கொரோனா ஆராய்ச்சி: தமிழகத்தின் இரு மருத்துவமனைகளில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி பரிசோதனை

கொரோனா

பட மூலாதாரம், அதர் பூனம்வாலா, சீரம் இன்ஸ்டிட்யூட்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியாக தடுப்பூசி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை தேர்வாகியிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே ரெம்டிசிவீர், எனோக்சாபரின், டோசில்ஸுமாப் உள்ளிட்ட உயிர்காக்கும் வீரியம் மிக்க மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் விஜய்பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பரிசோதனைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை ஆரோக்கியமான நபர்களுக்கு செலுத்தி அவர்களின் நோய் எதிர்ப்புத்திறன் பரிசோதனை நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இந்திய அளவில் கொரோனா தடுப்பூசியை சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு வாரியம் சென்னையை தேர்வு செய்துள்ளது.

இந்த திட்டத்துக்கு தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் முதன்மை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

யாரிடம் பரிசோதனை?

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த ஆராய்ச்சியை சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சிக்கழகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும்.

சென்னையை பொருத்தவரை, இந்த "கோவிஷீல்டு தடுப்பூசி" ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளில் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

இந்த தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்து விடும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் அது உருவாக்கும் என்றும், இரண்டாம் கட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டு பரிசோதனை என்ன?

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தை மேம்படுத்தியிருக்கிறது. அது பல நாடுகளில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் அந்த எதிர்ப்பு மருந்தை மகராஷ்டிரா மாநிலம் புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட்டும் பிரிட்டன்-ஸ்வீடன் மருந்தக நிறுவனமான அஸ்ட்ராஸென்காவும் உடன்பாடு செய்துள்ளன. அதன்படி 100 கோடி சொட்டு மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.

இரண்டு கட்டமாக உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து திட்டத்தின் முதலாவது கட்டத்தில் தற்போது இந்தியா இருக்கிறது. இந்த தடுப்பு மருந்துக்கு வலுவான நோய் எதிர்ப்புத்திறன் இருப்பதாக லேன்செட் மருத்துவ ஆய்விதழிலும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்து நிலையிலான பரிசோதனைகளை நடத்த இந்திய தலைமை மருத்து கட்டுப்பாட்டாளர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுமதி அளித்தார்.

பட மூலாதாரம், Getty Images

"பிரிட்டனில் முதல் சுற்றில் 1077 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. முதல் சுற்றின் முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் விதத்திலிருந்தாலும், கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாதற்கு இது போதுமானதா என இப்போதே கூற முடியாது. பெரும் திரளான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இறுதி முடிவு தெரியவரும்" என்றும் ஆக்ஸ்ஃபோர்டு தெரிவித்திருந்தது. 

இந்தியாவில் ஏற்கனவே கோவேக்ஸின் உள்ளிட்ட இந்திய தடுப்பு மருந்துகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தற்போது பிரிட்டனில் உருவாக்கப்பட்ட தடுப்புமருந்தும் சோதனை செய்யப்படுகிறது. 

இரண்டாம் கட்ட பரிசோதனை இந்தியாவில் புணே, டெல்லி எய்ம்ஸ், பிஹார், சண்டீகர் உள்ளிட்ட இடங்களிலும் தடுப்பூசி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்  தடுப்பூசியை பரிசோதனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

இது குறித்து இந்திய சுகாதாரத்துறை செயலாளரின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசும்போது, இந்த விவகாரத்தில் முதல் கட்ட தகவல்கள் மட்டுமே பரிமாறப்பட்டுள்ளன என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவேக்சின் எப்போது கிடைக்கும்? தொடர்பான தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்:

காணொளிக் குறிப்பு,

இந்தியாவில் கோவேக்சின் தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் ?

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST