கொரோனா காலத்தில் சிறப்புக்குழந்தைகளை மகிழ்விக்க பெற்றோர் செய்வது என்ன?
- பிரமிளா கிருஷ்ணன்
- பிபிசி தமிழ்

பட மூலாதாரம், மகாலக்ஷ்மி
மகள் நித்யஸ்ரீயுடன் தாய் விஜயலக்ஷ்மி
கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையைச் சேர்ந்த 14 வயது நித்யாஸ்ரீ, பாசிமணிகள் கோர்ப்பது, கீரை கிள்ளுவது போன்ற வேலைகளை கற்றுக்கொண்டாள். "ஆட்டிசம்" தன்மை கொண்ட சிறப்புக் குழந்தையான நித்யாஸ்ரீயை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள அவரது தாயார் விஜயலட்சுமி, பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டார்.
ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்லமுடியாது என்பதை நித்யஸ்ரீக்கு புரியவைக்க ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது என்கிறார் விஜயலட்சுமி. வீட்டு வேலை தொழிலாளரான விஜயலட்சுமி வருமானம் இல்லாமல் வருந்தியதை விட, பள்ளிக்கூடம் செல்லாமல் மகள் வீட்டில் முடங்கி இருந்ததை எண்ணி வருந்தியது அதிகம் என்கிறார்.
''முதலில் குழந்தையை எப்படி சமாளிப்பேன் என்ற பயத்தோடு இருந்தேன். ஆட்டிசம் குழந்தை என்பதால், அவள் தினமும் செய்யும் வேலைகளை தொடர்ந்து செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருப்பாள். தினசரி நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், அவளால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதிக சத்தம் போடுவாள், அவளுக்கு புரியவைப்பதும் சிரமம். வீட்டை எப்போதும் பூட்டி வைத்திருப்பேன். அவளுக்கு வீட்டுக்குள் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யலாம் என யோசித்தேன். வீட்டில் உள்ள பொருட்களை மாற்றி அமைப்பதில் தொடங்கினேன்,'' என்கிறார் விஜயலட்சுமி.
அடுத்த நாள் என்ன வேலைகளை மகளுக்கு கொடுக்கலாம் என பட்டியல் எப்போதும் தயார் செய்துகொள்வார் விஜயலட்சுமி. வண்ணங்களில் மகளுக்கு விருப்பம் என்பதால், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கை வேலைப்பாடு பயிற்சிகள் செய்வதில் மகளை ஈடுபடுத்தியதாக அவர் கூறுகிறார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
தினமும் சமையல் வேலையில் மகளை ஈடுபடுத்தியபோது, அவள் கவனமாக வேலைகளை செய்வதை பார்த்து வியந்திருக்கிறார் விஜயலட்சுமி.
''கீரை கிள்ளும் போது, அவளுக்கு ஒரு வேலை செய்வது போல இருக்கும் என கற்றுக்கொடுத்தேன். மிகவும் சரியாக செய்வதோடு குப்பைகளை அகற்றி தூய்மை செய்துமுடிப்பது வரை செய்கிறாள். அவளாகவே அப்பளம் சுட்டு எடுக்கிறாள். அவளது முன்னேற்றத்தைப் பார்க்கையில், ஊரடங்கு பற்றிய கவலையை மறந்தேன், என் மகள் ஒரு சில வீட்டு வேலைகளை அவளாகவே செய்துவிடுவாள் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது,''என்கிறார் விஜயலட்சுமி
உறவினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடியை ஓரளவு எதிர்கொண்டார் விஜயலட்சுமி. ''அவ்வப்போது ஆசிரியர்களிடம் பேசுவேன்.அவர்களிடம் இருந்து அவளை ஒரு நாளில் பெரும்பாலான நேரத்தை அவள் சரியாக செலவிட என்ன வேலைகளை கொடுக்கலாம் என விசாரித்தேன். ஒரு நாள் விதவிதமான பாசிமணிகளை கோர்க்க செய்தேன். அழகான கைவேலைப்பாடுகளை எளிமையாக செய்துவிடுகிறாள் என்பது எனக்கு மகிழ்ச்சி,'' என்கிறார் அவர்.
மற்றொரு சிறப்புக் குழந்தையின் தந்தை ஜெயகோபி, தன் மகனுடன் சேர்ந்து பாடத் தொடங்கியுள்ளார்.
ஆன்லைன் வகுப்பில் மகன் விஜய் ஆனந்த் கலந்துகொள்வது தனக்கு ஆறுதலாக இருக்கிறது என்கிறார் ஜெயகோபி. மூளைவளர்ச்சி குறைபாட்டால், தற்போது 31 வயதாகும் விஜய் ஆனந்த், 15 வயதுள்ள குழந்தைக்கான திறன்களை கொண்டிருப்பதாக இவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், ஜெயகோபி
மகன் விஜய் ஆனந்துடன் தந்தை ஜெயகோபி
''தினமும் காலை எளிமையான உடற்பயிற்சிகள் செய்யவைப்பது, ஆன்லைன் வகுப்புகள் கவனிப்பது என்பதுடன் தற்போது பாட்டு பாடுவது என் மகனுக்கு பிடித்திருக்கிறது. இதை கொரோனா காலத்தில்தான் கண்டறிந்தேன். கொரோனா பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை தெளிவாக சொல்கிறான். யார் வெளியில் சென்றாலும், முகக்கவசம் அணிந்துகொண்டுதான் போகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான்,''என்கிறார் ஜெயகோபி.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மூலம் செயல்படும் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் நித்தியஸ்ரீ, விஜய் ஆனந்த் உள்ளிட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
அந்த சிறப்புப் பள்ளி ஆசிரியரான மகாலட்சுமியிடம் பேசியபோது, சிறப்பு குழந்தைகளில் பல விதம் உண்டு என்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான பயிற்சிகள் தேவைப்படுகின்றன என்கிறார்.
''நான்கு வகை சிறப்பு குழந்தைகள் இருக்கிறார்கள். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், ஆட்டிசம் குழந்தைகள், செரிப்ரல் பால்சி குழந்தைகள் மற்றும் டௌன் சின்ட்ரோம் குழந்தைகள். இவர்கள் அனைவர்க்கும் ஒவ்வொரு திறன் அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும். இவர்களின் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு வேலை கொடுத்தால், மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பார்கள். ஓய்வை அதிகம் விரும்பாத குழந்தைகளும் இருக்கிறார்கள். அதனால் பெற்றோர் முழுகவனத்துடன் ஊரடங்கு காலத்தில் இருக்கவேண்டும்,'' என்கிறார் விஜயலட்சுமி.
''சிறப்பு குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வந்தாலும், அவர்களை பழையபடி படிக்கவைப்பதற்கு மேலும் ஒரு ஆண்டு கூட தேவைப்படும். பாதுகாப்பு கருதி ஆன்லைன் வகுப்பு நடத்துகிறோம். ஆனால் நேரில் நின்று சொல்லிக்கொடுக்கும் அனுபவம்தான் இந்த குழந்தைகளுக்கு ஏற்றது. பெற்றோர் பலரும் போன் செய்து குழந்தைக்கு என்ன மாதிரியான வேலைகளை கொடுக்கலாம் என கேட்டறிகின்றனர். ஒரு சில நேரத்தில் குழந்தைகளையே கட்டுப்படுத்த முடியவில்லை என சொல்லும்போது கவலையாக இருக்கும். ஆனால் போனில் குரல் கேட்டதும், குழந்தைகள் அன்புடன் பேசும்போது, ஆறுதலாக இருக்கும். ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நாட்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்,''என்கிறார் மகாலட்சுமி.
பிற செய்திகள்:
- அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி; பிரணாப் தொடர்ந்து கவலைக்கிடம்
- ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுங்கள்: தலைவர்கள், சூழலியல் அமைப்பு கோரிக்கை
- குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவதை பெண்கள் எதிர்ப்பது ஏன்?
- தொடரும் பாலியல் குற்றங்கள்: யோகியின் ராம ராஜ்ஜியத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
- ஃபேஸ்புக் விளக்கம்: பாஜகவுக்கு துணை போவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
- சீனாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்து படைப்புரிமைக்கு ஒப்புதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: