தமிழர் மருத்துவ முறை: அம்மை முதல் கொரோனா வரை கைக்கொடுக்கும் வைத்தியம் - பெரிதாக கவனிக்கப்படாதது ஏன்? #தமிழர்_பெருமை

  • விஷ்ணுப்ரியா ராஜசேகர்
  • பிபிசி தமிழ்
அம்மை முதல் கொரோனா வரை கைகொடுக்கும் தமிழர் மருத்துவ முறை: கவனிக்கப்படாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் ஐந்தாவது கட்டுரை.)

தமிழகர்களின் பாரம்பரிய மருத்துவ முறை என கருதப்படும் சித்த மருத்துவ முறை பல பெருந்தொற்று காலங்களை கடந்து இன்று கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தனது பங்கை ஆற்றி வருகிறது.

ஏன் எல்லை கடந்து பயணிக்கவில்லை?

சித்தர்களால் பழங்காலத்தில் எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள மருத்துவ குறிப்புகளின்படி வைத்தியம் பார்ப்பது அல்லது மூலிகை தயாரிப்பது, சித்த மருத்துவமுறை என கருதப்படுகிறது. இந்த சித்த மருத்துவம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறையாக கருதப்பட்டாலும், ஆங்கில மருந்துகளை போன்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு நவீன அறிவியல் மொழியில் அதனை இயற்றாமல் போன காரணத்தால் இந்த மருத்துவமுறை தமிழகத்தை தாண்டியும், உலகளவிலும் பரவிச் செல்ல முடியாமல் போனது  என்கின்றனர் சித்த மருத்துவம் சார்ந்து பணிபுரியும் நிபுணர்கள்.

பட மூலாதாரம், Getty Images

மேலும் சித்த மருத்துவ குறிப்புகள் பெரும்பாலும் தமிழ் மொழியில் இருப்பதால், இதற்கான எல்லையும் சிறியதாக இருப்பதாக கருதுகிறார்கள் நிபுணர்கள். ஆனால்  தற்போது சித்த மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகள் ஏராளமாக நடைபெற்று வருகின்றன.

அம்மை நோயிலிருந்து கொரோனா வரை

"இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்துவருகின்றனர். இதுவரை மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் சித்த மருத்துவ முறையால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்" என்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு.

இந்த சித்த மருத்துவ முறையில் இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

தமிழகத்தை பொருத்த வரை, சித்த மருத்துவ முறையை பயன்படுத்துவது இது முதல்முறை அல்ல. அதாவது முதன்மை மருத்துவமாக பயன்படுத்தாவிட்டாலும், நிலவேம்பு, கபசர குடிநீர் போன்ற சித்த மருத்துவ மருந்துகள் இதற்கு முன்பே அரசாங்கத்தாலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

இப்போது இந்த கொரோனா காலத்தில் கபசுர குடிநீரை வழங்கலாம் என மத்திய ஆயுஷ் அமைச்சகமும் வழிகாட்டுதல் தந்துள்ளது.

ஆனால் சித்த மருத்துவ முறை என்பது கொரோனா மட்டுமல்லாமல் பல பெருந்தொற்று காலங்களை கடந்து வந்து கொண்டிருக்கிறது என்கிறார் தேசிய சித்தா இன்ஸ்டியூட்டில் மருத்துவ அதிகாரி மற்றும் இம்காப்ஸின் துணை தலைவராக பணியாற்றிய சித்த மருத்துவர் வேலாயுதம்.

"பழைய நோய்களில் ஒன்றான அம்மை நோயை பொறுத்தவரை தனிமைப்படுத்துதல் போன்ற முறையை நாம் பாரம்பரியாமாகவே கடைபிடித்து வருகிறோம். மஞ்சள்காமாலை போன்ற தீவிரமான நோயாக இருக்கும்பட்சத்தால், கீழாநெல்லி, ஆமனக்கு இலைக் கொழுந்து, கரிசாலாங்கண்ணி போன்ற மூலிகைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. நிலவேம்பு மற்றும் பப்பாளிச்சாறு டெங்குவிற்கு பயனளிக்கக்கூடியதாக உள்ளது என்பதை அரசாணையாக பிறப்பித்துள்ளனர்." என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

படக்குறிப்பு,

சித்த மருத்துவர் வேலாயுதம்

"டெங்குவிற்கும் முன் 2007ஆம் ஆண்டு சிக்கன் குனியா வந்தபோதே நிலவேம்பு கசாயத்தை கொடுத்து சோதித்து பார்த்தோம் அது நன்றான ஒரு விளைவை ஏற்படுத்தியது. டெங்குவுக்கான சித்த மருத்துவமாக நிலவேம்பு குடிநீரை கொடுத்தபோது அது காய்ச்சலுக்கான அறிகுறியை தவிர்த்ததே தவிர ப்ளேட்லட்சை கூட்டவில்லை எனவே நிலவேம்பு குடிநீருடன் பப்பாளி இலைச் சாறை கொடுத்தோம். ஹெ1 என்1 சமயத்தில் கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது," என்கிறார் வேலாயுதம்.

"தற்போதுள்ள கொரோனா வைரஸும் ஒரு சார்ஸ் வகையை சேர்ந்த வைரஸ் என்பதால் இதற்கும் கபசுர குடிநீர் பருகலாம் என்று பரிந்துரைத்தோம்," என்கிறார் மருத்துவர் வேலாயுதம்.

"எனவே அம்மை நோயிலிருந்து, மஞ்சள் காமாலை, டெங்கு, சிக்கன் குனியா, ஹெச்1 என்1, தற்போது கொரோன வரை இந்த அனைத்து வைரஸை எதிர்கொள்வதில் சித்த மருத்துவமுறை மிகவும் பலனளிக்கக்கூடியதாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்," என்கிறார் அவர்.

கொரோனாவுக்கு சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3000க்கும் அதிகமானோர் சித்த மருத்துவ முறையால் குணமடைந்துள்ளனர் என்கிறார் மருத்துவர் வீரபாபு.

பட மூலாதாரம், Getty Images

"முதலில் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் 465 படுக்கைகள் அமைக்கப்பட்டு, அங்குள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 3200க்கும் மேலானோர் இந்த சித்த மருத்துவ சிகிச்சை முறைப்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்" என்கிறார் வீரபாபு.

கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்தை முதன்மைப்படுத்தி சிகிச்சை அளித்தாலும் சில சமயங்களில் தேவைப்பட்டால் பாரசிடமல் போன்ற மருந்துகளையும் நோயாளிகளுக்கு கொடுக்கின்றோம் என்கிறார் அவர்.

தமிழ் இலக்கியங்களில் சித்த மருத்துவக் குறிப்புகள்

பட மூலாதாரம், Getty Images

எந்த ஒரு கோட்பாடும் எக்காலத்துக்கும் உரியதாக இருந்தால் அது காலங்களால் கடத்தப்படுவது இயல்பாக நடந்து கொண்டிருக்கும். அந்த வகையில் இன்றளவில் தோன்றிய ஒரு பெருந்தொற்றுக்கான மருத்துவ முறை சித்த மருத்துவ முறையில் இருந்தாலும், சங்க கால இலக்கியங்கள் மற்றும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பல மருத்துவக் குறிப்புகள் காணப்பட் கூறுகின்றனர் சித்த மருத்துவம் சார்ந்த நிபுணர்கள்.

"தொல்காப்பியம், சீவகசிந்தாமணியில் பல்வேறு மருத்துவக் குறிப்புகள் காணப்படுகின்றன. அறுவை சிகிச்சை குறிப்புகள், அரண்மனை வைத்தியசாலை, போர் நடக்கும்போது நோய்தொற்று ஏற்படாமல் தடுப்பது போன்ற மருத்துவக்குறிப்புகள் இந்த நூல்களில் காணப்படுகின்றன," என்கிறார் சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்.

தமிழும் சித்த மருத்துவமும்

சித்த மருத்துவக் குறிப்புகளை எழுதிய சித்தர்கள் தமிழ் புலவர்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் ஜெய வெங்கடேஷ்.

படக்குறிப்பு,

மருத்துவர் ஜெய வெங்கடேஷ்

"பல்வேறு சித்தர் பாடல்களை நாம் பார்த்தோமேயானால், இலக்கண அமைப்புகளுடன் காணப்படும். இதன்மூலம் சித்தர்கள் மொழியோடு இணைந்தே இருந்தனர் என்பது தெரிகிறது. அதாவது சித்தர்கள் தமிழ் புலவர்களாகவும் இருந்தனர்," என்கிறார் ஜெய் வெங்கடேஷ்.

பட மூலாதாரம், Getty Images

மேலும், "தொல்காப்பியம் போன்ற நூல்களில் மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதறகான சான்றாக மண்டை ஓட்டில் ஓட்டை இருக்கும் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியாக திருநெல்வேலியில் ஓட்டை உள்ள மண்டை ஓடுகள் கிடைக்கப்பெற்று அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அது சுமார் 1500ஆண்டுகளுக்கு முந்தையதானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த ஓட்டை என்பது அறுவை சிகிச்சை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஓட்டையை போன்று காட்சியளிக்கிறது." என்கிறார் அவர்.

சித்த மருத்துவத்தின் சிறப்புகள்

சித்த மருத்துவத்தை பொறுத்தவரை ஒரு நோயையோ அல்லது அதற்கான அறிகுறியையோ குணப்படுத்துவதை மட்டும் செய்யாமல் நோயின் காரணியை கண்டு அதற்கான தீர்வை தருகிறது என்றும், இம்மாதிரியான பெருந்தொற்று நோய்கள் மட்டுமல்லாமல் வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கும் சித்த மருத்துவம் மூலம் தீர்வு ஏற்படலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

"கொரோனா சிகிச்சையை தாண்டி துணை நோய்களுக்கான மருந்தும் சித்த மருத்துவத்தில் இருக்கிறது, மேலும் இது எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் இருப்பதே இதன் சிறப்பு," என்கிறார் வீரபாபு.

'வரையறுக்கப்பட்ட மருத்துவம்'

சித்த மருத்துவத்தை பொறுத்தவரை அனைத்தும் வரையறுக்கப்பட்டதாக உள்ளன என்கிறார் சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்.

பட மூலாதாரம், Getty Images

"மருந்துகள் என்றால் உள்ளே எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்துகள் 32தான்; வெளியே சாப்பிடக்கூடிய மருந்துகள் 32தான்; அதேபோல் நோய்களின் எண்ணிக்கை 4448 என்று அனைத்தும் எண்ணிக்கையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன. உலோகங்கள், அலோகங்கள் எண்ணிக்கை என அனைத்தும் எண்ணிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளன,"

அதேபோன்று, சித்த மருத்துவமுறையில்தான் சிறப்பான ஒரு  புடம்போடுதல் என்ற முறை உள்ளது.

இது ஒரு நானோ மருத்துவமுறை என்கிறார் மருத்துவர் ஜெய வெங்கடேஷ். ஒரு உலோகத்தை மூலிகைச்சாறு விட்டு அரைத்து அரைத்து சாம்பலாக்கி அதில் எந்த மூலக்கூறு மருந்துக்கு பயன்படுகிறதோ அதை தனியாக பிரித்தெடுப்பதை புடம் போடுதல் என்று சொல்கிறார்கள்.

ஆராய்ச்சி முயற்சிகள்

"உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள், 60-70சதவீதக்கும் அதிகமான வயதான நபர்கள், அவர்களின் பாரம்பரிய மருந்துகளை கொண்டுதான் ஆரோக்கியமாக உள்ளனர் என்கிறது. எனவே தமிழர்களின் சொந்த மருத்துவ முறையான சித்த மருத்துவம் இருக்கும்போது அதை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தாரளமாக நிதி ஒதுக்கப்பட வேண்டும்; அவ்வாறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதில் ஆச்சரியமிக்க பல விளைவுகள் கிடைக்கும்," என்கிறார் மருத்துவர் வேலாயுதம்.

சென்னையில் உள்ள சித்தா மெடிக்கல் கவுன்சில் மற்றும் தாம்பரத்தில் உள்ள தேசிய சித்தா இன்ஸ்டிட்யூட்டில் சித்த மருத்தும் குறித்த பல ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை.

"ஒரு மூலிகை ஒரு நோயை குணப்படுத்துகிறது என்றால் எது எவ்வாறு அந்த நோயை குணப்படுத்துகிறது? அந்த மூலிகையில் உள்ள எந்தெந்த பொருள் அந்த நோயை குணப்படுத்துகிறது? என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும் அப்படி நிரூபிக்காததால்தான் இன்றைக்கு சித்த மருத்துவமுறை உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீரிக்கப்படாமல் இருக்கிறது அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே இதை உலகளவில் எடுத்து செல்ல முடியும். இதற்கான முயற்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது," என்கிறார் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் பழ. பாலசுப்ரமணியன்.

நவீனமயமாக்கல்

சித்தர்களின் கூற்றை அதாவது ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டதை, அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்கிறார் பழ. பாலசுப்ரமணியன்.

சென்னையில் உள்ள சித்தா ஆராய்ச்சி மையத்தில் ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்துதல், ஆராய்ச்சி செய்தல், மருத்துவ அளவிலான பரிசோதனைகள் செய்தல் (கிளினிக்கல் ட்ரையல்) ஆகிய பணிகளை செய்து வருவதாக கூறுகிறார் ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர் மருத்துவர் கனகவள்ளி.

மேலும், "இந்த ஓலைச்சுவடிகளிலிருந்து எடுத்த தகவல்களை புத்தகமாக வெளியிட்டதில், 28 புத்தங்களுக்கு ஏற்கனவே ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், மேலும் 78 புத்தங்களை ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம்" என்கிறார் மருத்துவர் கனகவள்ளி.

"Traditional knowledge of digital library மற்றும் மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சில் மூலம், இந்த ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் பல ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடிகளுக்கென்று தனித்துறைகள் இருக்கின்றன அதன் மூலமாகவும் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பட்டு வருகின்றன. இந்த ஓலைச்சுவடிகளில் உள்ள மருந்துகளை மக்களுக்கு பயந்தரும் முறையில் கொண்டு வர வேண்டும்," என்கிறார் முனைவர் பழ. பால சுப்ரமணியன்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST