காஷ்மீர், லடாக்: குளிர்காலத்திற்காக இந்திய ராணுவத்தின் தயார்நிலை எப்படி உள்ளது?

  • ஜுகல் புரோஹித்
  • பிபிசி செய்தியாளர்
LAC குளிர்காலத்திற்காக இந்திய ராணுவத்தின் தயார்நிலை எப்படி உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

ரயில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்படவுள்ளது. பயணிகள் இன்னும் ரயிலில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்த செயல்முறைக்கு பழக்கமாகிவிட்ட மக்கள், கூட்டமாக இருந்தபோதிலும், ரயிலில் ஏறிவிடுகிறார்கள். திடீரென்று பயணிகள் குழு ஒன்று வருகிறது.

அவர்களும் ரயிலில் ஏற வேண்டியிருந்தது. ஆனால் இவர்களால் ஏற முடியவில்லை, ஏனெனில் ரயில், இதை விட அதிக நேரம் காத்திருக்க முடியாது.

இதே போல ஒன்றுதான் கிழக்கு லடாக்கிலும் நடக்கிறது. அங்கு, 3 மாதங்களுக்கும் மேலாக இந்தியா மற்றும் சீன வீரர்கள் வெவ்வேறு இடங்களில், எதிரெதிரே நிற்கின்றனர்.

இரு தரப்பினரும் பின்வாங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தாலும், தங்கள் நிலையை வலுப்படுத்தும் பொருட்டு இப்பகுதிக்கு அனுப்பப்பட்ட கூடுதல் துருப்புக்களை அங்கேயே நிறுத்தி வைக்க இந்திய இராணுவம் முடிவு செய்துள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதாவது, இப்போது ராணுவ படைகள் குளிர்காலத்தில் கூட இந்த பகுதியில் இருக்கும் இந்த விஷயம், தற்போதைய நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

முழு விஷயத்தையும் புரிந்துகொள்வோம்

ஒவ்வொரு ஆண்டும் லடாக்கில் கோடை காலம் தொடங்கும்போது, சாலைகளில் இருந்து பனியை அகற்றும் பணி ஆரம்பமாகும். இந்த நேரத்தில், குளிகாலத்திற்காக படையினருக்கு தளவாடங்களை வழங்கும் பணி தொடங்குகிறது. ஏனெனில் குளிர்காலத்தில் இங்கு பாதைகள் மூடப்பட்டுவிடுவதால், படையினருக்கு பொருட்களை வழங்குவது கடினம்.

பட மூலாதாரம், Getty Images

கோடையில், சாலை வழியாக லடாக் சென்ற எந்தவொரு நபரும், நீண்ட மற்றும் முடிவற்ற ராணுவ வாகன அணிகளை பார்ப்பது மிகவும் சாதாரணம்.

இந்த வாகனங்கள் மூலமாக , குளிர்காலத்திற்காக உயர்பகுதிகளில் உள்ள வீரர்களுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. குளிர்காலத்தில் ஸ்ரீநகரில் இருந்து சோஜிலா கணவாய், மணாலி வழியாக ரோஹ்தாங் கணவாயை தாண்டி லடாக்கை அடையும் வழி, கனமான பனிப்போர்வையால் மூடப்பட்டிருக்கும்.

தொலைதூர பகுதிகள், எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி), அசல் எல்லை கோடு( எல்ஏசி) ஆகிய இடங்களில் உள்ள துருப்புக்கள்: சியாச்சின், மற்றும் ஆக்சுவல் க்ரவுண்ட் பொசிஷன் (ஏஜிபிஎல்) ஆகிய இடங்களில் உள்ள வீரர்களுக்கும், இந்த வாகன அணிகள், உணவுப்பொருட்கள் முதல் வேறு சாமான்களான, எரிபொருள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் ,குளிர்கால உடைகள் போன்றவற்றை கொண்டு சேர்க்கின்றன.

இதில் புதியது என்ன?

இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும், எல்லை நிர்ணயம் செய்யப்படாத எல்ஏசி யில், எல்ஓசி-ஐ ஒப்பிடும்போது, குறைவான வீரர்களே நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், எல்ஏசியில், முள்வேலி, ஃப்ளட்லைட்கள் போன்ற வேறு உள்கட்டமைப்புகளும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 3,488 கி.மீ நீளமுள்ள அசல் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது. இது லடாக் முதல் இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் வரை சென்று அருணாச்சல பிரதேசத்தில் முடிவடைகிறது.

இந்த முழு எல்லையிலும், திறந்த மற்றும் பரந்த வெளிகள் உள்ளன, அவை வழக்கமான ரோந்து மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் இரு தரப்பினராலும் கண்காணிக்கப்படுகின்றன. இந்த காரணத்தால் தற்போதைய நிலைமை இன்னும் மோசமானது.

இவ்வளவு பெரிய அளவிலான மற்றும் இவ்வளவு பெரிய நடவடிக்கை தற்போதுள்ள துருப்புக்களுக்கு மட்டுமல்ல, இங்கு அனுப்பப்படும் கூடுதல் இராணுவப் படைகளுக்கும் உதவும். இதுபோன்ற ஒரு நடவடிக்கை, கிழக்கு லடாக்கில் இதற்கு முன்னர் நடந்ததில்லை என்று இந்திய ராணுவத்தின் உதம்பூரில் உள்ள வடக்கு கட்டளைப்பிராந்திய தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற, லெஃப்டினண்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா தெரிவித்தார்.

குளிர்காலத்துக்காக பொருட்களை சேகரிக்கும் வகையில், நிதியாண்டின் தொடக்கத்திலேயே, ராணுவம் , இந்தப் பொருட்களின் விநியோக நடவடிக்கையை ஆரம்பித்துவிடுகிறது.

இதில் சீருடை, ரேஷன் சாமான்கள், பொருட்கள் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் நவம்பர் மாதத்துக்குள் ராணுவ நிலைகளில் பொருட்கள் கிடைக்கச்செய்வது ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள பதினான்காவது படைப்பிரிவின் 80 ஆயிரம் வீரர்களுக்கு, இந்த நடவடிக்கை சரியாக இருந்தது.

ஆனால் இப்போது அங்கு கூடுதல் படைகளும் உள்ளன. அவர்களுக்கு ஒப்பந்தம், போக்குவரத்து போன்ற அனைத்து வேலைகளும் ஆரம்பத்திலிருந்தே செய்யப்பட வேண்டும். நேரம் அத்தனைதான் உள்ளது. அதாவது இந்த வேலைகள் அனைத்தும் நவம்பர் மாதத்துக்குள் சாலை வழியாக முடிக்கப்பட வேண்டும். அதன் பிறகு, விமானம் மூலம் பொருட்களை கொண்டுசேர்க்கவேண்டியிருக்கும் என்று ஹூடா , சுட்டிக்காட்டுகிறார்.

ரயிலின் கதை இப்போது உங்களுக்கு புரிகிறதா?

உண்மையில், இந்த விஷயம், தற்போது கிழக்கு லடாக் பகுதிக்கு மட்டுமானதல்ல என்று ராணுவ அதிகாரி கூறுகிறார்.

எல்ஏசியின் முழுப் பகுதியும் பதற்றத்தில் உள்ளது. இந்தியா, எல்ஏசி.யில் நன்கு தயாராக உள்ளது. லடாக்கில் பதற்றம் நிலவும் இந்த சூழலில், அருணாச்சல பிரதேசத்தில் நாம் தவறான எண்ணைத்தை கொண்டிருக்க முடியாது என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகிறார்,

மாபெரும் முயற்சிகள்

இந்த முறை லடாக்கில் துருப்புக்களின் செயல்பாடு எவ்வாறு வித்தியாசமாக இருக்கும் என்பதை அறிய விரும்பினோம்.

அமைதிக்காலத்தில் , சிறிய எண்ணிக்கையில் அல்லது ராணவத்தின் ஒரு படைப்பிரிவு(சுமார் 100 வீரர்களைக் கொண்ட ஒரு குழு) எல்ஏசி யில் நிறுத்தப்பட்டிருக்கும்.

இப்போது பதற்றம் நிலவும் சூழல் காரணமாக, வீரர்கள் எல்ஏசிக்கு இன்னும் நெருக்கமாக இருப்பார்கள்.

அவர்கள் எங்கு சென்றாலும் தங்கள் பொருட்களுடன் செல்ல வேண்டும். பொறியாளர்கள், தகவல் தொடர்பு துறையினர், மருத்துவப் படைகள் அனைத்தும் அவர்களுடன் செல்லும் என்று இந்திய ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற லெஃப்டிணன்ட் ஜெனரல் எஸ்.கே.பட்யால் தெரிவித்தார். அவர், லே யில் பதினான்காவது படைப்பிரிவின் தளபதியாக பதவி வகித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

பொருட்களை கொண்டு சேர்ப்பதோடு கூடவே இந்த பொருட்களை புதிய இடங்களில் பாதுகாப்பான இடங்களில் சேமிப்பதும் முக்கியம். இது ஒரு பெரிய பணியாக இருக்கும் என்று பட்யால் கூறுகிறார்.

தாக்குதல் அல்ல, சுயபாதுகாப்பு

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான படையினருடன், சீனாவை தாக்க இந்தியா யோசிக்கிறதா?

இந்திய இராணுவம், அங்கு நிறுத்தப்பட்டுள்ள வீரர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆயினும், அதிகமான துருப்புக்களை நிறுத்துவது தற்காப்பு நடவடிக்கையாக கருதப்படவேண்டுமே தவிர தாக்குதலுக்கு அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

லடாக்கின் குளிர்காலம் கடுமையானது. தட்பநிலை மைனஸ் 40 டிகிரி வரை மற்றும் பனி 40 அடி வரை இருக்கும். குளிர்காலத்தில் சாதாரண ரோந்துப் பணிகளைச் செய்வது கூடக்கடினம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, நாம் ஒரு போரைத் தொடங்க விரும்பும் நேரமாக இது நிச்சயமாக இருக்காது என்று பட்யால் தெரிவித்தார்.

இந்திய ராணுவம் எப்போதுமே தன்னை நல்ல தயார் நிலையில் வைத்துக்கொண்டிருக்கிறது. ஆகவேதான், தேவைப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க, கூடுதல் துருப்புக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

ஜெனரல் ஹூடாவும் இதை ஒப்புக்கொள்கிறார். "எதிரிகள் மேலும் ஊடுருவாமல் தடுப்பதற்காகவே இந்த துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனக்கு தெரிந்தவரை , சீனா நமக்கு எதிராக ஒரு பெரிய படையை நிறுத்தியுள்ளது," என்று அவர் குறிப்பிடுகிறார்.

கவலை இப்போதும் நீடிக்கிறது

இந்திய-திபெத்திய எல்லை காவல்துறை (ஐடிபிபி), இந்த எல்லையை கண்காணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. ஆகவே, ஆண்டு முழுவதும் எல்ஏசிக்கு அருகில் அந்த படை பணியில் ஈடுபடுகிறது.

ஏராளமான வீரர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவது மிகவும் சவாலான பணியாக இருக்கும்.

இது மனித தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இது ஒரு கடமை, சவால்கள் யாரையும் தடுக்காது. எல்லா சிரமங்களையும் மீறி நாம் இதை செய்யவேண்டியிருக்கும் என்று இப்பகுதியில் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக பணியாற்றிய, ஐடிபிபி முன்னாள் ஐ.ஜி ஜயவீர் செளத்திரி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

ராணுவத்தின் பதினான்காவது படைப்பிரிவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற ஜெனரல் சஞ்சய் குல்கர்னி , மற்றொரு விஷயம் குறித்து நமது கவனத்தை ஈர்க்கிறார்.

எல்ஏசி யில் ரோந்துப் பணியின்போது , இந்திய சீன வீரர்களுக்கு இடையே தகராறுகள் ஏற்படும். பின்னர் உடனடியாக பிரச்சனை தீர்க்கப்படும். ஆனால், கூடுதல் படைகள் நிறுத்தப்பட்ட காரணத்தால் இப்போது சூழல் மாறிவிட்டது.

இப்போது இரு தரப்பிலிருந்து நிகழ்த்தப்படும் எந்தவொரு சம்பவமும், வேண்டுமென்றே செய்ததாக கருதப்படும். அது விஷயங்களை மேலும் சிக்கலாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

உடைகள் கிடைக்கச்செய்தல், தங்குமிடம் மற்றும் அவற்றை அமைக்கும் திறன் தொடர்பாக சவால்கள் நிலவும். தங்குமிடங்கள், படையினருக்கு மட்டுமல்ல, அவர்களின் உபகரணங்களுக்கும் தேவை என்று ஹூடா தெரிவித்தார்.

பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை திறந்த வெளியில் நிறுத்தமுடியாது என்றும் அவர் கூறினார்.

விமானப்படையும் சேர்க்கப்பட்டுள்ளது

ராணுவத்துக்கு உதவ, சரக்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்திய விமானப்படையும் இந்த நடவடிக்கையில் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளது.

இந்த நேரத்தில் இந்த பகுதியில் அதிகமான விமானங்கள் இருக்கும். இந்திய விமானப்படையின் சரக்கு விமானங்கள், குறிப்பாக குளிர்காலத்தில் அதிகமாகவே சேவையாற்றும்.

லே மற்றும் தோயிஸ் எங்கள் முக்கிய தளமாகும். எங்களிடம் சி 17, ஐஎல் 76, சி 130 ஜே, ஏஎன் 32 போன்ற மிகப்பெரிய திறன் கொண்ட விமானங்கள் உள்ளன. எம்ஐ 17 வி 5, சேடக் மற்றும் சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களும் எங்களிடம் உள்ளன என்று ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் மன்மோகன் பகதூர் கூறுகிறார்.

பணச்செலவு எப்படி?

இது தவிர, மிக முக்கியமான விஷயம், இதனால் பணச்செலவு அதிகரிக்கும்.

ஆனால், மே 15 அன்று ஒரு இணையவழி கலந்துரையாடலில் உரையாற்றியபோது, இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நராவனே, "செலவுகள் குறைக்கப்படும். இந்த ஆண்டு நாம் எவ்வாறு வெட்டுக்களைச் செய்ய முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். சில துறைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் .இதனால் செலவைக் குறைக்க முடியும் ," என்று தெரிவித்தார்.

இருப்பினும், இப்போது, எல்ஏசி நிலைமையில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார். இந்திய இராணுவத்திற்கான ஒதுக்கீட்டை, அரசு அதிகரிக்க வேண்டும் என்று பெரும்பாலான ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்ற மாதம், எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகம் பெரும் அதிகரிப்பு செய்தபோது அரசின் நோக்கம் குறித்த அறிகுறி தெரிந்தது. எல்லைப் பகுதிகளில் முக்கியமான சாலை உள்கட்டமைப்பை அமைப்பதில் பிஆர்ஓ ஈடுபட்டுள்ளது.

இறுதியாக, இந்திய தரப்பு மற்றொரு விஷயத்தையும் சார்ந்திருக்கிறது. பாதுகாப்பு அமைச்சகம், வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு பதிலாக இந்திய விற்பனையாளர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கத் தொடங்கியுள்ளது. இதனால் குறைவான நேரத்தில், பொருட்கள் தயாராகி கிடைக்கப்பெறும்.

2015-16 ல், 39 சதவிகிதமாக இருந்த, உள்ளூர் விற்பனையாளர்களுக்கான ஒப்பந்தங்கள் 2019-20ல், 75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: