EIA 2020 பல கோடி இந்தியர்களை ஒன்றிணைத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு

  • சௌதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி இந்தியா
பல கோடி இந்தியர்களை ஒன்றிணைய வைத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு

பட மூலாதாரம், Getty Images

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 என்ற சுற்றுச்சூழல் சட்டம் தொடர்பாக இரண்டு மில்லியன் மின்னஞ்சல்கள் இதுவரை வந்து சேர்ந்துள்ளதால், டெல்லியில் உள்ள அதிகாரிகள் திணறுகின்றனர்.

83 பக்க சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிராக இணையத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 அறிவிக்கையின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும்.

சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 அறிவிக்கையை நிறுவனங்களுக்கு ஏற்றவாறு மத்திய அரசு மாற்றி அமைக்க முனைகிறது என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட இந்த புதிய வரைவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அது முழுக்க பெருநிறுவனங்கள் நலனை மட்டுமே பேணுவதாக இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் இவ்வாறான சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஏன் மத்திய அரசாங்கம் அவசரப்படுகிறது? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மார்ச் 23ம் தேதி இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை குறித்து அறிவிப்பு வெளியானது. எனவே ஜூன் 30ம் தேதி வரை இந்த அறிவிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட காரணங்களால் ஆகஸ்ட் 11ம் தேதி வரை பொது மக்களிடம் கருத்து கேட்கலாம் என கால நீட்டிப்பு அறிவிக்கப்பட்டது.

''விதிப்படி எந்தவொரு வரைவு அறிவிக்கைக்கும் பொது மக்களிடம் 60 நாட்களுக்கு தான் கருத்து கேட்கப்படும். ஆனால் நோய் தொற்று பரவும் இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், 150 நாட்களுக்கு பொது மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க அனுமதி அளித்தோம்'' என்று சுற்றுச்சுழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகிறார்.

மேலும் இந்த வரைவு அறிவிக்கை ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இந்த சட்டத்தால் மாற்றத்தை எதிர்கொள்ளப்போகும் பல மக்களின் மொழிகளில் இந்த வரைவு அறிவிக்கை மொழியாக்கம் செய்யப்படவில்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிவிக்கைக்கு எதிரான மின்னஞ்சல்களை சேகரித்து மத்திய அரசிற்கு அனுப்பிவந்த 3 சுற்றுச்சுழல் அமைப்புகளின் வலைத்தள பக்கங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images

''EIA 2020க்கு எதிரான பிரச்சாரத்தின்போது எங்கள் வலைத்தள பக்கம் 26 நாட்களுக்கு சரியாக செயல்படவில்லை. அதன் பிறகு இறுதியில் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக 3 லட்சம் மின்னஞ்சல்கள் எங்களிடம் வந்து சேர்ந்திருந்தன'' என்று முடக்கப்பட்ட வலைத்தளமான லேட் இந்திய பிரித் என்ற சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த யாஷ் மார்வாஹ் கூறுகிறார்.

இந்தியாவில் சுரங்கங்கள், சாலைகள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகள் என எந்த திட்டம் அல்லது கட்டடங்கள் அமைப்பதற்கும் ''சுற்றுச்சூழல் தகுதியானவை'' என்ற கட்டாய அனுமதி பெறவேண்டும் என்ற சட்டம் 1994ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 100க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் சுற்றுச்சுழலை பாதுகாக்க இவ்வாறான விதிகளையே பின்பற்றி வருகின்றன.

2006 ஆம் ஆண்டு வரை மட்டுமே இந்த சட்டத்தில் 55 முறை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜவடேக்கர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே மீண்டும் மாற்றங்களை கொண்டுவருவதற்கு பதிலாக, புதிய வரைவு அறிவிக்கையையே உருவாக்கிவிடலாம் என மத்திய அமைச்சர் ஜவடேக்கர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் அறிவிக்கையை மாற்றவில்லை என்றும் பிரகாஷ் ஜவடேக்கர் குறிப்பிட்டார்.

ஆனால் மத்திய அமைச்சரின் விளக்கங்கள் நிபுணர்களுக்கு எந்த நம்பிக்கையையும் அளிக்கவில்லை. தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை மீறி பெரிய திட்டங்களை நிறைவேற்ற ஏற்கனவே பல வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக இமயமலைப் பகுதியில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள மலைப்பகுதியில் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்க அனுமதி பெற வேண்டிய சூழல் நிலவியது. ஆனால் மிக நீண்ட தூர நெடுஞ்சாலையை பல சாலைகளாக பிரித்து, பல திட்டங்களாக மாற்றி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் வகையில் அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கும் அனைத்து சாலைகளுமே 100 கிலோமீட்டரைவிட குறைவானவை. 100 கிலோமீட்டருக்கு மேல் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கே சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு சட்டத்தின் கீழ் அனுமதி பெற வேண்டும்.

நிலக்கரி சுரங்கங்கள், பாலங்கள், மிக பெரிய தொழிற்சாலைகள், குடியிருப்புகள் என இவை அனைத்தையும் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட 223 திட்டங்களை தேர்ந்தெடுத்து ஆராய்ச்சியாளர்கள் காஞ்சி கோஹ்லி மற்றும் மஞ்சு மேனன் ஆகிய இருவரும் ஆராய்ச்சி செய்தனர். ஒரு சில திட்டங்களுக்கு 'காடுகளை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்', மீண்டும் செடிகளை பெரிய எண்ணிக்கையில் நட வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படும். ஆனால் 90 சதவிகித திட்டங்கள் இந்த நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்பது தங்கள் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்ததாக இவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், AFP

வளர்ச்சியோடு பொருளாதாரத்தையும் பாதுகாக்க அரசாங்கம் விரும்புகிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறினார். ''இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்புடைய திட்டங்களும் ஸ்தம்பித்துள்ளன. இதற்கு பொறுப்பில் இருந்த முந்தைய அரசாங்கம்தான் காரணம்'' என பிரகாஷ் ஜவடேக்கர் 2014ம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவி ஏற்கும்போது கூறினார். மேலும் கிடப்பில் இருந்த திட்டங்களுக்கு ஒரே வாரத்தில் அனுமதி அளித்து செயல்படுத்தினோம்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்கள் சுற்றுவட்டாரத்தில் வரும் பெரிய திட்டங்களுக்கு எதிராக சிலர் பிரசாரங்கள் செய்வதால், அது தவறானது என்று மக்களும் நினைத்துக் கொள்வதாக அரசாங்கம் நினைக்கிறது என்பது வல்லுநர்கள் கருத்து.

2009 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையே வட கிழக்கு மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தில் நீர்மின் திட்டங்களை செயல்படுத்த மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றதை மேனன் ஆராய்ந்தார். அப்போது பலரும் அணைக்கட்டுவதற்கு ஆதரவாக இருந்தது அவருக்கு தெரியவந்தது.

ஆனால் பாலங்கள் கட்ட வேண்டும், பள்ளிகள் கட்டித்தரப்பட வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட மற்ற சில கோரிக்கைகளும் அவர்களிடத்தில் இருந்தன. ஆனால், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் அரசாங்கம் கேட்பதாக இல்லை என்பதே மக்களின் உணர்வாக இருந்தது.

இந்த வரைவுக்கான கருத்துகளை எல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்ட பின்பு என்ன நடக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து மேலும் ஆலோசிக்கலாம் அல்லது நிலுவையில் வைக்கலாம்.

"இந்த வரைவுக்கு பெறப்படும் அனைத்து பரிந்துரைகளும் எதிர்ப்புகளும் பதிவுசெய்யப்படும். அதற்கு பிறகே முடிவெடுக்கப்படும்" என்று அமைச்சர் ஜவடேக்கர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு வந்த எதிர்வினையானது, மக்கள் எவ்வாறு சுற்றுச்சூழல் குறித்து கவலை கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: