சிபிஐ மோதலால் அறியப்பட்ட ராகேஷ் அஸ்தானா எல்லை பாதுகாப்பு படைக்கு தலைவராகிறார்

ராகேஷ் அஸ்தானா

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து - ராகேஷ் அஸ்தானாவுக்கு புதிய பொறுப்பு

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) சிறப்பு இயக்குநராக முன்பு பதவி வகித்த ராகேஷ் அஸ்தானா எல்லை பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

1984ஆம் ஆண்டு குஜராத் மாநிலப் பிரிவில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான ராகேஷ் அஸ்தானா, 2018இல் சிபிஐ சிறப்பு இயக்குநராக பதவி வகித்த போது அப்போதைய சிபிஐ தலைமை இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுடன் மோதலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையானது.

ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக வழக்கு ஒன்றை பதிவு செய்தார் அலோக் வர்மா.

பின்னர் அந்த வழக்கில் இருந்து ராகேஷ் அஸ்தானா விடுவிக்கப்பட்டார்.

சிபிஐ-இன் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது எனும் நோக்கில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் ராகேஷ் அஸ்தானா மற்றும் அலோக் வர்மா ஆகிய இருவரும் வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டனர்.

நவம்பர் 2018ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநராக அஸ்தானா பதவி வகித்து வந்தார்.

எல்லை பாதுகாப்பு படை மட்டுமல்லாமல் போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் தலைமை இயக்குநராகவும் ராகேஷ் அஸ்தானா கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி - இந்திய பொருளாதாரத்துக்கு கொரோனா வைரஸ் இடர்பாடு

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 16.5 சதவீதம் பின்னடைவைக் காணும் என பாரத ஸ்டேட் வங்கியின் எக்கோராப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது தினமணி செய்தி.

பட மூலாதாரம், ROSLAN RAHMAN

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இடப்பாடுகளால் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 16.5 சதவீதம் பின்னடைவைக் காணும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முந்தைய மே மாதத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 20 சதவீதம் அளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போதைய சூழல்களை கருத்தில் கொள்ளும்போது அதைவிட குறைவாகவே வளா்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி - தமிழகத்தில் இ-பாஸ்

தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்கிறது தினத்தந்தி செய்தி.

17-ந் தேதி (நேற்று) முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் செல்போன் எண்ணை இணைத்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இன்றி உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST