ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: பலருக்கு கொரோனா - நிகழ்ச்சியின் நேரம் சரி தானா?

  • சல்மான் ரவி,
  • பிபிசி நிருபர்

உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், நாளை (ஆகஸ்ட் 5ஆம் தேதி) நடக்கவிருக்கும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளை ஆலோசித்து வருகிறது.

அயோத்தி மாவட்டத்திலேயே கூட, தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர்.

அமித் ஷாவுக்கு கொரோனா

தொற்றுநோய் காரணமாக, ஆகஸ்ட் 5 ஆம் தேதி 150 பேர் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் காலத்தில் தனி நபர் இடைவெளி பின்பற்றுவது எளிதாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், இப்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த எண்ணிக்கையை மேலும் குறைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது.

அண்மைக் காலங்களில் தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அமித் ஷா கோரியுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் அவருடன் தொடர்பில் இருந்தாரா என்ற கேள்வி எழுகிறது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதாவின் தலைவர்களும் அவருடன் தொடர்பில் இருந்தனரா என்ற கேள்வியும் எழுகிறது.

ஒரு நாள் முன்பு தான், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உத்தர பிரதேச அரசாங்கத்தில் ஒரு அமைச்சர் உயிரிழந்துள்ளார். பாரதீய ஜனதா மாநிலத் தலைவரும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் பி.எஸ். எடியூரப்பா ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த இருவரையும் தவிர, ஒரு ஆளுநரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

அத்வானி, ஜோஷி மற்றும் உமா பாரதி

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி, தாம் அயோத்தி செல்லவிருப்பதாகவும் ஆனால் விழா நடைபெறும் இடத்திற்கு செல்லப்போவதில்லை என்றும் ட்வீட் செய்துள்ளார். அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் மக்களின் ஆரோக்கியம், குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோதியின் ஆரோக்கியம் குறித்து தாம் அக்கறை கொண்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

அவர் போபாலில் இருந்து அயோத்திக்கு ரயிலில் பயணம் மேற்கொள்ளவிருப்பதால், தொற்று நோய்க் காலத்தில் செல்வதால் அவர் அந்த இடத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்றும் சரயு ஆற்றின் கரையில் வேறு ஏதேனும் ஒரு இடத்தில், இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்யவிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

ராம் ஜன்மபூமி இயக்கத்துக்கு வித்திட்ட பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது இவர்களிருவரும் அயோத்திக்குச் செல்ல மாட்டார்கள்.

பிபிசியுடன் பேசிய ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ராவின் செய்தித் தொடர்பாளர் அனில் மிஸ்ரா, இந்த நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் வருவார்கள் என்பது குறித்த ஆலோசனை நடந்து வருவதாகத் தெரிவித்தார். விழாவிற்கு 150 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர், இப்போது அந்த எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். ஆலோசனை நடந்து வரும் சூழலில் விழாவில் கலந்து கொள்ளவுள்ளவர்களின் எண்ணிக்கையை இப்போது உறுதியாகக் கூற முடியாது என்று அவர் தெரிவிக்கிறார்.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் கூறுகிறார்.

நிர்மோஹி அகாடாவின் அட்சேபம்

அடிக்கல் நாட்டு விழாவிற்குக் குறிக்கப்பட்டுள்ள நேரம், இதற்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியவை குறித்து அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, ராம ஜென்ம பூமி இயக்கத்தில் முக்கிய அங்கமான நிர்மோஹி அகாடாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

கோயில் கட்டுவதற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட நிலையில், கோயில் கட்டப்படுவது உறுதி என்றாகிவிட்டது என்று கூறிய ராஷ்டிரிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜா, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்நிகழ்வு மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறுகிறார்.

அவர் பிபிசியிடம் உரையாடிய போது, "கோயில் அங்கு தான் கட்டப்படும் என்று நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த சூழ்நிலையில், தொற்றுநோய்களின் இந்த காலகட்டத்தில், ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் கூடிவருவதும் நல்லதல்ல." என்று தெரிவித்தார்.

கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் நிர்மோஹி அகாடாவும் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, அகாடாவின் ஒரு உறுப்பினர் அறக்கட்டளையின் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால் நிர்மோஹி அகாடா செய்தித் தொடர்பாளர் கார்த்திக் சோப்ரா, பிபிசியுடன் பேசியபோது, "இந்த நிகழ்வு ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சி மற்றும் தொழிலதிபர்களுக்கென்றே மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

"நிர்மோஹி அகாடாவிலிருந்து அரசு தன்னிச்சையாகவே பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்தது. அதில் அகாடாவைக் கலந்தாலோசிக்கவில்லை. இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் புறம்பானது" என்று கார்த்திக் சோப்ரா கூறுகிறார்.

1866 ஆம் ஆண்டு முதல், நீதிமன்றத்தில் ராமர் கோயிலுக்காகச் சட்டப் போரில் ஈடுபட்ட நிர்மோஹி அகாடாவுக்கே அடிக்கல் நாட்டும் உரிமையும் வழங்கப்படவேண்டும் என்று அந்த அமைப்பு கோருகிறது. மேலும், அனைத்துக் கிரகங்களுக்கும் முன்னதாக விளங்கும் சூரிய பகவானின் தங்க விக்கிரகம் தான் முதலில் நிறுவப்படவேண்டும் என்பதும் அந்த அமைப்பின் கோரிக்கையாகவுள்ளது.

ஆனால் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிகழ்விற்குக் குறிக்கப்பட்டுள்ள நேரம் மதியம் 12 மணி 15 நிமிடம் 15 வினாடியிலிருந்து மொத்தம் 32 விநாடிகள் மட்டுமே ஆகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: