நேரு, இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ் மற்றும் மோதி: மதச்சார்பின்மை முதல் பிரதமர்களின் மத ஊர்வலங்கள் வரை

  • ரெஹான் ஃபைசல்,
  • பிபிசி

1933ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதத்தில், "எனக்கு வயதாக வயதாக, மதத்துடனான எனது நெருக்கம் குறைந்துவிட்டது" என்று எழுதினார்.

1936 ஆம் ஆண்டில் தனது சுயசரிதையில், "ஒழுங்கமைக்கப்பட்ட மதம் எனக்கு எப்போதுமே அச்ச உணர்வையே கொடுத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இது எப்போதும் மூடநம்பிக்கை, பழமைவாதம் மற்றும் சுரண்டல் ஆகியவற்றைக் குறிக்கிறது.அதில் தர்க்கத்திற்கும் நியாயத்திற்கும் இடமில்லை" என்று எழுதுகிறார்.

சோம்நாத் கோயில்

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலின் புனரமைப்பு விழாவிற்கு நேருவின் விருப்பத்திற்கு எதிராக செல்ல ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் முடிவு செய்தபோது ஜனநாயகத்தில் மதம் குறித்த நேருவின் சிந்தனைக்கு முதன்முதலில் சோதனை ஏற்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் மஹ்மூத் கஸ்னவியால் கொள்ளையடிக்கப்பட்ட கோயில் இது.

ஒரு மதச்சார்பற்ற தேசத்தின் தலைவர் அத்தகைய மத மறுமலர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படையில் ராஜேந்திர பிரசாத்தின் சோம்நாத் பயணத்தை நேரு எதிர்த்தார். நேருவின் சிந்தனையுடன் பிரசாத் உடன்படவில்லை.

பிரபல பத்திரிகையாளர் துர்கா தாஸ் தனது 'இந்தியா ஃப்ரம் கர்சன் டு நேரு அண்ட் ஆஃப்டர்' என்ற புத்தகத்தில், "ராஜேந்திர பிரசாத், நேருவின் ஆட்சேபனைக்குப் பதிலளிக்கும் போது," நான் எனது மதத்தை நம்புகிறேன், அதிலிருந்து என்னைப் பிரிக்க முடியாது. சர்தார் படேல் மற்றும் நவாநகரின் ஜாம் சாஹேப் முன்னிலையில் சோம்நாத் கோயிலின் விழாவை நான் கண்டேன் ". என்று கூறியதாக எழுதியுள்ளார்.

கும்பமேளா - மறுத்த நேரு

1952 ஆம் ஆண்டில் ராஜேந்திர பிரசாத் காசிக்குச் சென்று சில பண்டிதர்களுக்குப் பாத பூஜை செய்த போது, நேருவுக்கும் அவருக்கும் இடையிலான மதம் குறித்த முரண்பாடான சிந்தனை மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டது. இந்தச் செயலுக்கு நேரு தனது கோபத்தைக் கடிதங்கள் மூலம் வெளிப்படுத்தினார். இதற்கு, "நாட்டின் மிகப்பெரிய பதவியில் இருப்பவரும் ஒரு அறிஞரின் முன்னிலையில் சிறியவர் தான்" என்று பதில் எழுதினார் பிரசாத்.

இந்த சர்ச்சைக்குப் பிறகு தான் நேரு அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனை நோக்கிச் சாயத் தொடங்கினார். லால் பகதூர் சாஸ்திரியின் செயலாளராக இருந்த சி.பி.ஸ்ரீவாஸ்தவா தனது வாழ்க்கை வரலாற்றில், 'ஒருமுறை சாஸ்திரிஜி நேருவிடம் கும்பமேளாவில் நீராடும்படி கேட்டுக்கொண்டார். சாஸ்திரியின் கோரிக்கையை நேரு நிராகரித்தார், தனக்கு கங்கை நதி மிகவும் பிடித்தமானது என்றும் அதில் பல முறை மூழ்கி நீராடியுள்ளதாகவும் ஆனால் கும்பமேளா சமயத்தில் அதைச் செய்ய விரும்பவில்லை என்றும் பதில் கூறினார்.' என்று எழுதியுள்ளார்.

கோல்வல்கருடனான ஆலோசனை

நேருவைப் போல் அல்லாமல், சாஸ்திரி தனது இந்து அடையாளத்தைக் காட்டத் தயங்கவில்லை, ஆனால் இந்தியாவின் மத ஒற்றுமை குறித்து அவருக்கு ஒருபோதும் சந்தேகம் இல்லை.

1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, ​​அவர் கட்சி வேறுபாடு பார்க்காமல், அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வல்கரின் ஆலோசனையைப் பெறத் தயங்கவில்லை.

இது மட்டுமல்ல, சாஸ்திரியின் முயற்சியின் பேரில், டெல்லியின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பொறுப்பு ஆர்.எஸ்.எஸ் இடம் வழங்கப்பட்டது.

எல்.கே. அத்வானி தனது சுயசரிதையான 'மை கன்ட்ரி மை லைஃப்' என்ற நூலில், 'நேருவைப் போலல்லாமல், சாஸ்திரி ஜன சங்கம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடன் எந்த விரோதத்தையும் கொண்டிருக்கவில்லை.' என்று குறிப்பிடுகிறார்.

இந்திராவின் மதச்சார்பற்ற தோற்றம்

இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்தபோது, ​​அவர் சோசியலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்தார்.

தனது முதல் பதவிப்பிரமாணத்திலேயே கடவுளின் பெயரால் அல்லாமல், சத்தியத்தின் பெயரால் பதவியேற்றார். 1967 இல் பசுப்பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பல ஆயிரம் சாதுக்கள் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி வளைத்தபோது அவரது தலைமைக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது.

போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமாக 6 பேர் உயிரிழந்தனர், ஆனால் இந்திரா காந்தி சாதுக்களுக்குச் செவி சாய்க்கவில்லை.

பசுப்பாதுகாப்புப் போராட்டத்தை ஆதரித்த அமைச்சர் குல்சாரி லால் நந்தாவை அகற்ற அவர் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டார். இந்திரா காந்தி நந்தாவை அமைச்சரவையிலிருந்து நீக்கினார்.

இந்திராவும் கோயில்களையும் சாதுக்களையும் நாடினார்

1980 வாக்கில், இந்திரா காந்தி கடவுள் மீதும் கோயில்களின் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1977 ல் தேர்தல் தோல்வி மற்றும் 1980 ல் அவரது இளைய மகன் சஞ்சய் காந்தியின் இழப்பு ஆகியவற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவரது இந்த மனமாற்றத்திற்கு அப்போதைய ரயில்வே அமைச்சர் கமலபதி திரிபாதி பெரும் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. பிரபல பத்திரிகையாளர் கும்கும் சட்டா, தனது 'தி மேரி கோல்ட் ஸ்டோரி - இந்திரா காந்தி அண்ட் அதர்ஸ்' என்ற புத்தகத்தில், 'கமலபதி மத விஷயத்தில் அவருக்குக் குருவானார். ஒருமுறை நவராத்திரியில் கன்னிப் பெண்களுக்குப் பாத பூஜை செய்து, அந்த நீரைக் குடிக்குமாறு இந்திராவிடம் கூறியபோது, ​​இந்திரா கொஞ்சம் தயங்கினார். இதனால், என் உடல் நிலை பாதிக்கப்படாதா என்று கேட்டார். ஆனால், வெளிநாட்டில் பயின்று பிரெஞ்சு மொழி பேசிய இந்திரா காந்தி அந்த சடங்கைச் செய்தும் முடித்தார்.' என்று குறிப்பிடுகிறார்.

இந்தச் சமயத்தில், இந்திரா காந்தி ததியாவில் உள்ள பகளாமுகி சக்திபீடத்திற்குச் சென்றார். கோவில் வளாகத்திற்குள் தூமாவதி தேவி கோயில் இருந்தது, அங்கு விதவைகள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்பட்டனர். இந்திரா காந்தி முதன்முறையாக அங்கு சென்றபோது, ​​தூமாவதி சக்திபீடத்தின் பூசாரிகள் அவருக்கு நுழைவு அனுமதி தரவில்லை. ஏனெனில் இந்துக்கள் அல்லாதவர்களின் நுழைவு அங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. ஃபெரோஸ் காந்தியை மணந்த பிறகு அவர் இந்து இல்லை என்று அவர்கள் நம்பினர்.

கும்கும் சத்தா, 'இந்திரா கமலபதி திரிபாதியைத் தொலைபேசியில் அழைத்தார். உடனடியாக ததியாவுக்கு வரும்படி கூறினார். பூசாரிகளை சம்மதிக்கவைக்க, திரிபாதி மிகவும் போராட வேண்டியிருந்தது. இறுதியில், 'நான் அவரை அழைத்து வந்திருக்கிறேன். அவரை பிராமணப் பெண்ணாகக் கருத வேண்டும்' என்ற வாதத்தால் அனுமதி பெற்றார்' என்று எழுதுகிறார். டெல்லியில் உள்ள ஸ்ரீ ஆத்ய காத்யாயினி சக்திபீடத்திற்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார். இது இப்போது சதர்பூர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயில் மெஹ்ராலியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு அருகில் இருந்தது. 1983 ஆம் ஆண்டில், விஸ்வ இந்து பரிஷத்துடன் இணைந்து கட்டப்பட்ட ஹரித்வார் பாரத மாதா கோயிலை இந்திரா காந்தி திறந்து வைத்தார்.

ராஜீவ் காந்தியின் பங்களிப்பு

இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி மதப் பற்று கொண்டவரல்ல. ஆனால் அவரது அரசியல் ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில், அவர் 1989 ல் ராம்ராஜ்யத்திற்கு உறுதியளித்தார், அயோத்தியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஷாபானோ வழக்கில் ஏற்பட்ட மோசமான எதிர்விளைவுகளை ஈடுகட்டுவதற்காக ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டப்பட்டது.

ராஜீவ் காந்தி இந்தத் தேர்தல்களில் தோல்வியடைந்தார், ஆனால் ஷாபானோ வழக்கில் முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவளித்த நிலையில், தான் ஒரு 'நல்ல இந்துவும் கூட' என்ற செய்தியை வெளிப்படையாகவே வழங்க விரும்பினார்.

ஜோயா ஹசன் தனது 'காங்கிரஸ் ஆஃப்டர் இந்திரா' என்ற புத்தகத்தில், 'அந்த நேரத்தில், ராஜீவ்காந்தியின் தலைமை ஆலோசகர் அருண் நேரு, ராமர் கோயில் பிரச்சினையில் கொஞ்சம் நெகிழ்வான அணுகுமுறையை எடுத்துக் கொண்டால், அவர் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக விமர்சிக்கப்படுவது சற்று குறையும் என்பது அவரது எண்ணமாக இருந்தது' என்று எழுதியுள்ளார்.

இந்த உத்தியை பாபர் மசூதியை இடிப்பதற்கான முதல் படியாக விஸ்வ இந்து பரிஷத் பார்க்கும் என்று காங்கிரஸ் யூகிக்கவில்லை. ஆனால், அது தான் உண்மையில் நடந்தது.

நரசிம்மராவின் மதிப்பீட்டில் பிழை

நரசிம்மராவ் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவரது அரசியல் வாழ்க்கை ஹைதராபாத்தின் நிஜாமுக்கு எதிரான போராட்டத்துடன் தொடங்கியது, அங்கு அவர் இந்து மகாசபா மற்றும் ஆரியசமாஜுடன் தோளோடு தோள் கொடுத்துப் பணியாற்றினார். அவரது முழு வாழ்க்கையும் காலை வழிபாடு மற்றும் வருடாந்திர புனித யாத்திரை என்றே இருந்தது.

ஸ்ரீங்கேரியின் சங்கராச்சாரியார் முதல் பெஜாவர் சுவாமி வரை பல சாதுக்களுடன் ராவ் நெருக்கம் கொண்டிருந்தார். என்.கே.சர்மா போன்ற ஜோதிடர்களும், சந்திரசாமி போன்ற பல தாந்திரிகர்களும் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில் அவர் பிரதமராக இருந்தார். முஸ்லிம்கள் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறார்கள் என்பது அவருடைய கவலை, ஆனால் இந்துக்களிடையே கூட உயர் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் பாஜகவை நோக்கிச் செல்வது அதிகரித்து வருவதாக அவர் மேலும் கவலைப்பட்டார். அவர் ஒருமுறை மணி சங்கர் ஐயரிடம், இந்தியா ஒரு இந்து நாடு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

நரசிம்மராவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வினய் சீதாபதிக்கு அளித்த பேட்டியில் சல்மான் குர்ஷித், "ராவிடம் ஒரு பிரச்சனை என்னவென்றால், அவர் எப்போதும் ஒரு கருத்தை உருவாக்க முயன்றார். இந்து மற்றும் முஸ்லீம் வாக்கு வங்கிகளை மகிழ்விக்க அவர் விரும்பினார். ராவ் மசூதியைப் பாதுகாக்கவும் விரும்பினார். இந்து உணர்வுகளைப் பாதுகாக்கவும் விரும்பினார், மேலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும் விரும்பினார். இதன் விளைவாக மசூதியும் பாதுகாக்கப்படவில்லை, இந்துக்களும் காங்கிரஸை நோக்கி வரவில்லை, அவருடைய நம்பகத் தன்மையும் பாதிக்கப்பட்டது." என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: