காஷ்மீர்: தலைவர்களின் செயல்பாடே இல்லாமல் அரசியலும், ஜனநாயகமும் எப்படி இருக்கிறது? - ஓர் ஆய்வு

  • தில் நவாஸ் பாஷா
  • பிபிசி

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து அரசியல் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

மார்ச் 2015 இல், ஜம்மு-காஷ்மீரில் எதிரெதிர் சித்தாந்தங்களைக் கொண்ட பாஜக மற்றும் பிடிபி இணைந்து அரசமைத்தபோது, அது ஜனநாயகத்தில் ஒரு புதிய செயல்பாடாகப் பார்க்கப்பட்டது. ஜூன் 2018 இல், இந்தக் கூட்டணி உடைந்து, மாநிலம் மீண்டும் ஆளுநரின் ஆட்சியின் கீழ் சென்றது. 2018 டிசம்பரில் ஜனாதிபதியின் ஆட்சி இங்கு கொண்டுவரப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் தேர்தல்களை நடத்துவதற்கும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் கோரிக்கை எழுந்தது. ஆனால், டெல்லியில் மற்றொரு திரைக்கதை எழுதப்பட்டது. பின்னர் திடீரென 5 ஆகஸ்ட் 2019 அன்று, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து என்ற அரசியலமைப்புச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

அரசியலில் பரபரப்பாக ஈடுபட்டிருந்த தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 5 #க்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் ஒரு மாநிலம் என்ற அந்தஸ்தையும் இழந்து, டெல்லியிலிருந்து நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. சட்டமன்றமும் இல்லை, எனவே அரசியலின் மையம் எதுவும் மிச்சமில்லை.

இப்போது ஓராண்டுக்குப் பிறகு, காஷ்மீரில் ஜனநாயகம் மிச்சமிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஜனநாயகம் என்றால் மக்களின் ஆட்சி, அதாவது தங்களது பிரதிநிதி யார்? சட்டங்களை யார் உருவாக்குகிறார்? யார் அரசாங்கத்தை நடத்துகிறார் என்பதை மக்கள் தேர்வு செய்கிறார்கள்.

காஷ்மீரில் ஜனநாயகம் இப்போது இறுதி மூச்சை சுவாசித்து வருவதாகவும், அரசியல் செயல்முறை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் மூத்த பத்திரிகையாளரும் காஷ்மீர் டைம்ஸ் செய்தித்தாளின் நிர்வாக ஆசிரியருமான அனுராதா பசீன் கருதுகிறார்.

தலைவர்கள் கைதும், நிலவும் அமைதியும்

கடந்த ஒரு வருடத்தில் காஷ்மீரில் கனத்த மௌனம் நிலவியதாக அனுராதா பசீன் கருதுகிறார், அதன் பிறகு சிலர் மெதுவாகப் பேசத் தொடங்கினர், ஆனால் பிரதான அரசியலில், இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் தலைவர்கள் இன்னும் காவலில் உள்ளனர் அல்லது அவர்களின் கைகளும் கண்களும் கட்டப்பட்டுள்ளன.

"சிலர் பேச அனுமதிக்கப்படுகிறார்கள், சிலர் பேச அனுமதிக்கப்படவில்லை," என்று அவர் கூறுகிறார். பேச அனுமதிக்கப்படுபவர்களும் ஒரு அளவிற்குத் தான். முக்கிய பிரச்சினை காஷ்மீரில் இருந்து 370வது பிரிவை அகற்றியது, அது குறித்து எந்த பேச்சும் இல்லை. அரசியல் செயல்பாடு தடைசெய்யப்படும் வரை, அதன் விவாதம் மட்டுப்படுத்தப்படும். சிலருக்கு சில பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டால், ஜனநாயகம் எவ்வாறு உயிர்வாழும்? இதேபோன்ற சூழ்நிலைகள் நிலவினால், அரசியல் செயல்பாடு தொடங்கும் என்ற நம்பிக்கை இல்லை. " என்று கூறுகிறார் அவர்.

அர்த்தமற்றவை

ஸ்ரீநகரில் உள்ள பிபிசி நிருபர் ரியாஸ் மஸ்ரூரும் காஷ்மீரின் மிகப்பெரிய பிரச்சினை பற்றி பேசப்படாவிட்டால், அரசியல் அல்லது ஜனநாயகம் என்பவை அர்த்தமற்றவை என்று கூறுகிறார்.

மேலும், ரியாஸ் கூறுகையில், "காஷ்மீர் அரசியலின் மிகப்பெரிய பிரச்சினை, ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்புச் சலுகை, இதைப் பற்றி இனி பேச முடியாது. ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஒரு கட்டடம் முற்றாக இடிக்கப்பட்டதைப் போல இது நடந்தது. இந்திய ஒன்றியத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சுயாட்சி அல்லது சிறப்பு அந்தஸ்தைப் பேணுவது காஷ்மீர் அரசியலின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது." என்கிறார்.

ஜனநாயகம் எப்படிக் காப்பாற்றப்படும்?

காஷ்மீரின் பெரிய தலைவர்கள் இந்த விவகாரத்தை வைத்து தான் அரசியல் செய்து வந்ததாகவும், சலுகை நீக்கப்பட்டபோது, பெரிய தலைவர்கள் அனைவரும் முற்றிலும் மௌனப்படுத்தப்பட்டதாகவும் ரியாஸ் கூறுகிறார். அவர்கள், ஒன்று காவலில் வைக்கப்பட்டார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இங்குள்ள தலைவர்களால் அதை எதிர்க்கக்கூட முடியவில்லை. அவர்களின் குரல் வளை நெறிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் யார் அரசியல் செய்வார்கள், அரசியல் எப்படி செயல்படும்? இங்கு ஜனநாயகம் எவ்வாறு நிலைத்திருக்கும்? '

370வது பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து, காஷ்மீரின் நிலைமை சாதாரணமாகி வருவதாகவும், தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இந்திய அரசு வாதிட்டு வருகிறது.

அரசாங்கத்தின் இந்தக் கூற்றுக்கு, "காஷ்மீரில் தீவிரவாதத்திற்குக் காரணம் 370வது பிரிவு என்று அரசு கூறுகிறது. ஆனால், அது அகற்றப்பட்டதால், தீவிரவாதம் முடிவுக்கு வரவில்லை, மாறாக அதிகரித்துள்ளது. எந்தவொரு தரவையும் பாருங்கள், தீவிரவாதம் அதிகரித்தது தெரியும்." என்று அனுராதா பசீன் கூறுகிறார்.

தீவிரவாதம் ஒழியாது

தீவிரவாதிகளைக் கொல்வதன் மூலம் மட்டுமே தீவிரவாதம் முடிவுக்கு வராது என்று பசீன் நம்புகிறார்.

150க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதால், தீவிரவாதம் குறைந்து வருகிறது என்று அரசாங்கம் அர்த்தம் கற்பிக்கிறது. ஆனால் அதே அளவுக்குத் தீவிரவாதிகள் அதிகரித்தும் வருகின்றனர். பல இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர், சிலர் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் ஊக்குவிக்கப்படும் என்று நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கூறியுள்ளனர், இதற்காகப் பஞ்சாயத்து மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அரசியல் தலைவர்களின் புதிய அலை உருவாகும்.

"கடந்த இரண்டு மாதங்களுக்குள் இரண்டு பஞ்சாயத்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒருபுறம் பஞ்சாயத்து மட்டத்தில் அரசியலை வலுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பேசுகிறது, மறுபுறம் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை" என்று அனுராதா பசீன் கூறுகிறார்.

ஜம்மு-காஷ்மீரில் இந்த நாட்களில் அரசியல் ஆர்வலர்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளனர். செயல்படும் தலைவர்களும் கூட வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றனர்.

புதிய அரசியல் கட்சி

காஷ்மீரில் ஒரு புதிய கட்சி உருவாகியுள்ளது. இந்தக் கட்சியின் பெயர் 'அப்னா கட்சி'. இந்த கட்சியுடன் தொடர்புடைய பலர் முன்பு பி.டி.பி தொண்டர்கள் அல்லது அமைச்சர்களாக இருந்தனர். பி.டி.பி யிலிருந்து பிரிந்து இவர்கள் தங்கள் சொந்தக் கட்சியை உருவாக்கியுள்ளனர். அல்தாஃப் புகாரி அதன் தலைவர்.

புகாரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துள்ளார். அவரது குரல் நிச்சயமாகக் கேட்கப்படுகிறது, ஆனால் அவரது அரசியல் அவரது அறிக்கைகளை வெளியிடுவதோடும் அவற்றைச் செய்தித்தாள்களில் வெளியிடுவதோடும் மட்டுமே நிற்கிறது.

புகாரியின் கருத்துகள் சாலைகள் அமைப்பது அல்லது வேலைவாய்ப்பு பிரச்சினை பற்றி மட்டுமே, அவர் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அல்லது ஜனநாயக சுதந்தரம் பற்றிப் பேசுவதில்லை.

காஷ்மீரில் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் புதிய அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி வருகிறார்.

மறுபுறம், அனுராதா பசீன், "ஒவ்வொரு பிரச்சினையிலும் டெல்லியின் கட்டுப்பாடு இருக்கும் வகையில் ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்க நீங்கள் முயல்கிறீர்கள் என்றால், அத்தகைய அரசியல், ஜனநாயகத்துடன் இணைந்து பயணிக்க முடியாது. ஜனநாயக அரசியல் செயல்முறையைத் தொடங்க, எவ்வளவு கால தாமதம் ஆகிறதோ அந்த அளவுக்கு மக்களின் கோபமும் அதிகரிக்கும்." என்று கூறுகிறார்.

ராஜீவ் காந்தியின் காலத்திலிருந்தே காஷ்மீர் பள்ளத்தாக்கில், மக்களின் உணர்வுகளுக்கும் மத்திய அரசுகளின் கொள்கைகளுக்கும் இடையிலான மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சில சமயங்களில் முரண்பாடுகள் அதிகரித்தும் சில சமயங்களில் அடக்கப்பட்டும் வந்துள்ளன. ஆனால் அவை முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இப்போதுள்ள புதிய சூழலிலும் அது அடக்கப்பட்டே வருகிறது. முடிவுக்கு வரவில்லை.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 17 செப்டம்பர், 2020, பிற்பகல் 1:14 IST

அனுராதா பசீன் மேலும் கூறுகையில், "கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட முடிவுகளில் எந்தக் கட்டத்திலும் தங்கள் கருத்துக் கேட்கப்படவில்லை என்ற கோபம் காஷ்மீர் மக்கள் மத்தியில் உள்ளது. அந்த முடிவுகள் தவறா சரியா என்பது வேறு விஷயம். ஆனால், தாங்கள் அந்த முடிவில் எந்த பங்களிப்பும் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது அவர்களின் ஆதங்கம்" என்றும் குறிப்பிடுகிறார்.

"ஜனநாயகம் என்பது மக்கள் தேர்ந்தெடுத்த அவர்களது அரசு. அந்த அரசில் மக்களுக்கும் பங்கு உண்டு. காஷ்மீரில் இப்போது இதுபோன்ற நிலை இல்லை. காஷ்மீரில் பெரிய முடிவுகளை எடுப்பதற்கு ஆளுநருடன் இரண்டு மூன்று ஆலோசகர்கள் உள்ளனர். அரசின் முடிவுகளில் மக்களுக்குப் பங்கு இல்லை ". என்கிறார் ரியாஸ் மஸ்ரூர்.

பிரிவினைவாதமும் அரசியல் நீரோட்டமும்

ஜூன் 2018 இல், கவர்னர் ஆட்சியுடன் சட்டசபை கலைக்கப்பட்டது. இப்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தேர்தலுக்கான சாத்தியக் கூறுகள் இல்லை, எதிர்காலத்தில் ஜனநாயக முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், அதன் வடிவம் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.

"காஷ்மீரில் இந்தியாவை ஆதரித்த தலைவர்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாஜகவுடன் கூட்டணி அரசாங்கத்தை நடத்திய மெஹபூபா முப்தி இன்னும் விடுவிக்கப்படவில்லை. பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அதாவது பி.எஸ்.ஏ.வின் கீழ் அவரின் தடுப்புக்காவல் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மாநிலத்தில் ஜனநாயக அரசியல் எவ்வாறு சாத்தியமாகும்? " என்று ரியாஸ் கேள்வி எழுப்புகிறார்.

கடந்த 73 ஆண்டுகளில், காஷ்மீரின் அரசியல் இரண்டு சித்தாந்தங்களாகப் பிரிக்கப்பட்டது, ஒன்று பிரிவினைவாதம், மறுபுறம் இந்திய ஆதரவு. இப்போது பிரிவினைவாதிகளுக்கும் பிரதான அரசியல் செய்பவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், காஷ்மீரில் அரசியல் செயல்முறையை மீண்டும் தொடங்குவது மிகவும் எளிதானது அல்ல.

'கிராமங்கள் முதல் நகரம் வரை ஒவ்வொரு மட்டத்திலும் மக்களுடன் கட்சிகள் தொடர்பு கொண்டுள்ளன. ஆகஸ்ட் 5 முதல் அது இல்லாமல் போனது. இப்போது எந்த தலைவரும் இருப்பதாகத் தோன்றவில்லை. எந்தத் தலைவரும் யாரையும் சந்திப்பதில்லை. பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான உறவுகள் முற்றிலுமாக முறிந்துவிட்டன' என்று கூறுகிறார் ரியாஸ்.

காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சைபுதீன் சோஸ் முற்றிலும் சுதந்தரமாக இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் கூறியது. ஆனால் அவர் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

காஷ்மீரில் வன்முறை இருந்தது, தீவிரவாதம் இருந்தது, தனது கட்சித் தொண்டர்கள் பலரும் கொல்லப்பட்டனர், இருந்தபோதிலும், முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவளித்தார். ஆனால், அவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும்

இந்த நேரத்தில் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் பரஸ்பரம் நம்பிக்கை இல்லை என்றும் நம்பிக்கையைப் பெறாமல் ஜனநாயகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்றும் அனுராதா பசீன் கூறுகிறார்.

"காஷ்மீர் மக்கள் மத்திய அரசு மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர், காஷ்மீர் மக்களுக்கு முழுமையான பேச்சு சுதந்தரம் வழங்கப்படாவிட்டால், அந்த நம்பிக்கையைப் பெற முடியாது. குறைந்தபட்சம் உயர்மட்டத் தலைவர்களுக்குப் பேச்சு சுதந்தரம் வழங்கப்பட்டால் மட்டுமே நேர்மறை விளைவுகளை எதிர்பார்க்கமுடியும்." என்று அனுராதா பசீன் கூறுகிறார்.

"அரசியல்வாதிகள் ஆறு மாதங்களாக, ஒன்பது மாதங்களாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு வேறு வகையான அச்சம் இருக்கலாம். தலைவர்கள் மட்டுமல்லாமல், இங்குள்ள அதிகாரிகளும் ஒரு விசித்திரமான மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றனர். எந்தவொரு அதிகாரியும் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பதில்லை" என்று பசீன் கூறுகிறார்.

ஊடக சுதந்திரமும் வலுவான ஜனநாயகத்தின் அடையாளம். இந்த நேரத்தில் காஷ்மீரில் ஊடகங்களுக்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. செய்தி சேகரிப்பு மிகவும் கடினமாக உள்ளது.

"மூத்த ஊடகவியலாளர்கள் எந்தவொரு அதிகாரியையும் எந்த வகையிலும் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அது முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. அத்தகைய சூழலில் ஜனநாயகம் எவ்வாறு உயிர்ப்புடன் இருக்க முடியும்?" என்று கேட்கிறார் அனுராதா பசீன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: