புதுச்சேரி: மனைவியின் உடலை தவறாக அடையாளம் காட்டிய மருத்துவர்கள் - கதறும் கணவர்

  • நட்ராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
புதுச்சேரி: கொரோனா சந்தேகம் - பெண்ணின் உடலை மாற்றி அடக்கம் செய்த அவலம் - கண்ணீர் கதை

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை கொண்டு செல்வதற்கு பதிலாக, தொற்று பாதிப்பு இல்லாத 44 வயது பெண்ணின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் யோகநாதன். இவரது மனைவி குணவேலி(வயது 44) என்பவர் மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்பட்டுக் கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர், அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா பரிசோதனை செய்யும்படி தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது.

இதனையடுத்து, அவரது உடலைப் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்று, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு அவரை பிணவறையில் வைத்தனர். இதுகுறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் அவரது கணவர் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் உயிரிழந்த அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை என ஆய்வறிக்கை வந்ததையடுத்து, அவரது உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு அவரது உடலைப் பெற்றுக்கொள்ள கணவர் யோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் உடன் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, பிணவறையில் சென்று பார்த்தபோது குணவேலியின் உடல் காணவில்லை. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்குப் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடலைத் தேடத்தொடங்கினர்.

இந்நிலையில், உடலை மாற்றிக் எடுத்து சென்றது இன்று(ஆகஸ்ட் 18) இரவு மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக குணவேலி குடும்பத்தினரிடம் மருத்துவக் கல்லூரி உயர் அதிகாரிகள் கூறுகையில், "உடல்நலம் குறைவு காரணமாக இறந்த குணவேலியின் உடல், பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

அதன் அருகில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 70 வயதுடைய மூதாட்டியின் உடல் இருந்தது. மூதாட்டியின் மகள் மற்றும் குடும்பத்தினர் குணவேலி உடலைத் தனது தாய் உடல் என்று அடையாளம் காட்டியுள்ளனர். இதையடுத்து அவரது உடலைப் பெற்றுச் சென்ற அவர்கள் உடலை தகனம் செய்யப்பட்டுள்ளனர்" என்று மருத்துவமனை நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.

இந்த தகவலை குணவேலி குடும்பத்தினரிடம், கோவிட் மருத்துவ நிர்வாகிகள் தெரிவித்து மன்னிப்பு கேட்டனர்.

அப்போது அங்கு இருந்த துணை மாவட்ட ஆட்சியர் சுதாகர், "தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார் கொடுத்தால் அரசு சார்பில் விசாரணை நடத்தப்படும்" என்று உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி குணவேலியின் கணவர் துணை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து உயிரிழந்த குணவேலியின் கணவர் யோகநாதன் கூறுகையில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் எனது மனைவிக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, வீட்டிற்கு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றேன். அங்கு, மருத்துவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு ஆக்ஸிஜன் அளவு முழுவதுமாக குறையவே, அவர் உயிரிழந்துவிட்டார்," என்றார்.

"பிறகு, கொரோனா தொற்று குறித்து உறுதி செய்ய, அங்கிருந்து அவரது உடலைப் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்றோம். அவருக்கு நேற்று(திங்கட்கிழமை) காலை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது.

இதன் பின்னர், இன்று காலை 11.30 மணியளவில் மனைவியின் உடலைப் பெற்றுக் கொள்ள பிணவறைக்குச் சென்று போது, நீண்ட நேரம் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. மேலும், அவரது உடல் வைக்கப்பட்ட இடத்தில் காணவில்லை என்று கூறிவிட்டனர்," என்றார் குணவேலி கணவர் யோகநாதன்.

"அவர் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த போது அவர் உயிருடன் மீண்டு வர வேண்டும், உயிரிழந்து விடக்கூடாது என்ற பயம் இருந்தது. இதையடுத்து அவர் உயிரிழந்த பிறகு, கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவரது உடலையும், முகத்தையும் பார்க்க முடியாதே, உடலை நம்மிடம் ஒப்படைக்க மாட்டார்களே, அவருக்கு முறைப்படி இறுதிச் சடங்கு செய்ய முடியாதே என்ற கவலை இருந்தது. இவை அனைத்தையும் மீறி எனது மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரும் அவரது உடல் கிடைக்கவில்லை என்று சொன்னால், எப்படியிருக்கும்," என்று கண்ணீர் மல்க கூறினார்.

எனது மனைவிக்கு ஈடு செய்ய எதுவுமே இல்லை என்று கூறும் யோகநாதன், தனக்கு ஏற்பட்ட நிலை போல யாருக்கும் ஏற்படக்கூடாது என்கிறார் அவர்.

"தற்போது, நாங்கள் எதிர்பார்ப்பது எனது மனைவியின் உடலைத் தவறாக அடையாள காட்டிய மருத்துவர்கள், அருகே இருந்து உடலை கொடுத்த அதிகாரிகள் என இதில் சம்பந்தப்பட்ட மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் இதைப்போன்ற தவறான செயலை எதிர்காலத்தில், மற்றவர்களுக்கு ஏற்படாமல் இருக்கும் என்று," வேதனையுடன் தெரிவித்தார் யோகநாதன்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST