சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரண வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனாவுக்கு பலி

காவலர் பால்ராஜ்

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின் அடுத்தடுத்து இறந்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தமிழகத்தை உலுக்கியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவரான சிறப்பு எஸ்.ஐ. பால்ராஜ் கொரோனோ தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.

தந்தை மகன் இறப்பு வழக்கை கொலை வழக்காக மாற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிறப்பு சார் ஆய்வாளர் பால்துரைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பால்துரைக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டத்தை தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 24ம் தேதி உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டதால் அவரது உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த 8ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், பால்துரை மனைவி மங்கையர்திலகம் தனது கணவருக்கு முறையான சிகிச்சையளிக்கப்படவில்லை எனவும் தனது கணவரின் உடல் உறுப்புகள் செயல் இழந்து வருவதுடன் அவர் சுய நினைவை இழந்து விட்டதாகவும் கூறி தனது கணவருக்கு ஜாமீன் வழங்குவதுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கவும் கோரி நேற்று மாலை மதுரை மாநகர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவர் இன்று (10.08.2020) அதிகாலை உயிரிழந்தார்.

படக்குறிப்பு,

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பால்துரை மனைவி மங்கையர்திலகம் தன் கனவர் இன்று அதிகாலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக குறிப்பிட்டார். தனது கனவருக்கும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு தந்தை மகன் இறந்ததாகத் தொடரப்பட்ட கொலை வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினால் மட்டுமே அவரது உடலைப் பெறமுடியும் என்றும் கூறினார்.

அது தவிர "எனது கணவரின் உயிரிழப்புக்கு சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் சிலர்தான் காரணம்" என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: