UPSC mains result: பார்வையற்ற மதுரை பூர்ண சுந்தரி: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி

பூர்ண சுந்தரி

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான முக்கிய செய்திகள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர்: பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

ஐ.ஏ.எஸ்., தேர்வில், மதுரையைச் சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரை, மணி நகரத்தைச் சேர்ந்தவர், பூர்ண சுந்தரி. 25 வயதாகும் இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. இவரது தந்தை முருகேசன், விற்பனை பிரதிநிதி; தாயார் ஆவுடைதேவி, இல்லத்தரசி.

தனது வெற்றி தொடர்பாக பூர்ண சுந்தரி கூறுகையில், முதல் வகுப்பு படிக்கும் போதே, பார்வை குறைபாடு ஏற்பட்டது. 2வது படிக்கும் போது, அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.விழிகள் போனால் என்ன? கல்வி என்ற ஒளியால் மகளை வழி நடத்துவோம் என, பெற்றோர், எனக்கு பாடங்களை வாசித்து காட்டுவர். பழைய டேப்ரிக்கார்டரில் பாடங்களை பேசி, ஒலிக்க விட்டு, படிக்க வைத்தனர்.

பள்ளி, கல்லுாரி தேர்வுகளின் போது நான் சொல்ல, சொல்ல ஆசிரியர்கள் தேர்வெழுதுவர். பிள்ளைமார் சங்க பள்ளியில் பிளஸ் 2 வரையும், பாத்திமா கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலமும் படித்தேன். மூன்று ஆண்டுகளாக, பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றுகிறேன்.

கடந்த, 2015ல் கல்லுாரி படிப்பு முடிந்ததும், சென்னை சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்றேன். பயிற்சியின் போது, தோழிகள் பாடங்களை வாசித்து காட்டுவர்.தற்போது, நான்காவது முறை எழுதிய தேர்வில், அகில இந்திய அளவில், 286வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.

என் பிறந்த நாளில், தேர்ச்சி பெற்ற தகவல் கிடைத்தது மகிழ்ச்சி.சாதாரண குடும்பத்தில் வறுமையின் வலியை உணர்ந்து பிறந்து, வளர்ந்த நான், ஏழை, எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமணி: அயோத்தி ராமர் கோயில் இந்திய நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் - எல்.கே.அத்வானி

அயோத்தியில் அமையும் ராமர் கோயில் இந்திய சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய கலாசார பாரம்பரியத்தில் ராமர் மிக உயரிய இடம் வகிக்கிறார். பண்பு, கண்ணியம், ஒழுக்கம் ஆகியவற்றின் உருவமாக அவர் உள்ளார். அயோத்தியில் எழுப்பப்படவுள்ள கோயில், இந்தியர்கள் அனைவரும் ராமரின் குணங்களைப் பின்பற்ற உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன்.

ராமஜென்மபூமி இயக்கத்தின்போது, குஜராத்தின் சோம்நாத்பூரிலிருந்து அயோத்திக்கு 1990-இல் ரத யாத்திரை மேற்கொண்டு எனது வாழ்வின் தலையாய கடமையாற்ற விதி பணித்ததை பணிவுடன் நினைவுகூர்கிறேன். அதில் கலந்துகொண்ட எண்ணற்றவர்களின் மன எழுச்சியைத் தூண்டுவதற்கு அந்த ரத யாத்திரை உதவியது.

ரத யாத்திரை நடைபெற்று 3 பதிற்றாண்டுகள் கடந்த நிலையில், அந்தக் கனவு நிறைவேறுகிறது. சில முக்கியமான கனவுகள் நிறைவேற ஒரு வாழ்நாள் காலமாகும். ஆனால் இறுதியில் கனவு நிறைவேறும்போது அந்தக் காத்திருப்பு அர்த்தமுள்ளதாகிறது. ராமர் கோயில் அப்படிப்பட்ட ஒரு கனவின் நிறைவாகும்.

அயோத்தியில் அமையவிருக்கும் ராமர் கோயில் இந்திய சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும். இந்திய நாட்டுக்கும், மக்களுக்கும் ராமர் என்றும் ஆசிபுரிய வேண்டும் என பிராா்த்திக்கிறேன்" என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

92 வயதாகும் அத்வானி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: ஊரடங்கால் 78 ஆயிரம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது

இந்தியாவில் மார்ச் 25 முதல் மே 31ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

மார்ச் 23ஆம் தேதிக்கு பிறகு நாடாளுமன்றம் கூடவில்லை. இந்நிலையில் சுகாதாரத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழுக்கூட்டம் சமாஜ்வாதி எம்பி ராம்கோபால் யாதவ் தலைமையில் நடைபெற்றது.

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 22 செப்டம்பர், 2020, பிற்பகல் 3:42 IST