சாத்தான்குளம் சம்பவம்: "ஜெயராஜ் உடலில் 17 காயங்கள், பென்னிக்ஸ் உடலில் 13 காயங்கள்"

சாத்தான்குளம் தந்தை-மகன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சிறை காவலர்கள் முத்துராஜா, தாமஸ் பிரான்சிஸ், முருகன், ஆகியோரின் பிணை மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் உடலில் 17 காயங்கள், பென்னிக்ஸ் உடலில் 13 காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது என நீதிமன்றத்தில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
மேலும், வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி 60 பேரையும், சிபிஐ 35 பேரையும் விசாரித்துள்ளது. சிபிஐ விசாரணை இன்னும் முடிவடையாததால் பிணை வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ வாதத்தை ஏற்று 3 பேரின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. சிபிஐ தரப்பில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பின் பிணையில் விடுவிப்பது பற்றி பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.
இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்று கொண்டதால் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை கடந்த 10ந் தேதி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல்துறையை சேர்ந்த முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நேற்று (செவ்வாய்கிழமை) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ தாக்கல் செய்த மனுவில், தந்தை, மகனை இருவரையும் காவலர்கள் முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜா, தாக்கியதிற்கு ஆதாரம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஜெயராஜ், பென்னீக்ஸ் கொலை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று சாத்தான்குளத்தில் விசாரணை நடத்தினர்.பென்னீக்ஸ் செல்போன் கடை அருகே உள்ள எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் பிரபு, ஆட்டோ டிரைவர் பேச்சுபாண்டி உள்ளிட்ட நான்கு பேரிடம் 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.