 1.85 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 17,500 படுக்கை வசதி தயாராக இருக்கிறது. இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறோம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் தயாராக இருக்கின்றன. தமிழ்நாடு முழுக்க 75 படுக்கை வசதிகள் தயாராக இருக்கின்றன. ஆகவே இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. எங்கேயுமே தாமதமும் இல்லை, தடையுமில்லை. இந்தப் பணிக்காக மு.க. ஸ்டாலின் யாரையாவது பாராட்டியிருக்கிறாரா? பாராட்டவிட்டாலும் விமர்சனங்கள் வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: