அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்” - நரேந்திர மோதி

மோதி

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிறைவடைந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.

ஹர ஹர மகாதேவ் கோஷம்

சரியாக நண்பகல் 12.44 மணிக்கு மோதி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார்.

அங்கே திரண்டிருந்த மக்கள் ஹர ஹர மகாதேவ் மற்றும் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

'ஜெய் ஸ்ரீராம், ஜெய் சியாராம்' : மோதி

ஜெய் ஸ்ரீராம், ஜெய் சியாராம் என்று கூறி தன் உரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோதி.

கூட்டத்தில் இருந்தவர்களை கோஷமிட கோரிய பிரதமர் மோதி, "அயோத்தியில் மட்டும் இந்த கோஷம் எதிரொலிக்கவில்லை, பிரபஞ்சம் முழுவதும் எதிரொலிக்கிறது," என்றார்.

"ஒவ்வொரு இதயமும் ஒளிர்கிறது. ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது உணர்வுபூர்வமான தருணம். ஒரு நீண்ட காத்திருப்பு இன்றுடன் முடிகிறது," என்றார் மோதி.

"பல காலமாக ஒரு டெண்டில் தங்கி இருந்த ராம் லல்லாவுக்கு, ஒரு பெரிய கோயில் கட்டுகிறோம். பல நூற்றாண்டுகளாக கோயில் கட்டுவதும், இடிப்பதுமாக இருந்த சுழற்சி ராமஜென்ம பூமியில் இன்றுடன் முடிகிறது."

"ராம் மந்திர் நமது கலாசாரத்தின் நவீன சின்னமாக இருக்கும். நம் பக்தி, தேசிய உணர்வின் சின்னமாக மாறும். இந்த கோயில் கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத் தீர்மானத்தின் சக்தியையும் குறிக்கும். இது எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்," என்று நிகழ்வில் பேசினார் மோதி.

இந்த கோயில் கட்டுவதன் மூலம், புதிய வரலாறு படைக்கப்படவில்லை, வரலாறு மீண்டும் திரும்புகிறது. ஒரு படகோட்டி, ஒரு பழங்குடி ராமருக்கு உதவியது போல, ஒரு குழந்தை கிருஷ்ணருக்குக் கோவர்த்தன மலையைத் தூக்க உதவியது போல, நம் அனைவரின் கூட்டு முயற்சியால் இந்த கோயில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் சின்னம் ராமர். அனைத்தும் ராமருக்கு உரியது. ராமர் அனைவருக்கும் உரியவர் என்று கூறினார் மோதி.

மேலும் அவர், "நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். மனிதகுலம் ராமரை நம்பிய போது, வளர்ச்சி இருந்தது. நாம் பாதை மாறிய போது, அழிவின் கதவுகள் திறந்தன. நாம் ஒவ்வொருவரின் உணர்வையும் மனதில் கொள்ள வேண்டும்," என்றார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்:

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்தார்.

அவர், "500 ஆண்டு கால போராட்டம், ஜனநாயக வழியிலும், அரசமைப்புக்கு உட்பட்டும் முடிவுக்கு வந்திருக்கிறது," என தெரிவித்தார்.

ராம் என்றால் அன்பு, நீதி

பூமி பூஜை தொடர்பாக ராகுல் காந்தி பகிர்ந்துள்ள ட்வீட்டில், "ராம் என்றால் அன்பு, ராம் என்றால் நீதி, ராம் என்றால் இணக்கம்," என குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அத்வானி வீட்டிலிருந்து பார்த்து கொண்டிருப்பார்

நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், "அத்வானியால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. ஆனால், நிச்சயம் வீட்டிலிருந்தபடி நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருப்பார். சிலரை அழைக்க முடியவில்லை, சிலரால் வர முடியவில்லை. நிலைமை அவ்வாறாக இருக்கிறது. இதனை எல்லாம் கடந்து, இன்று மொத்த நாடும் மகிழ்ச்சியாக இருக்கும்," என்றார்.

அயோத்தி நகரம் எப்படி இருக்கிறது?

சர்வபிரியா, பிபிசி

பெரும்பாலான கடைகள் மூடி இருக்கின்றன. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தேநீர் கடைகள் மட்டும் திறந்துள்ளன.

உள்ளூர் கடைக்காரர், "இத்தனை நாள் வெறும் குடிசையில் இருந்த ராமருக்கு முறையான ஒரு வீடு கிடைத்திருக்கிறது," என தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக ராமர் சிலை ஒரு டென்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்காலிகமாக ஒரு கோயிலில் அந்த சிலை நிறுவப்பட்டது.

அயோத்தி சாலைகள் அனைத்தும் பூவால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

வீதி முழுவதும் மஞ்சள் மற்றும் காவி வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்புக்கான அனைத்து நடைமுறைகளும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பின்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பெருங்கூட்டத்தை காண முடிகிறது. யாரும் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை.

மோதியின் பயணம்

முன்னதாக விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்ற மோதி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

முன்னதாக அங்கே உள்ள தற்காலிக கோயிலில் வைக்கப்பட்டுள்ள ராம் லல்லா எனப்படும் குழந்தை ராமர் சிலை முன்பு விழுந்து வணங்கினார் பிரதமர்.

இன்று ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ள அயோத்தி நகரில் எல்லாப் பக்கத்திலும் ராமர் புகழ் பாடும் மந்திரங்களும், பாடல்களுமே ஒலிப்பதாக கூறுகிறார் அந்த நகரில் உள்ள பிபிசி செய்தியாளர் சர்வப்பிரியா சாங்வான்.

படக்குறிப்பு,

குழந்தை ராமர் சிலை முன்பு விழுந்து வணங்கும் பிரதமர் நரேந்திர மோதி.

நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அருகே உள்ள கடைகளுக்கு மங்கல நிறமாக கருதப்படும் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. எனவே, அயோத்தியின் நிறமே மாறியது போல உள்ளது என்கிறார் அவர்.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இந்த அடிக்கல் நாட்டும் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் மாநில அரசும், அயோத்தி உள்ளாட்சி நிர்வாகமும் ஏற்பாடுகளில் பங்கேற்றுள்ளன.

ராம் துரோகிகள்

ராமர் கோயிலுக்கான பூமி பூஜை சமயத்தில் யாரெல்லாம் கவ சேவகர்களின் தியாகத்தை மறந்தார்களோ அவர்கள் எல்லாம் ராம் துரோகிகள் என்று சிவசேனை கட்சி கூறி உள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

ஏ.என்.ஐ. பகிர்ந்துள்ள விடியோ:

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

செவ்வாய்க்கிழமை காலை அனுமன் பூஜையோடு தொடங்கி விழா நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோதி கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவார். கொரோனா தொற்று காரணமாக குறைந்த அளவிலான முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி நகரில் உள்ள பல கோயில்களிலும் இடைவிடாது ராமாயணம் ஒலிக்கப்படுகிறது.

அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் அனைவரும் விளக்குகளை ஏற்றுமாறு உத்திரப்பிரதேச மாநில அரசும் அடிக்கல் நாட்டு விழா ஒருங்கிணைப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ் ஆகியோர் மேடையில் அமர்வார்கள்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

நேபாளத்தில் இருந்து வரும் சில புனிதர்களும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பார்கள் என அறக்கட்டளை உறுப்பினர் சம்பத் ராய் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்,

பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்திற்கும் நேபாளத்திற்கு சிறந்த உறவு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அயோத்தி நிலத்தகராறு தொடர்பாக வழக்கு தொடர்ந்த ஹசிம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரியும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

படக்குறிப்பு,

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு பா.ஜ.க தொண்டர்கள் டெல்லியில் கொண்டாட்டம்.

ஹசிம் அன்சாரி இறந்த பிறகு, மகன் இக்பால் அன்சாரிதான் வழக்கை எடுத்து நடத்தினார்.

அரசியல் கட்சிகள் எப்படி பார்க்கின்றன?

கேள்வி எழுப்பும் சி.பி.ஐ (எம்.எல்)

பிரதமர் மோதியும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பி உள்ள சி.பி. ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பு.

இது தொடர்பாக அவர்கள் பகிர்ந்துள்ள ட்வீட்டில், "இந்திய அரசமைப்பு மதத்தையும், அரசியலையும் கலக்கக் கூடாது என்பதை மிக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது," என குறிப்பிட்டுள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

பழைய காணொளியை பகிர்ந்த சிவ சேனை

சிவ சேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் பழைய நேர்காணல் ஒன்றை பகிர்ந்துள்ளது அக்கட்சி.

அதில் பால் தாக்கரே, "பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பின் , அங்கு சிவ சேனை கொடியை நடுவது தங்களுக்குப் பெருமை," என கூறி உள்ளார்

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

(குறிப்பு:அயோத்தியில் இன்று நடக்கும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக அவ்வப்போது வெளியாகும் செய்திகள் இந்தப் பக்கத்தில் சேர்த்து மேம்படுத்தப்படும். எனவே, இது தொடர்பான செய்திகளைத் தெரிந்துகொள்ள விரும்பும் நேயர்கள் இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள். அல்லது மீண்டும் இந்தப் பக்கத்துக்கு வருகை தாருங்கள்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: