கேரளா கோழிக்கோடு விமான விபத்து: "விமானியின் அறிவிப்பு சத்தம் பாதியில் நின்றது’ - உயிர் தப்பிய பயணிகள் பகிரும் தகவல்கள்

  • மு. ஹரிஹரன்,
  • பிபிசி தமிழுக்காக.
கோழிக்கோடு விமான விபத்துள்: உயிர் தப்பிய பயணிகள் பகிரும் தகவல்கள்

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமானநிலையம் எனப்படும் கரிப்பூர் விமானநிலையத்தில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி உயிர் தப்பிய யூஜின் யூசுஃப் விபத்து குறித்து பிபிசியிடம் விளக்கினார்.

சத்தம் நின்றது

"துபாயிலிருந்து கேரளாவிற்கு மதியம் 2 மணிக்கு விமானம் கிளம்பியது. நான் விமானத்தின் பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தேன். வெகுநாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் சந்தோஷத்தில் நான் இருந்தேன். என்னைப்போலவே பலரும் அந்த விமானத்தில் மகிழ்ச்சியாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. விமான ஓட்டுநர்கள் கோழிக்கோடு வரை பயணிகளுக்கான அறிவிப்புகளைத் தெரிவித்துக் கொண்டே இருந்தனர். கரிப்பூர் விமானநிலையத்தில் தரையிறங்கப் போகிறோம் என்பதுவரை விமானி அறிவித்திருந்தார். திடீரென, எதையோ அறிவிக்க வந்தவரின் சத்தம் முழுமையடையாமல் நின்றது. அடுத்து நிகழ்ந்தவை அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது" என விபத்து குறித்துப் பகிர்ந்து கொண்டார் யூஜின்.

இவர் துபாயில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டதால் மீண்டும் இந்தியாவிற்கு வர திட்டமிட்டுள்ளார் யூஜின்.

காணொளிக் குறிப்பு,

'கண் மூடி திறப்பதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது'

"விமானியின் அறிவிப்பு பாதியில் நின்ற அடுத்த சில நிமிடங்களில், அதிவேகத்தோடு விமானம் தரையில் மோதியது. பயணிகள் அனைவரும் இருக்கையிலிருந்து தூக்கி எறியப்பட்டோம். உடைந்து நொறுங்கிய இரும்புக்கம்பிகள் பலருக்குப் பலத்த காயத்தை ஏற்படுத்தியிருந்தது. விமானத்தின் பின் பகுதியில் நான் அமர்ந்திருந்ததால் உயிர் தப்பினேன். விபத்து ஏற்பட்டதும் மீட்பதற்காக ஆட்கள் வரத்துவங்கினர். 2 வயதுக் குழந்தை ஒன்று இருக்கைகளுக்குள் சிக்கிக் கதறி அழுது கொண்டிருந்தது. உடனடியாக அக்குழந்தையை மீட்டு தோளில் கிடத்திக்கொண்டு உடைந்த விமானத்தைவிட்டு வெளியேறினேன். மருத்துவச் சிகிச்சைக்காகக் குழந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தோம். பயங்கரமான இந்த விமான விபத்தில் சிக்கி உயிர் தப்பியது ஆச்சரியத்தை அளித்தாலும், உடனிருந்த பயணிகள் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது" என கவலையுடன் கூறினார் யூஜின்.

விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அழைப்பு வரவில்லை

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மணத்தலப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் இஷா ஃபரூனா.

இவர், தனது 3 வயது குழந்தை ஃபாதிமா நஹுவா வுடன் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்.

துபாயில் பணிபுரியும் கணவர் நவுஷரை பார்த்துவிட்டு, மூன்று மாதங்களில் திரும்ப வேண்டியவர் கொரோனா பரவல் காரணமாக 6 மாதங்களாகக் கேரளா திரும்ப முடியாமல் தவித்து வந்துள்ளார்.

வந்தே பாரத் திட்டத்தில் துபாயிலிருந்து கிளம்பிய இவர் பயணித்த விமானம் கரிப்பூர் விமானநிலையத்தில் விபத்துக்குள்ளான போது அதிர்ஷ்டவசமாக இவரும், இவரது குழந்தையும் உயிர் பிழைத்துள்ளனர்.

இஷா பயணித்த விமானம் விபத்துக்குள்ளான செய்தி தெரியவந்ததும் ஏற்பட்ட அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார் இஷாவின் இளைய சகோதரர் ரசல்.

"துபாயிலிருந்து கிளம்பும் முன்னர் எனது அக்கா, அவரது மகளோடு சேர்ந்து படம் எடுத்து கைப்பேசியில் அனுப்பினார். மீண்டும் வீட்டுக்கு வரப்போகிறோம் என தகவல் அனுப்பியிருந்தார். அவருக்காக நானும், எனது அம்மாவும் இங்கே காத்திருந்தோம். ஆனால், இரவு 8 மணிக்கு மேலும் இஷாவிடமிருந்து அழைப்பு வரவில்லை."

"இஷாவின் அழைப்புக்காகக் காத்திருந்த சமயத்தில் அவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளான செய்தி தெரியவந்தது. நானும், எனது உறவினர்களும் மருத்துவமனைக்கு ஓடினோம். முக்கிய மருத்துவமனைகளில் பெருங்கூட்டம் இருந்தது. செய்வதறியாது அழுது புலம்பிக்கொண்டிருந்த நேரத்தில் எனது சகோதரி உயிரோடு இருப்பதாகத் தகவல் வந்தது. அம்மாவை அழைத்துக் கொண்டு இஷாவை பார்க்கச்சென்றோம். ஆனால், அங்கே குழந்தை ஃபாத்திமாவைக் காணவில்லை. மீண்டும் நாங்கள் அச்சமடைந்தோம். பின்னர், அவள் மற்றொரு மருத்துவமனையில் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்தனர். உடனடியாக அங்குச் சென்று அவளைத் தூக்கிக்கொண்டேன். அவளின் இடது கை முழுவதும் சிராய்ப்பு காயங்களாக உள்ளது. விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக இரவில் தூங்கும்போது அவள் அழுகிறாள். எப்படியோ இருவரும் தப்பித்து வந்தது பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது" என தெரிவித்தார் ரசல்.

எங்கும் சோகம்

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெல்லிமடக்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் சஹீரா பானு.

சஹீரா, அவரது கணவர் மொஹமது நிஜாஸ் மற்றும் 3 குழந்தைகளுடன் 2010ம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வந்தார்.

வருடந்தோறும் சொந்த ஊருக்கு வரும் சஹீரா, தனது தாய் தந்தையோடு மகிழ்ச்சியாக நாட்களைக் கழித்துவிட்டு மீண்டும் துபாய்க்குச் செல்வார்.

தனது மூன்று குழந்தைகளோடு, இந்த ஆண்டு துபாயிலிருந்து கேரளாவிற்கு விமானத்தில் வந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.

சஹீராவோடு, அவரது 10 மாத குழந்தை அசாம் மொஹம்மதும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

விமானத்திலிருந்த சஹீராவின் மூத்த மகன் லால் மொஹமது மற்றும் மரியம் பலத்த காயங்களோடு உயிர்பிழைத்துள்ளனர்.

முதல்முறையாகக் கேரளாவிற்கு வரும் சஹீராவின் மூன்றாவது குழந்தையைப் பார்க்க ஆர்வத்திலிருந்த குடும்பத்தினர், இப்போது கனத்த சோகத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார் சஹீராவின் மூத்த சகோதரர், சாஜத் ஹுசைன்.

"எங்கள் குடும்பம் மீளமுடியாத பெரும் சோகத்தில் உள்ளது. நான் உட்பட சஹீராவிற்கு ஐந்து சகோதர சகோதரிகள். அனைவரின் பிரியங்களையும் பெற்றவள் சஹீரா. அவளின் குழந்தையைப் பார்ப்பதற்காக பெரும் ஆவலோடு நாங்கள் காத்திருந்தோம். ஆனால், இருவருமே எங்களை ஏமாற்றிச் சென்றுவிட்டனர்." என கலங்குகிறார் சாஜத்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: