மூணாறு நிலச்சரிவில் சிக்கிய சடலங்கள்: ட்ரோன் கேமிரா உதவியுடன் மீட்க உதவும் தன்னார்வலர்

மூணாறு நிலச்சரிவில் சிக்கிய சடலங்கள்: ட்ரோன் கேமிரா உதவியுடன் மீட்க உதவும் தன்னார்வலர்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இருக்கும் பெட்டிமுடி எனும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் கடந்த 6-ம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் செவ்வாய்கிழமை வரை 59 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவின் போது ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தால் அடர்ந்த காட்டு பகுதிகளுக்குள் அடித்து செல்லப்பட்ட உடல்களை, கடந்த 8 நாட்களுக்கும் மேலாக மீட்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், மூணாறு பகுதியைச் சேர்ந்த செபின்ஸ்டர் பிரான்சிஸ் என்ற மலையேற்ற பயிற்சியாளர் மற்றும் புகைப்பட கலைஞர், தானாக முன் வந்து ட்ரோன் கேமிராவை பயன்படுத்தி உடல்களை தேடி மீட்டு வருகிறார்.

ட்ரோன் கேமிராவை பயன்படுத்தி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் எப்படி கண்டெடுக்கப்பட்டன, அதில் என்ன என்ன சிக்கல்கள் ஏற்பட்டது என்பது குறித்த தனது அனுபத்தை செபின்ஸ்டர் பிரான்சிஸ் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

"என் நண்பர்கள் மூலமாக இந்த விபத்து குறித்து எனக்கு தெரியவந்தது உடனடியாக நானும் எனது தம்பி மற்றும் நண்பர் ஒருவருடன் புறப்பட்டு, பெட்டிமுடிக்கு வந்து சேர்ந்தோம். இங்கு வந்து பார்த்த பிறகுதான் நாங்கள் நினைத்ததை விட நிலைமை மிக மோசமான, கொடூரமான நிலச்சரிவு ஏற்பட்டு பலரும் இறந்திருப்பதை அறிந்தோம்."

"நான் ஒரு புகைப்படகலைஞர் மற்றும் மலையேற்ற பயிற்ச்சியாளர். அது மட்டும்மின்றி என்னிடம் ட்ரோன் கேமரா இருந்தது. எனவே, இந்த ஆறு பாய்ந்து ஓடும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மீட்பு குழுவினர் சென்று உடல்களை தேட முடியாது என்பதால் உடனடியாக ட்ரோன் கேமிராவை கொண்டு ஒரு மேப் செய்தேன்."

"பின்னர் கூகுள் வரைபடத்துடன் ஒப்பிட்டு காற்றாற்று வெள்ளத்தால் புதிதாக உருவாகிய நீர் ஓட்டத்தை அடையாளம் கண்டு ட்ரோன் கேமிராவை பறக்க விட்டு உடல்களை கண்டெடுத்தேன்" என்று செபின்ஸ்டர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

உறவுகளைத் இழந்தவர்களுக்கு உதவி

"முதலில் உடல்களை பார்த்ததும் இது நமக்கு நடந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்ற மனநிலை தான் எனக்கு தோன்றியது.என்னால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான். முடிந்தளவு உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்து ட்ரோன் கேமராவை பயன்படுத்தினேன். அதில் நல்ல பலன் கிடைத்தது" என்கிறார் செபின்ஸ்டர் பிரான்சிஸ்.

தொடர்ந்து பேசிய செபின்ஸ்டர் பிரான்சிஸ், "நாங்கள் இங்கு வந்த போது கடுமையான மழை,குளிர் காற்று இருந்தது. மழைக்கு குடை கூட பிடித்து நிற்க முடியாத அளவு மழை பெய்தது. அப்போது என் கண் முன்னே ஒரு உடல் மட்டும் தண்ணீரில் இழுத்து சென்று கொண்டிருந்தது."

நானும் என் நண்பரும் உடலை மீட்க இறங்கிய போது அந்த பகுதியில் அதிகமாக மழை பெய்து இருந்ததால் இடுப்பு வரை மண்ணுக்குள் புதைந்தது. பின் எங்கள் குழுவால் என்ன செய்து உடல்களை மீட்க முடியும் என ஆலோசித்து உடல்களை மீட்க ஆரம்பித்தோம்.

6 கி.மீ தூரம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட உடல்கள்

பின் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் ஆறு ஓடும் தண்ணீரை தொடர்ந்து சென்ற போது அங்கு அதிகமான உடல்கள் இருந்தன. ஆனால் எங்களிடம் உடல்களை மீட்டு எடுத்து செல்ல எந்த விதமான பொருட்களும் இல்லாதால் அந்த பகுதியில் கிடைத்த சேலை, இரும்புதகரங்களை கொண்டு உடல்களை மீட்டு பெட்டிமுடி கொண்டு சென்றோம்.

அடுத்த நாள் ஆறு செல்லும் வழித்தடங்களில் ட்ரோன் கேமரா உதவியுடன் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டோம். ஆற்றுப்பகுதியில் எங்கெல்லாம் வண்டல் மண் அதிகளவு தேங்கி இருந்ததோ அங்கெல்லாம் ட்ரோன் கேமிரவை பறக்க விட்டு உடல்களை தேடினோம். முதல் நாளில் இருந்து 12க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன.

ட்ரோன் கேமிரா

"கடுமையான மழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக ட்ரோன் கேமிராவை இயக்குவதில் பல சிக்கல்கள் இருந்தது குறிப்பாக அதிக அடி உயரம் பறக்க விட முடியவில்லை."

"மேலும் அடர்ந்த காடு என்பதால் ட்ரோன் கேமராவை ஆற்று பகுதிக்கு அருகாமையில் கொண்டு செல்ல முடியவில்லை ஆனால,; பல இடங்களில் முடிந்த வரை ஆற்றின் அருகாமைக்கு கொண்டு சென்று உடல்களை மீட்டேடுத்தோம்."

"ட்ரோன் கேமரா பயன்படுத்தி நிலச்சரிவால் இறந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தது எனக்கு மன நிம்மதியை தந்துள்ளது" என்றார் செபாஸ்டின் பிரான்சீஸ்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 1 ஜூன், 2022, பிற்பகல் 2:54 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: