அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி; பிரணாப் தொடர்ந்து கவலைக்கிடம்

பட மூலாதாரம், Getty Images
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாலை 2.30 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென்று சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து குர்கானில் உள்ள மேதாந்தா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவில், வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டதால், வீடு திரும்பினார். எனினும், மருத்துவர்களின் அறிவுரைப்படி இரு வாரம் வீட்டுத்தனிமையில் அவர் ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உடல் சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், திங்கள்கிழமை நள்ளிரவைக் கடந்த வேளையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலையை எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், அமித் ஷாவின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை ஊடகப்பிரிவு தலைவரும் மருத்துவருமான ஆர்த்தி விஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவிட்-19 வைரஸ் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆக வந்த நிலையில், உடல் சோர்வு, மற்றும் உடல் வலி இருப்பதாக அமைச்சர் அமித்ஷா கூறி வந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
மேலும், தற்போது அவர் செளகரியமாக இருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்தபடி பணிகளை செய்து வருவதாகவும் எய்ம்ஸ் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நலம் பெற விரும்பி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தேரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி உடல்நிலை என்ன?
இதற்கிடையே, டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, தொடர்ந்து சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவரது மருத்துவ நிலையில் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை என்றும் ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
கடந்த வாரம் அவர் டெல்லி ராணுவ மருத்துமனையில் சேர்க்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட வழக்கமான உடல்நிலை முன் அறிதல் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது. மேலும், ஆகஸ்ட் 11-ஆம் தேதி அவருக்கு மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. எனினும், உயிர் காக்கும் சுவாசக் கருவிகள் உதவியுடன் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, மகன் அபிஜித் முகர்ஜி ஆகியோர் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: