சுஷாந்த் சிங் ராஜ்புத் வாழ்வின் கடைசி சில மணிநேரங்கள்

  • மது பால் போரா
  • பிபிசி இந்திக்காக
சுஷாந்த் சிங் ராஜ்புத்

பட மூலாதாரம், Getty Images

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இளம் வயதிலே மரணமடைந்தது பாலிவுட் உலகில் மட்டுமல்ல, அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த சுஷாந்த் சிங் ஜூன் 14, ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆனால், கடந்த ஆறு மாதங்களாகவே அவர் மன அழுத்தத்திலிருந்ததாக கூறப்படுகிறது.

சுஷாந்த் சுங்கிற்கு மும்பையின் வேறு ஓரிடத்தில் சொந்த வீடு இருந்தாலும், பெரிய வீட்டில் வசிக்க வேண்டும் என விரும்பியதால் பாந்த்ரா பகுதியில் உள்ள வாடகை வீட்டுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு குடிபெயர்ந்துள்ளார்.

அந்த வீட்டில் அவரது மேலாளர், ஒரு நண்பர், சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்யும் நபர் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

சுஷாந்த் சிங் வீட்டில் வேலை செய்யும் நபர் காவல்துறை விசாரணையின் போது,'' ஜூன் 14ஆம் தேதி காலை 6:30 மணிக்கு சுஷாந்த் எழுந்தார், காலை 9 மணிக்கு மாதுளை ஜூஸ் குடித்தார். அதன் பின்னர் தனது சகோதரியிடமும், தன்னுடன் சேர்ந்த நடிப்பைத் துவங்கிய நடிகர் மகேஷ் செட்டியிடம் தொலைப்பேசியில் பேசினார்,'' எனக் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

அதன் பின்னர் தனது அறைக்குச் சென்று சுஷாந்த் சிங் கதவைச் சாத்தியுள்ளார். 10 மணிக்கு அவருக்கு காலை உணவளிக்க வீட்டுப் பணியாளர் கதவைத் தட்டியுள்ளார். ஆனால்,சுஷாந்த் கதவைத் திறக்கவில்லை.

இரண்டு மூன்று மணி நேரம் கழித்தும் சுஷாந்த் கதவைத் திறக்காததால், அவரது சகோதரியை மேலாளர் அழைத்துள்ளார்.

அவரது சகோதரி வந்த பின்னர் கதவை உடைந்து பார்த்தபோது, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்கு இடைபட்ட நேரத்தில் சுஷாந்த் இறந்திருக்கலாம் என காவல்துறை கூறுகிறது.

தங்களுக்கு மதியம் 2 மணிக்குத் தகவல் வந்ததாகவும், 2.30 மணிக்குச் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாலை 5.50 மணிக்கு சுஷாந்தின் உடல் முனைவர் ஆர்.என் கோப்பர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுஷாந்தின் உடலுக்குப் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசிய மும்பை ஒன்பதாவது மண்டலத்தின் காவல்துறை துணை ஆணையர் அபிஷேக் திரிமுகே,'' சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் சந்தேகத்துக்குரிய விதத்தில் எதுவும் இல்லை. உடற்கூராய்வு முடிந்த பிறகுதான் முழு விவரமும் தெரிய வரும்'' என கூறினார்.

அவருக்கு மூச்சடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.

மாலை ஏழு மணிக்கு சுஷாந்தின் குடும்பத்தினர் பிகாரில் இருந்து மும்பை வந்தனர். ஜூன் 15, திங்கட்கிழமை அவருக்கு இறுதிச் சடங்கு நடந்தது.

அவரது மரணத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அவரது அண்ணி ஒருவர் இறந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஒன்று விட்ட சகோதரரின் மனைவி சுதா தேவி என்பவர், திங்களன்று சுஷாந்தின் இறுதிச்சடங்குகள் மும்பையில் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே சமயத்தில், அவரது சொந்த ஊரான பிகார் மாநிலம் பூர்ணியாவில் உயிரிழந்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சுஷாந்த் ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்தபின் உணவு உட்கொள்வதை அவர் நிறுத்திக்கொண்டார் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: