EIA 2020 குறித்து ராகுல் காந்தி கருத்து: "தேசத்தை கொள்ளையடிப்பதே இதன் நோக்கம்"

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் முக்கிய நோக்கம் "தேசத்தை கொள்ளையடிப்பதே" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங்குவதற்கு அப்பகுதி மக்களிடையே கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது கட்டாயம் என்று தற்போது இருக்கும் விதியை திருத்தி கருத்துக் கேட்புக் கூட்டம் கட்டாயமில்லை என்று ஆக்குவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுடன் கூடிய வரைவு அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிக்கை மீதான தங்கள் கருத்துகளை ஆகஸ்டு 11ஆம் தேதி வரை மக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்கள் வாயிலாக கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், மற்றொரு தரப்பினர் இதற்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக இன்று (ஆகஸ்டு 10) காலை ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி, "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையின் நோக்கம் தேசத்தை கொள்ளையடிப்பதுதான் என்று தெளிவாக தெரிகிறது. நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் தனது வசதி படைத்த நண்பர்களுக்காக பாஜக அரசு செய்யும் செயலுக்கு, இது ஒரு உதாரணம். சுற்றுச்சூழல் அழிவை நிறுத்த, இந்த வரைவு அறிவிக்கை திரும்ப பெறப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"இழுக்கானது, ஆபத்தானது"

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டிருந்த ராகுல் காந்தி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை, " நாட்டிற்கு இழுக்கு மட்டுமல்ல, அது ஆபத்தானதும் கூட" என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

"பாஜக அரசால் பொதுமக்கள் ஆலோசனை கேட்பதற்காக வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை (இஐஏ) 2020, இழுக்கானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான போரில் பல ஆண்டுகளாக வென்ற பல கடினமான போராட்டங்களை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், இது இந்தியா முழுவதும் பரவலான சுற்றுச்சூழல் அழிவையும், பல்வேறு பிரச்சனைகளையும் இது கட்டவிழ்த்து விடக்கூடும்" என்று ராகுல் காந்தியின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்த வரைவு அறிவிக்கையின்படி, நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளிட்ட அதிக மாசுபடுதலுக்கு காரணமான தொழில்களுக்கு இனி சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு தேவையில்லை. அடர்த்தியான காடுகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளைக் கடந்து செல்லும் நெடுஞ்சாலைகள் அல்லது ரயில் பாதைகளும், மரங்களை பெருமளவில் வெட்டுவதன் விளைவாக, ஆபத்தான நிலையிலுள்ள ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடங்களின் அழிவுக்கு வழிவகுக்கும்."

"இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை ஒரு பேரழிவு. சுற்றுச்சூழல் சீரழிவால் நேரடியாக பாதிக்கப்படும் சமூகங்களின் குரலை ஒடுக்குவதற்கு இது முயற்சிக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் எழுச்சி பெற்று இந்த வரை அறிவிக்கையை எதிர்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒவ்வொரு போரிலும் எப்போதும் முன்னணியில் இருக்கும் நமது இளைஞர்கள், இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்."

நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்த போராட்டத்தை அரசியல் மற்றும் கருத்தியல் நம்பிக்கைகளை கடந்த ஒரு போராட்டமாக முன்னெடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 1 ஜூன், 2022, பிற்பகல் 2:54 IST

"மனித வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது என்பதை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் நமக்கு காட்டுகிறது. ஏற்கனவே விளிம்பு நிலையில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, சுற்றுச்சூழல் என்பது ஒரு சொல் மட்டுமல்ல, அது ஒரு வாழ்வாதாரப் பிரச்சனை. ஒருவேளை இந்த வரைவு அறிவிக்கை இறுதிசெய்யப்பட்டால் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவின் நீண்டகால விளைவுகள் நமக்கும் இந்தியாவின் எதிர்கால தலைமுறைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்" என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: