விநாயகர் சதுர்த்தி: சிலை கரைப்பு குறித்து தமிழக முதல்வரிடம் எல்.முருகன் விளக்கம்

விநாயகர் சதுர்த்தி

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவும் ஊர்வலம் செல்லவும் மாநில அரசு தடைவிதித்திருக்கும் நிலையில், இவற்றை அனுமதிக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்து பாஜக மாநில தலைவர் எல். முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திங்கட்கிழமையன்று இரவு 7 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் எல். முருகன் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சரைச் சந்தித்து 40 ஆண்டுகாலமாக பொதுமக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசாங்கத்தின் சட்டத்திற்கு உட்பட்டு, சமூக இடைவெளியோடு கொண்டாட அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டிருக்கிறோம். ஆலோசித்து சொல்வதாக கூறியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் விழா. தமிழகத்திலும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நாங்கள் அரசு சொல்லும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, வழிபட்டு, கரைப்பதாக சொல்லியருக்கிறோம்" என்றார்.

முதல்வருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாகவும் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மட்டும்தான் பேசியதாகவும் தெரிவித்தார் எல். முருகன்.

விநாயகர் சிலையை வைக்க அனுமதித்தாலும் ஊர்வலம் செல்லாமல் எப்படிக் கரைப்பீர்கள் எனக் கேட்டபோது, "விநாயகர் சிலைகளை கோவில் வாசல்களில், வீடுகளில் வைத்து வழிபட்டுவிட்டு அரசு சொல்லும்படி செய்வோம். பொதுமக்களின் கருத்தையே முதல்வரிடம் தெரிவித்தேன்" என்றும் முருகன் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: