அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: யாருக்கு அழைப்பு? யாருக்கு வருத்தம்?

  • ஃபைசல் மொஹம்மத் அலி
  • பி பி சி நிருபர், தில்லி

ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், திங்கள்கிழமை பிற்பகலில், 'இந்த நிகழ்ச்சியை இன்னும் பிரமாண்டமாக்க விரும்பினாலும், கொரோனா தொற்று நோய் காரணமாக, ஆகஸ்ட் 5 ஆம் தேதி அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில், இந்திய மண்ணில் பிறந்த 36 முக்கிய மரபுகளைச் சேர்ந்த 135 சாதுக்கள் மற்றும் சில முக்கியமான நபர்கள் உட்பட சுமார் இருநூற்று ஐம்பது பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.' என்று அறிவித்திருக்கிறார்.

அடிக்கல் நாட்டு விழாவில், பாபர் மசூதி வழக்கின் வழக்குரைஞரான இக்பால் அன்சாரி மற்றும் அயோத்தியில் வசிக்கும் பத்மஸ்ரீ முகமது ஷெரீப் ஆகியோருக்கும் அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளதாகக் கூறியதோடு, அயோத்தியுடனான சீதாவின் ஜனக்பூரின் பண்டைய உறவு காரணமாக,நேபாளத்தின் ஜானகி கோயிலைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மறுபுறம், ராம் மந்திர் இயக்கத்துடன் நீண்டகாலமாகத் தொடர்பு கொண்ட பலர் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்படவில்லை, கொரோனா காரணமாக, குறைவான எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே என்றாலும், அழைக்கப்பட்டவர்கள் பட்டியல் குறித்த பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. பிரதமர் மோதி அடிக்கல் நாட்டவுள்ளார். ஆனால், சிறப்பு விருந்தினராக ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொள்வார்.

புதனன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட வேளையில், மேடையில், சம்பத் ராய் தவிர மற்ற பலரும் காணப்பட்டனர். ஆனால், தீர்த்த க்ஷேத்ராவின் தலைவர் தவத்திரு நிருத்யகோபால் தாஸ் மேடையில் காணப்படாதது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் மிகப்பெரிய அகாடாக்களில் ஒன்றான மனி ராமதாஸ் ஜி அமைப்பின் பீடாதிபதி, தவத்திரு நிருத்ய கோபால் தாஸ், பல ஆண்டுகளாக ராம ஜென்ம பூமி இயக்கத்தின் அங்கமாக இருப்பதுடன், இந்த அறக்கட்டளையின் தலைவராகவும் பல ஆண்டுகள் இருப்பவர். ஆனால், அண்மைக் காலங்களில் இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை இவர் மிகவும் அரிதாகவே வெளியிடுகிறார். நிருத்யா கோபால் தாஸ் வி.எச்.பி. உடன் தொடர்புடையவர், ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் அல்லது வி.எச்.பி.யின் உறுப்பினராகவோ அல்லது தலைவராகவோ இருந்ததில்லை.

ராமர் கோயில் கட்டுமானத்திற்காக அரசாங்கம் அமைத்துள்ள அமைப்பு தான் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை. அதன் உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் அனில் மிஸ்ரா, தவத்திரு நிருத்யகோபால் தாஸ் அதிகம் காணப்படாதது குறித்து நடந்து வரும் விவாதங்கள் பற்றி பிபிசியுடன் உரையாடிய போது, "ஊடகங்கள் பல்வேறு வகையான சர்ச்சைகளை உருவாக்குகின்றன. நிருத்யகோபால் தாசுக்கு நடப்பதில் சிரமம் இருப்பதால், அவர் தனது ஆசிரமத்திலேயே இருந்தார்" என்றார்.

அயோத்தி மற்றும் இந்துத்துவா குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ள தீரேந்திர ஜா, "ராமர் கோயில் போராட்ட காலத்தின் தரமற்ற செயல்பாடுகளின் காலம் முடிந்துவிட்டது, இப்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சட்டப்பூர்வமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தனது கட்டுப்பாட்டின் கீழ் அனைத்தையும் கொண்டுவர நினைக்கிறது. அதன் முகம் தான் சம்பத் ராய்" என்று கூறுகிறார்.

விஸ்வ இந்து பரிஷத் என்பது ராஷ்டிரிய சுயசேவக் சங்கத்தின் ஒரு பகுதியாகும், இது சங்கத்தின் மொழியில் குடும்ப அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. விஸ்வ இந்து பரிஷத்தின் துணைத் தலைவரான சம்பத் ராய், கோயில் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பாபர் மசூதி நிலத்தை ராம ஜென்மபூமிக்கு வழங்கவும், ராம் ஜன்மபூமி வளாகத்தை விட்டுத் தனியாக ஐந்து ஏக்கர் நிலத்தை மசூதிக்கு வழங்கவும், ராமர் கோயில் கட்ட மூன்று மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்கவும் 2019 நவம்பர் 9 ஆம் தேதி ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

பிரதமர் நரேந்திர மோதி 2020 பிப்ரவரி 5 ஆம் தேதி மக்களவையில், நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ராமர் கோயில் கட்ட, ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை என்ற தன்னாட்சி அமைப்பை அமைப்பதாக அறிவித்தார்.

உரிமை கோரும் மூன்று அமைப்புகள்

அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோதி கூறினார். ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட 15 உறுப்பினர்கள் உள்ளனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குச் சில நாட்களுக்குப் பிறகு,கோயிலின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறித்து, ராம ஜென்மபூமி அறக்கட்டளை, ராமால்யா அறக்கட்டளை மற்றும் கோயில் கட்டுமான அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் தத்தம் கருத்துக்களை வெளிப்படுத்தியும் உரிமைக் குரல்களை எழுப்பியும் வருகின்றன.

ராம ஜென்மபூமி அறக்கட்டளை விஸ்வ இந்து பரிஷத் (ஆர்.எஸ்.எஸ்) உடன் தொடர்புடையது மற்றும் கோயில் கட்டுமானம் குறித்த செயல்பாடுகளில் 1990 களில் இருந்தே செயல்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் முயற்சியின் பேரில் ராமால்யா டிரஸ்ட் உருவாக்கப்பட்டது மற்றும் துவாரகாபீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்தா உட்பட பல சாதுக்களையும் உள்ளடக்கியது.

மூன்றாவது அமைப்பான கோயில் கட்டுமான அறக்கட்டளையின் எந்தவொரு நபருக்கும் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்தக்ஷேத்ரா அறக்கட்டளையில் எந்தப் பிரதிநிதித்துவமும் கிடைக்கவில்லை. கோயில் கட்டுமானத்துடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு மட்டுமே அல்ல என்றும் இந்த அமைப்பு கோரி வருகிறது.

ராம ஜென்ம பூமிக்காக பல பதிற்றாண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்மோஹி அகாடா மற்றும் இந்து மகாசபை, கட்டமைக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தங்கள் உரிமைக்காக வாதிட்டு வருகின்றன.

நிர்மோஹி அகாடாவின் தீனேந்திர தாஸ் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் அங்கம் வகிக்கிறார். ஆனால் நிர்மோஹி அகாடா செய்தித் தொடர்பாளர் கார்த்திக் சோப்ரா, பிபிசி நிருபர் சல்மான் ராவியிடம் ஒரு உரையாடலில் அகாடாவுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் அகாடாவின் பிரதிநிதி அல்ல என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சி மத்திய மற்றும் மாநில அரசுகளால், ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி, பாரதிய ஜனதா மற்றும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கார்த்திக் சோப்ரா குற்றம் சாட்டினார்.

சிவசேனாவின் நிலைப்பாடு

சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்று செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது. உத்தவ் தாக்கரே கடந்த சில ஆண்டுகளில் பல முறை அயோத்திக்கு சென்று வந்துள்ளார். ராமர் கோயில் இயக்கம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல என்றும் தங்கள் கட்சித் தலைவர் அயோத்தி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவரது கட்சி குரல் எழுப்பியுள்ளது.

சிவசேனா தலைவர் பிரதாப் சர்நாயக் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், சிவசேனாவின் பிரதிநிதியை ராம் ஜன்மபூமி அறக்கட்டளையில் சேர்க்க வேண்டும் என்று கோரினார்.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே மசூதியை இடிக்கும் பொறுப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதை பிரதாப் சர்நாயக் நினைவுபடுத்தினார், அதே நேரத்தில் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி மசூதி இடிக்கப்பட்ட பின்னர் ராமர் கோயில் இயக்க நாயகன் என்று அழைக்கப்பட்ட எல்.கே. அத்வானி அதை அவரது "வாழ்க்கையின் சோகமான தருணம் " என்று குறிப்பிட்டதையும் நினைவு கூர்ந்தார்.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான 'சாம்னா' தன் கட்சியினர் பாபர் மசூதி இடிப்பில் பங்கெடுத்து ரத்தம் சிந்தினார்கள் என்றும் ஆனால் அதில் ஒருபோதும் அரசியல் ஆதாயம் தேடவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளது.

அறக்கட்டளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலோர் பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் அல்லது அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புடைய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக இதைப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அத்வானி மற்றும் பாஜக முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசூதி இடிப்பில் பங்கு கொண்டனர். அவர்கள் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைக்கப்படவில்லை. ஆனால், இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான உமா பாரதியை ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அழைத்துள்ளது.

ஆனால், 'பிரதமரின் உடல்நலத்தில் அக்கறை கொண்டதாகக் கூறி, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று உமா பாரதியும் ட்வீட் செய்துள்ளார், அவர் தனது ட்வீட்டில் சரயுவின் கரையில் தான் பிரார்த்தனை செய்யவிருப்பதாகவும் பிரதமர் அங்கிருந்து சென்ற பிறகு ராம்லல்லாவை தரிசனம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற அவரது அறிவிப்பில், பல அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன, மேலும் அவர் கோபமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு தலித் மூலம் அடிக்கல் என்ற பேச்சு

சில நாட்களுக்கு முன்பு, ட்விட்டரில் ஒரு கருத்து விவாதிக்கப்பட்டது. அதாவது கோயிலுக்கு ஒரு தலித் அடிக்கல் நாட்ட வேண்டும் என்று. காரணம் 1989 ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசாங்கம் பிஹாரைச் சேர்ந்த காமேஷ்வர் சௌபால் என்பவரால் அயோத்தியில் அடிக்கல் நாட்டச்செய்தது.

காமேஷ்வர் சௌபாலுக்கும் இந்த முறை ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திரா அறக்கட்டளையில் இடமளிக்கப்பட்டுள்ளது. சௌபாலின் பெயர் மீண்டும் செய்திகளில் வந்தபோது, அவரை மேற்கோள் காட்டி, கோயிலுக்கு 200 அடி கீழே 'டைம் காப்ஸ்யூல்' புதைக்கப்படும் என்றும் இதனால் எதிர்காலத்தில் மக்கள் இந்த புனித ஸ்தலத்தின் சரியான தகவல்களைக் காணலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால், உடனடியாக அடுத்த நாளே, அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய், இது தவறான தகவல் என்றும் கற்பனையானது என்றும் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

விஸ்வ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் தனது அறிக்கையில், 'ராம ஜென்மபூமி அறக்கட்டளையில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அறிக்கை வரும்போது, ​​அதைத்தான் நீங்கள் சரி என்று எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று மக்களுக்கு வலியுறுத்தினார்.

திங்களன்று, தலித்துகள் பிரச்சினை எழுப்பப்பட்டபோது, ​​துறவி ஆன பிறகு, ஒரு நபர் கடவுளுக்கு மட்டுமே உரியவராகிறார் என்றும், இந்த விஷயத்தில் இதுபோன்ற கருத்துகளை எழுப்புவது சரியல்ல என்றும் கூறினார்.

"என்னுடன் ஆலோசனை இல்லை"

இந்த நிகழ்விற்காகக் குறிக்கப்பட்டுள்ள நேரம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி மதியம் 12:15:15 -ல் இருந்து 32 வினாடிகள் மட்டுமே.

இந்தப் பூஜைக்காக, வாரணாசி மற்றும் வேறு சில இடங்களிலிருந்து பண்டிதர்கள் அயோத்திக்கு வருகிறார்கள். எந்தெந்த தேவதைகளுக்கு எந்தெந்த முறையில் பூஜைகள் செய்யப்படும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ராம் லல்லா விராஜ்மான் மற்றும் அதற்குப் பிறகு எழுப்பப்பட்ட தற்காலிக கோவிலில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக அர்ச்சகராக இருந்து வரும் சத்யேந்திர தாஸ், புதன்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சி குறித்துத் தன்னுடன் ஆலோசனை எதுவும் செய்யப்படவில்லை என்றும், பிரமாண்டமான கோயில் கட்டப்பட்ட பின்னர், அவர் அர்ச்சகராகத் தொடர்வாரா இல்லையா என்பது ராமருக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: