சீனா Vs இந்தியா: ராணுவ பலத்தில் யாருக்கு வலிமை? நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

  • ஜுகல் ஆர் புரோகித்
  • பிபிசி
பிபின் ராவத்

பட மூலாதாரம், Getty Images

ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்திய பாதுகாப்புப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் வெளியிட்ட 31 வார்த்தைகள் கொண்ட அறிக்கை, பெரும்பாலான பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியாகின. அதுபற்றி பரவலாக விவாதிக்கப்பட்டது.

``லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை எதிர்கொள்வதற்கான ராணுவ ரீதியிலான ஆயத்தங்கள் நடந்து வருகின்றன. ராணுவம் மற்றும் தூதரக அளவிலான பேச்சுகள் தோல்வி அடைந்தால் மட்டுமே அந்த வழிமுறை பயன்படுத்தப்படும்'' என்று ஏஎன்ஐ செய்தி முகமைக்கு பிபின் ராவத் பேட்டி அளித்திருந்தார்.

முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ சேவையில் இருப்பவர்களுக்கு இது ஆச்சரியமளிக்கவில்லை.

``ராணுவ நடவடிக்கைக்கான சாத்தியம் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது என தலைமைத் தளபதி கூறலாமா? அவர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்'' என்று லெஃப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டி.எஸ். ஹூடா கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இன்னும் இறுதி செய்யப்படாத எல்லைகளைக் கவனிக்கும் வடக்கு கட்டளைப்பிரிவின் தலைவராக இருந்தவர் இவர்.

``தலைமைத் தளபதி கூறியதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அது கவனமாக, சரியாக வெளியிடப்பட்ட தகவல். என்னைப் பொருத்தவரை, இன்னும் சிறிது முன்னதாகவே இதை வெளியிட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்'' என்று இந்திய விமானப் படையில் துணைத் தலைமை தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற ஏர்மார்ஷல் அனில் கோஸ்லா கூறியுள்ளார்.

சீனாவின் ராணுவம் எப்படிப்பட்டது?

ராவத் கருத்தால் என்ன தாக்கங்கள் ஏற்படும் என விவாதிப்பதற்கு முன், சீனாவின் ராணுவம் எப்படிப்பட்டது என்றும் கொஞ்சம் பார்ப்போம்.

சீனாவின் நில எல்லை சுமார் 22 ஆயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கானது. கடலோரப் பகுதி 18 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது. இதுதவிர கட்டமைப்பு வகையில் கடல்கடந்த தளங்களும் உள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவில் டிஜிபோட்டியில் ஒரு தளம் இருக்கிறது.

இந்தியாவில் ராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகளை பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் கட்டுப்படுத்துகின்றன.

சீனாவில் மத்திய ராணுவ கமிஷன் (சி.எம்.சி.) என்ற அமைப்பு தான் ராணுவப் பிரிவுகளை கட்டுப்படுத்துகிறது. `ராணுவ அமைப்பின் தலைமை அமைப்பு மர்றும் படைகளின் தலைமை அமைப்பு' என்று அதை அழைக்கிறார்கள்.

தலைவர் மற்றும் துணைத் தலைவர் தலைமையில் அந்த அமைப்பு இயங்குகிறது. சீன அதிபர் ஷி ஜின்பிங்தான் இதன் தலைவராக இருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் ராணுவம், கடற்படை, விமானப் படை, ராக்கெட் பிரிவு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஆதரவு அளிக்கும் பிரிவு, பொருள்கள் சேமிப்பு ஆதரவுப் பிரிவு ஆகியவற்றை சி.எம்.சி. கட்டுப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு படைப் பிரிவுக்கும் தனித்தனி கமாண்டர்கள் உண்டு. சீனாவில் புவியியல் ரீதியில் ஐந்து தலைமைகள் இருக்கின்றன. கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் மத்திய கமாண்ட்கள் என அவை குறிப்பிடப் படுகின்றன.

சீனாவின் `பாதுகாப்புத் துறை வெள்ளை அறிக்கை 2019' மூலம் 2012 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்ற பணிகளை நாட்டின் ராணுவம் பட்டியலிட்டுள்ளது.

  • ஒட்டுமொத்தமாக ராணுவத்தின் பலத்தில் 3 லட்சம் பேர் குறைக்கப்பட்டுள்ளனர். எனவே 20 லட்சம் வீரர்கள் தற்போது ராணுவத்தில் உள்ளனர்.
  • படைபலம் குறைப்பில் ராணுவப் பிரிவில் தான் அதிகம் வீரர்கள் குறைக்கப்பட்டனர். விமானப் படையில் வீரர்கள் பலம் அப்படியே பராமரிக்கப்படுகிறது. கடற்படை மற்றும் ராக்கெட் பிரிவுகளில் வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சீனாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை ஆயுதங்களை கையாளும் பிரிவுகளாக இவை உள்ளன. முன்னர் இவை இரண்டாவது தாக்குதல் படைப் பிரிவு என கூறப்பட்டு வந்தது.
  • 2012ல் இருந்து நல்ல சம்பளம் வழங்குதல், படைப் பிரிவினருக்கு நல்ல பணி மற்றும் பயிற்சி சூழல்களை உருவாக்கித் தருதல், காலாவதியான சாதனங்களை படிப்படியாக மாற்றுதல், புதிய சாதனங்கள் தயாரித்தல், ராணுவ சீர்திருத்தங்களை பலப்படுத்துவது, பல்வேறு படைப் பிரிவுகளுக்கு இடையில் கூட்டுப் பயிற்சிகள் நடத்துவது போன்ற பணிகளுக்காக ராணுவத்தின் செலவு அமைந்துள்ளது.

சீனா கூறி வரும் விஷயங்கள் பற்றி இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சீனாவின் தொழில்நுட்பங்கள் `நிரூபிக்கப்படாதவை' என்றும், படைப் பிரிவுகளுக்கு `போர்க்கள அனுபவம்' கிடையாது என்றும் இந்திய பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் ராணுவ திட்டங்கள் என்னவாக இருக்கும்?

எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சீனாவுடன் 3488 கிலோமீட்டர் நீளத்தில் இந்தியா தற்காப்பு உத்தியைக் கடைபிடித்து வருகிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images

உள்ளே நுழையும் பகைவர்களை கட்டுப்படுத்தி வைத்தல் என்பது இதன் அர்த்தம்.

``பாகிஸ்தானுக்கு எதிராக நமது ராணுவ உத்தி மற்றும் எதிர்கொள்ளும் பாங்கு, பாகிஸ்தானுக்கு எதிரான உத்திகளில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். பாகிஸ்தானைப் பொருத்தவரை முக்கியமான பகுதிகளில் முன்னேறிச் சென்று எச்சரிக்கை விடுப்பதாக இருக்கும். ஆனால் சீனாவைப் பொருத்த வரை தற்காப்பு அடிப்படையில் இருக்கும். போர் உருவாக்கும் வகையிலானதாக இருக்காது. இருந்தாலும், தேவை ஏற்பட்டால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் முன்னேறிச் செல்லும் திறன் நமக்கு இல்லை என்பதாக இதை அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதற்காகத்தான் மலைச்சிகர தாக்குதல் படைப் பிரிவை (Mountain Strike Corps ) இந்தியா உருவாக்கி வைத்துள்ளது'' என்று லெப்டிணன்ட் ஜெனரல் ஹூடா விவரித்தார்.

சீனாவின் அத்துமீறல் நடந்தால் அதே வகையில் தாக்குதல் நடத்தி, கையகப்படுத்திய நிலப் பகுதியை பேரத்துக்கான விஷயமாக ஆக்கிக் கொள்ளக் கூடிய `பதிலுக்குப் பதில்' என்ற அணுகுமுறை எப்படி உள்ளது?

``பிற்காலத்தைவிட முந்தைய காலத்தில் அதுபோன்ற செயல்பாடுகள் நன்றாக இருந்தன. பதிலுக்குப் பதில் தாக்குதல் நடத்துவது பதற்றத்தை அதிகரிப்பதாகத் தோன்றலாம். ஆனால் அவர்களுடைய தாக்குதலுக்கு சரியான பதிலடி தரக் கூடிய ராணுவ பலம் நம்மிடம் உள்ளதாகவே நான் நினைக்கிறேன்'' என்று ஹூடா விளக்கினார்.

லடாக்கில் உள்ள பூகோள சூழ்நிலை, நிலப்பரப்பு அமைப்பு இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளதா என்று நான் கேட்டேன்.

``கிழக்கு லடாக்கில் ஓரளவுக்கு சமவெளியான நிலப்பரப்பு இருக்கும். ஆனால் உயரமான பகுதிகளில் அப்படி இல்லை. எல்லைக் கோட்டுப் பகுதி என்பதைப் போல அல்லாமல், அது மலைப்பாங்கானதாக இருக்காது. இணைப்பு சாலை வசதிகளும் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும். பெரும்பாலான பாதுகாப்பு முகாம்களுக்கு வாகனங்களில் செல்லும் அளவுக்கு சாலை வசதி உண்டு. எனவே அங்கு எங்களுக்கு சவால்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் லடாக் நிலப்பாங்கு இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது என்று கூறுவது சரியானதல்ல. சீனாவிடம் நல்ல கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அவர்களுக்கு சற்று கூடுதலான சாதகங்கள் உள்ளன'' என்று ஹூடா கூறினார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவுடனான தொடர்பு மோசம் அடைந்தால், இந்தியாவுக்கு தான் சாதகமான நிலை இருக்கும் என்று முன்னாள் கடற்படை தளபதி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

``சீனா மீது தாக்குதல் நடத்த தெற்கு சீனா கடல் பகுதிக்கு இந்திய கடற்படை அனுப்பப்படும் என்று யாராவது சொன்னால், நான் ஆச்சர்யப்பட மாட்டேன். இந்தியப் பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ள நமக்கு சாதகமான நிலை உள்ளது. அந்தப் பகுதி நமக்கு பழக்கப்பட்டது, நம்மிடம் அதிக படை லம் உள்ளது. மிக முக்கியமாக தளவாடங்களை அனுப்பும் வசதி நமக்குச் சாதகமாக உள்ளன'' என்று அவர் கூறினார்.

இந்தியா ராணுவ நடவடிக்கை எடுப்பதாக முடிவு செய்தால், விமானப் படை தான் சரியான தேர்வாக இருக்கும் என பல நிபுணர்கள் கூறுகின்றனர்.

தாழ்வான பகுதிகளில் இருந்து புறப்பட்டுச் செல்லும் இந்தியாவின் ஜெட் விமானங்கள் நிறைய எரிபொருளையும், ஆயுதங்களையும் எடுத்துச் செல்லும் திறன் கொண்டவையாக உள்ளன. ஆனால், சுவாசத்துக்குக் குறைவான காற்று உள்ள திபெத்தின் உயரமான மலைப் பகுதிகளில் உள்ள தளங்களில் இருந்து புறப்படும் சீன விமானங்கள் அதிக அளவுக்கு எரிபொருள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு செல்லும் திறன் கொண்டவையாக இருக்காது.

ஆனால் விஷயம் அத்துடன் முடியவில்லை.

``நமக்கு T3 வகையில் சாதகங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது தொழில்நுட்பம் (technology), நிலப்பகுதி அமைப்பு (terrain), பயிற்சி (training) ஆகியவற்றில் சீனாவைக் காட்டிலும் நமது விமானப் படைக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன.

தொழில்நுட்ப ரீதியில் அவர்கள் முன்னிலை வகிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையான செயல்பாடு எப்படி இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது. நிலப்பரப்பு அமைப்பு மற்றும் பயிற்சியில் இடைவெளிகளை சமன் செய்யும் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன'' என்று எர்மார்ஷல் கோஸ்லா கூறுகிறார்.

ஷில்லாங்கை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு விமானப் படைப் பிரிவின் கமாண்ட் தலைவராக இருந்த அவர், சீன ராணுவத்தின் விமானப் படைப் பிரிவு பற்றி ஆழமாக ஆய்வு செய்து வைத்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

சமீப காலத்தில் சீனாவின் விமானப் படை எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்திருக்கிறது என்பதை அவர் என்னிடம் கூறினார்.

``முன்பு பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவாக இருந்த விமானப் படை, ராணுவ அமைப்புகளைப் போலத்தான் கட்டமைப்பு செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், பொருளாதார ரீதியில் சீனா வளர்ச்சி பெற்ற சூழ்நிலையில், வளைகுடா போர் காலத்தில் தங்களுடைய கடற்படை மற்றும் விமானப் படை பிரிவுகளை அவர்கள் நவீனப்படுத்தத் தொடங்கினர். இப்போது தங்கள் விமானப் படைகளின் திறன்களை சீனா வேகமாக அதிகரித்து வருகிறது'' என்று அவர் விளக்கினார்.

இந்தியாவின் பலம் எதில் இருக்கிறது

``உள்நாட்டிலேயே ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்யும்'' திறன் தான் இந்தியாவைக் காட்டிலும் சீனாவுக்கு ``மிகப் பெரிய சாதகமான அம்சமாக'' உள்ளது என்று கோஸ்லா தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே ஆயுதங்களும் மற்ற தளவாடங்களும் உற்பத்தி செய்யப்படுவதால், நாட்டுக்கு உள்ளேயே இவற்றுக்கு ஏற்பாடு செய்து கொள்ள முடியும். இந்தியாவிலும் ராணுவ உற்பத்தித் தளங்களை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. ஆனால் இப்போதைக்கு இறக்குமதிகளைத் தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

இணையவழி மற்றும் வான்வெளி ஆதிக்கத்தில் இந்தியாவை விட சீனாவின் பலம் அதிகமாக உள்ளது.

``இணையவழி ராணுவப் பிரிவை சீனா உருவாக்கியுள்ளது. அதன் திறன் ஓரளவுக்கு நன்றாக உள்ளது. இதில் இந்தியா இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. சிறந்த திறமையாளர்களை நமது ராணுவம் ஈர்க்க வேண்டியுள்ளது. நமது நாட்டிலேயே திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நமக்காக பணியாற்றாமல், வேறு யாருக்கோ பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று ஒருங்கிணைந்த ராணுவ அலுவலர் பிரிவு தலைவராக இருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதிஷ் துவா கூறியுள்ளார். முப்படைப் பிரிவுகளின் அமைப்பாக இது இருந்தது. இப்போது தலைமைத் தளபதி அலுவலகத்தின் கீழ் இது வருகிறது.

`ராணுவ சீர்திருத்தங்கள்' செய்திருப்பதாக சீனாவின் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, அதன் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் ராணுவ சீர்திருத்தங்கள் எப்படி இருக்கும் என்பதில் தனது அனுபவத்தை ஜெனரல் துவா பகிர்ந்து கொண்டார்.

``முப்படை இணையவழி மற்றும் வான்வெளி முகமை இந்திய ராணுவத்தில் உள்ளது. சிறப்புப் படைகள் பிரிவும் உள்ளது. பலமான மற்றும் நல்ல சாதன வசதிகள் கொண்ட கமாண்ட்கள் தேவை என நாங்கள் கேட்டோம். 2013ல் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தது என்றாலும், 2018ல் தான் இந்த அமைப்புகளை எங்களால் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடிந்தது. அதுவும் கூட குறைவான வசதிகளுடன் தான் செய்தோம். சீர்திருத்தங்களை நாம் எப்படி வரவேற்க வேண்டும், அவற்றை அமல்படுத்துவதில் எப்படி வேகம் காட்ட வேண்டும் என்பதைக் காட்டுவதாக இது உள்ளது. தனியாக செயல்படுவதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். போர் முறையானது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது.மாற்றங்களை ஏற்காமல், பழைய மாடல்களிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணங்களை ஊக்குவிக்கக் கூடாது'' என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST