நீலகிரியில் தொடரும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக பெய்துவரும் கனமழையின் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மழையின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. இதனால், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

வெள்ளத்தில் சிக்கிக் குடியிருப்புகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் இடிந்துள்ளன.

உயிரிழப்புகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தில் சிக்கித்தவித்த பழங்குடியினர் கிராம மக்களை மீட்புப்படையினர் காப்பாற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

போக்குவரத்து நிறுத்தம்

மாவட்டத்தின் பலபகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வனச்சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதோடு, மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான உதகை - கூடலூர் சாலையில் காற்றுடன் பெய்த கனமழையால் இன்று காலை மரங்கள் முறிந்து விழுந்தன.

மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத்துறை காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்சார வினியோகம் பாதிப்பு

கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்ததால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இன்று காலை உதகை பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர் லாரி மீது மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. மின்சார வினியோகம் தடைப்பட்டிருப்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

லாரி மீது விழுந்த மின்கம்பத்தை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

ரெட் அலர்ட் எச்சரிக்கை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மிக கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா, வரும் 8 ஆம் தேதி வரை பொதுமக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தொடர் மழையால் குடியிருப்புகளை இழந்தவர்களைத் தங்கவைப்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பாதுகாப்பு முகாம்கள் அமைப்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி பகுதியில் அதிகபட்சமாக 390 மி.மீ., மழைப் பதிவாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: