பெனோ ஸெஃபைன் : பார்வைத்திறன் சவால்களை கடந்த இந்தியாவின் முதலாவது ஐ.எஃப்.எஸ் அதிகாரி

  • எம்.ஏ. பரணிதரன்
  • பிபிசி தமிழ்
பெனோ ஸெஃபைன்
படக்குறிப்பு,

பெனோ ஸெஃபைன்

பெனோ ஸெஃபைன் (30), குறும்பும், துடிதுடிப்பும் நிறைந்த மழலையாக பலராலும் கவனிக்கப்பட்டவர், இப்போது இந்தியாவின் முதலாவது 100% பார்வைத்திறன் சவால் நிறைந்த இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) உதவிச்செயலாளர் ஆக டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்திய வெளியுறவுப் பணியில் 100% பார்வைத்திறன் சவால்களை எதிர்கொண்ட ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது, 2015-ஆவது ஆண்டில் பெனோ ஸெஃபைன் பணி நியமனத்தின் மூலம் சாதனையாக அறியப்பட்டது.

"பல தடங்கல்கள், தடைகள் வாழ்வில் குறுக்கிட்டபோதும், தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு முன்னேற முற்பட்ட தனக்கு அதற்கான அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது" என்கிறார் பெனோ ஸெஃபைன்.

தான் கடந்து வந்த பாதையின் முக்கிய தருணங்களை பிபிசியிடம் அவர் பகிர்ந்து கொள்கிறார்.

"பள்ளி வயதில் முதல், இரண்டு வகுப்புகளில் படித்தபோது, நிறைய வாயாடுவேன். அதனால எங்க மாமா, 'நீ வக்கீலா வருவன்னு' சொல்வாரு."

"அப்புறம் சில வருஷம் கழிச்சு காலேஜ் லெக்சரர் ஆகனும்னு தோனுச்சு."

"ஆனால், பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளில் படிக்கும் காலத்தில், என்னைச் சுற்றி நடக்கும் பொது விஷயங்களில் நடக்கும் தவறுகளை உணரும்போது உடனே கோபம் வரும்."

"தெருவுல தண்ணீ பிடிக்க வர்றவங்க, தண்ணீயை வழிய வழிய வீணாக்குனா, எதுக்கு இப்படி பண்றீங்கன்னு சண்டைக்கு போவேன்."

அப்போ அவங்க "நீ என்ன பெரிய கலெக்டரா? கேட்க வந்துட்ட" என்று சொல்வாங்க.

"அடிக்கடி என் காதுகளில் ஒலித்த அந்த வார்த்தைகள்தான், அந்த உணர்வுதான் எனக்குள்ள "நாம ஏன் கலெக்டருக்கு படிக்கக் கூடாது" என்ற ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது" எனும் பெனோ ஸெஃபைன், தான் கடந்து வந்த பாதையை நினைவுகூர்கிறார்.

அப்பா லூக் அந்தோனி சார்லஸ் ரயில்வே ஊழியர். அம்மா மேரி பத்மஜா வீட்டை கவனித்து வந்தார். இவர்களின் ஒத்துழைப்பும் ஊக்கமும்தான் இங்குவரை நான் வளரக்காரணம்.

இளம் பருவ கல்வி, சென்னையில் உள்ள லிட்டில் ஃப்ளவர் ஸ்கூல் ஃபார் பிளைண்ட் என்ற பார்வைத்திறன் சவால்கள் கொண்டவர்களுக்காக நடத்தப்பட்ட பள்ளியில் அமைந்தது.

எங்களுக்குள் குறைபாடு என்பது இருப்பது தெரியாத வகையில் எங்களை வழிநடத்திய ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் பார்த்துக் கொண்டார்கள்.

அதன் பிறகு கல்லூரி பருவம் தொடங்கியது. அந்த நேரத்தில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் பட்டப்படிப்பில் சேர்ந்தபோது, சிவில் சர்வீஸ் தேர்வு எழுத, ஒரு டிகிரி வேண்டும். அதற்கு முதலில் தேர்ச்சி பெற வேண்டும் என நினைத்தேன்.

அப்போது எனது அப்பாவிடம், "இனி எனது எதிர்காலத்தையொட்டியே படிப்பு அமையப்போகிறது. அதனால், பட்டப்படிப்பின் முதலாவது ஆண்டில், என்னைச்சுற்றிய நிகழ்வுகளை அனுபவிக்கப்போகிறேன். பிறகு இரண்டு, மூன்றாவது ஆண்டுகளில் முழுமையாக கவனம் செலுத்திப் படிக்கப்போகிறேன்" என்று கூறினேன்.

அந்த சுந்திரத்தை எனது பெற்றோர் எனக்கு வழங்கினார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கம், துணிச்சல், என் மீது வைத்த நம்பிக்கை, பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பை முடித்து விட்டு, சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ மேல்படிப்பைத் தொடர என்னைத் தூண்டியது.

அந்தக்கல்லூரி வாழ்க்கை, சூழல், நண்பர்கள் எனக்குள் ஒரு தலைமைப்பண்பை மேம்படுத்திக் கொள்ளத் தூண்டியது. மக்களை நேரடியாக சந்திக்கும் திட்டத்தின்படி, பல வாய்ப்புகளை எனக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சி திட்டமிடல், ஒருங்கிணைத்தல் திறன் வாய்ப்புகள் எனக்கு அங்குதான் அமைந்தன.

தகுதிகளை மேம்படுத்திய கல்லூரி வாழ்க்கை

பார்வைத்திறன் சவால்களை எதிர்கொண்டு சமூகத்தில் தனித்துவத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வளரும் சூழலை கல்லூரி வாழ்க்கை எனக்குக் கொடுத்தது.

இந்த கட்டத்தில்தான், 2012-இல் எனது லட்சியத்தை எட்டும் சிவில் சர்வீஸ் கனவை நனவாக்க முற்பட்டேன். அடிப்படை தகுதிகளை வளர்த்துக் கொண்டு முதல் முறையாக முதல்நிலைத் தேர்வில் வென்றபோதும், அதற்கு அடுத்த நிலையில் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை.

அங்குதான் எனது பார்வைத்திறன் சவாலின் முதலாவது அனுபவம் கிடைத்தது.

எனது முதலாவது மெயின்ஸ் தேர்வின்போது, எனக்கு தேர்வெழுத உதவும் நபருடன் ஒருவித அசெளகர்யத்தை உணர்ந்தேன். எனது மனதில் பட்ட பதிலை அவரிடம் விவரிப்பது மிகவும் கடினமாக இருந்தது. தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கையை இழந்தேன்.

இதனால், நான் மனம் தளர்ந்து விடக்கூடாது என்பதற்காக, எனது அப்பா மிகவும் என்னை ஊக்கப்படுத்தினார்.

"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத இன்னும் வாய்ப்புகள் உள்ளன. இடைப்பட்ட காலத்தில் மனம் தளராமல் மற்ற தேர்வுக்கு தயாராகு" என அறிவுறுத்திய அப்பா, வங்கிப் பணிகள் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுத ஊக்கம் கொடுத்தார்.

அந்த தேர்வை எதிர்கொள்ள சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரான அனுபவம் கைகொடுத்தது. அதனால் தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுதி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தி்யாவில் ப்ரொபேஷன் ஆஃபிசர் பணியில் சேர்ந்தேன்.

நான் எதிர்பார்த்தது போல இல்லாமல், மிகவும் ஒத்துழைப்பை வழங்கக் கூடியவர்களாக எனது வங்கி ஊழியர்களும், உயரதிகாரிகளும் என்னை ஊக்குவித்தனர்.

கை கொடுக்கும் மென்பொருள்

JAWS என்ற Job access with speech தொழில்நுட்ப மென்பொருள் உதவியுடன் எனது பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு அமைந்தது.

பார்வைத்திறன் சவால் மிக்கவர்கள், 'ஒலி' மூலம் கேட்டுப் புரிந்து கொள்ளவும், காது கேளாதோர் கணினி திரையில் எழுத்துக்களை பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையிலும் 'ஜாஸ்' மென்பொருள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் அண்ணா நகர் மேற்கு, திருவள்ளூர், சாந்தி காலனி உள்பட வங்கிக்கிளைகளில் நான் பணியாற்றிய இரண்டு ஆண்டு காலத்தில், எனக்கு பெரும்பாலும் வாரா கடன்களை வசூலிக்கும் பணி வழங்கப்பட்டது.

எனது பேச்சுத்திறன், கடன் தவணைகளை முறையாக செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் பேசி, தவணைகளை ஒழுங்காக செலுத்த வேண்டிய அவசியத்தை அவர்களுக்குப் புரிய வைக்க உதவியது.

இந்த கட்டத்தில்தான் எனது இ்ரண்டாவது முயற்சியாக மீண்டும் யுபிஎஸ்சி தேர்வை எழுதினேன். இம்முறை முதல்நிலை தேர்விலும் மெயின்ஸ் தேர்விலும் வெற்றி கிடைத்தது. தேசிய அளவில் 343-ஆவதாக வந்தேன்.

இந்த முயற்சிக்கு நான் பயின்ற ஐஏஎஸ் பயிற்சி நிலையங்கள், பயிற்சியாளர்கள், எனது குடும்பத்தினரில் குறிப்பாக எனது அம்மா, இடைவிடாது ஊக்கம் தந்த அப்பா, எனது நண்பர்களுக்கு நன்றி கூறியே தீர வேண்டும்.

"ஜாஸ்" மென்பொருள் எனது வேலைத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவினாலும், எனக்கு தேவையான பொது அறிவை புத்தகங்களில் இருந்து பெறுவதற்கு எனது அம்மாதான் மிகவும் உதவிகரமாக இருந்தார்.

நான் தேர்வு செய்யும் புத்தகங்களை படித்து, எனக்கு புரியும் வகையில் அதை விவரிக்கக் கூடியவராக எனது அம்மா இருந்தார். அரசியலமைப்பு சட்டங்கள், பொது அறிவு, இலக்கிய நாவல்கள் என பலதரப்பட்ட துறைகளில் எனது படிக்கும் ஆர்வத்தை தூண்ட எனது அம்மாவின் உறுதுணை முக்கிய காரணம்.

ஒரு வழியாக இருநிலை தேர்வுகளை எழுதி விட்டு வெளியில் எனது நண்பர்களோடு இருந்த நேரத்தில்தான் யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகவல் எனக்கு வந்தது.

அப்போது, "எதையோ சாதித்து விட்டது" போன்ற உணர்வுதான் முதலாவதாக வந்தது. நேர்முக தேர்வுக்கு செல்லும் முன்பாக, முதல் இரு நிலைத்தேர்வுகள் எழுதிய பலருக்கும் தேர்ச்சி முடிவுகள் சாதகமாக அமையாத நிலையில், எனக்கு நேர்முக நேர்காணலுக்கான வாய்ப்பு அமைந்தது, எனக்குள் மிகப்பெரிய சமூகப்பொறுப்பு காத்திருப்பது போன்ற உணர்வைத் தந்தது.

"சிவில் சர்வீஸ் பணியில் சேருவோர், அவர்களாகவே தேர்வுக்கு தயாராகி தங்களை தயார்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்கிறார்கள். யாரையும் யுபிஎஸ்சி நேரில் வந்து வேலைக்கு அழைப்பதில்லை. அத்தகைய நேர்முக நேர்காணல் வாய்ப்பு நமக்கு வரும்போது, அதை சரியான முறையில் இனி பயன்படுத்த வேண்டும்" என்ற ஒற்றை எண்ணம்தான் என்னை வழிநடத்தியது.

45 நி்மிட நேர்காணல்

அந்த நம்பிக்கையுடன் டெல்லியில் யுபிஎஸ்சி நேர்முக தேர்வுக்கு சென்றேன். மிகப்பெரிய அரங்கில் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள், சுமார் 40 முதல் 45 நிமிடங்கள்வரை நேர்காணல் செய்தனர்.

நமது கல்வி அறிவை பரிசோதிக்கும் தேர்வாக இல்லாமல், நமது தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் ஆற்றல், புரிந்து கொள்ளும் திறன், வெளிப்படையாக பேசும் ஆற்றல், சி்ந்தனை தெளிவு போன்றவற்றை அறிவதற்காகவே அந்த நேர்முகத் தேர்வு நடத்தப்படுவதாக நான் உணர்ந்தேன்.

எனது நேர்முக நேர்காணல் அறையில் இருந்த அனைவரும் என்னிடம் கேள்விகளை கேட்டார்கள். எனது சிறப்புத்திறன் பற்றி கேட்டார்கள். வடகிழக்கு மாநில சூழ்நிலை, தீவிரவாதம், மாவோயிஸம், ஊழல், பெண்கள், சுற்றுச்சூழல், பொருளாதாரம், செல்பேசி சேவை, இந்திய வெளியுறவு கொள்கை என பலதரப்பட்ட கலவையாக கேள்விகள் கேட்கப்பட்டன.

குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டபோது, புவிசார் கேந்திர முக்கியத்துவம் (Geo-strategy) பற்றி பேசினேன். அந்த பதில்தான் இப்போது என்னை வெளியுறவு பணியில் அமர வைத்திருக்கிறது என கருதுகிறேன்.

காரணம், அதுவரை பொது விவகாரங்களைச்சுற்றியே அமைந்த நேர்காணலும் எனது பதில்களும், புவிசார் கேந்திர முக்கியத்துவம் பற்றிய எனது பதிலால் அதை மையப்படுத்தியே கேட்கப்பட்டன.

திருப்பத்தை ஏற்படுத்திய கேள்வி

"யுபிஎஸ்சி உறுப்பினர்களில் ஒருவர், எனது அந்த வார்த்தைக்கான பதிலை, புரிதலுடன் விவரிக்க முடியுமா?" என கேட்டார்.

சற்றும் தாமதிக்காமல், கன்னியாகுமரிக்கும், கேரளத்துக்கும் இடையே ஒரு வர்த்தகம் நடப்பதாக இருந்தால், அது எளிதாக நடக்கும். அதற்குக் காரணம், இரு வேறு மாநிலங்கள் ஆக இருந்தாலும், அந்த இரு பகுதிகளுக்கு இடையிலான புவிசார் ஒத்துழைப்பு என்றேன்.

அதுவே நாடுகளாக இருந்தால், வங்கதேசத்துக்கும் மியான்மாருக்கும் இடையிலான உறவையும் நெருக்கத்தையும் பற்றிக் குறிப்பிட்டு மற்ற நாடுகளின் கொண்டிருக்கும் பிராந்திய உதாரணங்களை மேற்கோள் காட்டினேன்.

பிறகு சீன பொருளாதாரம், சீனா-இந்தியா இடையிலான வர்த்தக எதிர்காலம் பற்றி கேட்டபோது, சீன வர்த்தகம், உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி குறித்தும் அதன் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு குறித்து பேசினேன்.

அதேசமயம், தரம் என வரும்போது இந்திய பொருட்களுக்கான தேவையும் வரவேற்பும் எப்போதும் குறையாது என்பதாக எனது பதில் அமைந்தது.

புவிசார் கேந்திர முக்கியத்துவம் தொடர்பான இடைவிடாத கேள்விச்சுற்றுகளுக்கும் அவற்றுக்கு நான் அளித்த பதிலுக்குப் பிறகும் ஒரு வித அமைதி அறையில் நிலவியது. அதைத்தொடர்ந்து சில கேள்விகளுடன் எனது நேர்காணல் முடிவடைந்தது.

பிறகு அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு நேர்காணல் அறையை விட்டு வெளியே வந்தபோது, மிகப்பெரிய சாதனை புரிந்ததாக உணர்ந்தேன்.

"எனக்கு வேலை கிடைக்கிறதோ இல்லையோ, இந்த ஒரு அனுபவமே போதும்" என திருப்திநிலைக்கு வந்தேன்.

சில மாத காத்திருப்புக்கு பிறகு அந்த அழைப்பு எனக்கு வந்தது. இந்திய சிவில் சர்வீஸ் பணியில் முதலாவதாக 100% பார்வைத்திறன் சவால்களை எதிர்கொள்ளும் எனக்கு, இந்திய வெளியுறவுப் பணி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனது பொதுவாழ்வுக்கான சமூக பொறுப்பு அங்கிருந்து வலுப்பெற்றது.

மிஸ் லபாஸ்னா ஆக தேர்வு

பள்ளி, கல்லூரி, வங்கிப்பணி ஆகியவற்றில் அதே ஒத்துழைப்பும், அரவணைப்பும் எனக்கு சிவில் சர்வீஸ் பயிற்சியின்போதும் கிடைத்தது. லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி மையத்தில் முதல் கட்ட பயிற்சிக்கு சென்றபோது, சக பயிற்சி அதிகாரிகள், பயிற்சியாளர்கள், தலைமைப்பண்புக்கு நம்மை தயார்படுத்தினார்கள்.

குழு விவாதங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் திறமையை வெளிப்படுத்த சரியான வாய்ப்பை வழங்கினார்கள். எனது பிரிவில் என்னை "மிஸ் லபாஸ்னா" (லால்பகதூர் ஸாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி மையம்) என அழைத்து உற்சாகமூட்டினார்கள்.

இரண்டாம் கட்டமாக வெளியுறவுப் பணி அதிகாரிகளுக்கான பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடிந்தது. பிறகு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மொழிசார் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்திய வெளியுறவு பணியில் சேரும் ஒவ்வொரு அதிகாரியும், தங்களுடைய தாய்மொழி, தேசிய மொழி அல்லாது வேறு நாட்டு மொழி ஒன்றில் புலமை அல்லது அடிப்படை அறிவு பெற்றிருப்பது அவசியம்.

அந்த அடிப்படையில் பாரிஸ் பயிற்சி எனக்கு கை கொடுத்தது. எனது மாற்றுத்திறன் வாய்ப்பை கவனத்தில் கொண்டு, எனக்காக பிரத்யேகமாக ஒரு முழு நேர ஆசிரியர் ஒதுக்கப்பட்டு அவரது மூலம் பயிற்சியை நிறைவு செய்தேன்.

இப்படியாகச்செல்லும் எனது வாழ்வில் இப்போது டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றும் கட்டம் வந்திருக்கிறது.

இதற்கிடையே, 2016-இல் ஜோசஃப் கிளெமென்ட் ராஜ் என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது. தீயணைப்பு பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருந்த அவர், இப்போது எனக்காகவும் எங்களின் இரு குழந்தைகளை பராமரிப்பதற்காகவும் பணியைத் துறந்து எங்களை ஆதரித்து வருகிறார்.

எனது இந்த சமூகப்பணிக்கான வாழ்வில் கற்றுணர்ந்த அனுபவத்தை பிறருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

5 அறிவுரைகள்

"ஐஎஃப்எஸ், ஐஏஎஸ், ஐபிஎஸ் மட்டுமல்ல, வேறு எந்த அரசுத்துறை தேர்வானாலும் அடிப்படையில் நமக்கு இருக்க வேண்டிய தகுதிகள், லட்சியப்பார்வை, திட்டமிடல், நேரம் வகுத்தல், அவற்றை செயல்படுத்தும் சூழலை வளர்த்துக் கொள்ளுதல், பொறுமை - இந்த தகுதிகள் அடிப்படையில் இருந்தால், அடுத்த தகுதியாக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு செய்யும் வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

எந்நேரமும் புத்தகமும் கையுமாக இருப்பதை விட, நம்மைச் சுற்றிய வாழ்க்கைச் சூழல், அணுகுமுறைகளில் கவனம் செலுத்தி பண்புகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

வெறும் கை என்பது மூடத்தனம், தன்னம்பிக்கையை மூலதனம். இதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டால் வெற்றி தாமதமானாலும் அது நிச்சயம் ஒருநாள் கைகூடும்" என்றார் பெனோ ஸெஃபைன்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST