கோவை சிறுவனுக்கு லத்தி அடி - தொடரும் மாணவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள்

லத்தி அடியில் சிறுவனுக்கு ஏற்பட்ட காயம்
கோவையில் கடந்த இரு மாதங்களில் நடந்த இரு வேறு சம்பவங்களில் பள்ளி மாணவர்கள் மீது லத்தியை பயன்படுத்தி காவல்துறையினர் தாக்கும் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்திய சம்பவத்தில் 9ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவனை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கிய விவகாரத்தில் மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒண்டிப்புதூர் பகுதியில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துர்காராஜ், சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த சிறுவனை லத்தியால் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், "நண்பர்கள் வீட்டிற்கு விளையாடச் சென்ற எனது மகனை, காவலர் ஒருவர் கடுமையாக லத்தியால் தாக்கியுள்ளார். இதனால், அவனது கை மற்றும் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. எந்த தப்பும் செய்யாத சிறுவனை லத்தியால் ஏன் அடிக்க வேண்டும். இச்சம்பவத்தால், எனது மகன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மன வேதனையில் இருக்கிறோம்" என்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் கேட்டபோது, "தாக்கப்பட்ட சிறுவனை, அவரது வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்துப் பேசினோம். அவரும், அவரது பெற்றோரும் நடந்தவை குறித்து எங்களிடம் பேசத் தயங்கினர். இருந்தும், அவருக்கான பாதுகாப்பும், உதவியும் வழங்க தயாராகவுள்ளோம் என தெரிவித்துள்ளோம்" என கூறினார்.
காவலர் தாக்கியது குறித்து சிறுவனின் பெற்றோர் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனாலும், அந்த சம்பவம் குறித்து தெரிய வந்தவுடன் மாநகர காவல் ஆணையர், உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சிறுவனை தாக்கிய காவலர், சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் இருந்து மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய நிகழ்வு
இதேபோல், கோவையில் கடந்த ஜூன் மாதம் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை காவலர்கள் கடுமையாக தாக்கினர்.
ரத்தினபுரி பகுதியில் 42 வயது மதிக்கத்தக்க நபர் தனது மனைவி மற்றும் பத்தாம் வகுப்பு படித்து வரும் மகனோடு தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த, ஜூன் 19ம் தேதி இரவு 8 மணிக்கு அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுப்படிருந்த ரத்தினபுரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்லமணி மற்றும் காவலர்கள், தள்ளுவண்டி கடையை மூடுமாறு கூறியுள்ளனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் தள்ளுவண்டி கடை நடத்தும் நபரை உதவி ஆய்வாளர் செல்லமணி திட்டியுள்ளார்.
இதனால், கோபமடைந்த அவரது மகன், உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகன சாவியை பறித்தார். இதனையடுத்து பள்ளி மாணவன் மற்றும் அவரது பெற்றோரை காவலர்கள் கடுமையாக தாக்கினர்.
அந்த சம்பவம் குறித்தும் அப்போது கோவை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
சிறார்கள் கையாளப்படும் விதிகள் மீறல்
கோவையில் காவலர்களால் தொடர்ந்து சிறுவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து பிபிசியிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் அருள்மொழி, இவை அனைத்தும் காவலர்களின் அராஜகம் என தெரிவித்தார்.
"காவல்துறையினர் சிறுவர் மற்றும் சிறுமிகளை கையாள்வதில் பல்வேறு சட்ட விதிமுறைகள் இருக்கின்றன. எந்த தவறு செய்திருந்தாலும், அடிக்கவோ மிரட்டவோ கூடாது. அவர்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்ய வேண்டும். உடனடியாக பெற்றோர்களுக்கும், சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுபோன்ற எந்த சட்ட விதிமுறைகளையும் காவலர்கள் மதிப்பதில்லை. சிறுவர்கள் மீதான தாக்குதல், காவலர்களின் அராஜகம்" என கூறுகிறார் அருள்மொழி.
லத்தி தாக்குதல் அத்துமீறலா?கோவை சம்பவங்கள் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களில் கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் அமலில் உள்ள காலத்தில் விதிகலை மீறுவோர் மீது சில இடங்களில் காவல்துறையினர் லத்தியால் அடிக்கும் நடவடிக்கைகள் சர்ச்சையாகியிருக்கின்றன.
இந்திய அரசியலமைப்பின் 21ஆவது விதி, ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது என்று கூறியுள்ளது.
அதேபோல, இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 129ஆவது பிரிவு, பொது ஒழுங்கை நிலைநாட்ட பலப்பிரயோகத்தை காவல்துறையினர் பயன்படுத்த அதிகாரம் அளித்துள்ளது. ஆனால், அந்த அதிகாரம், பொது இடத்தில் சமூக அமைதியை கெடுக்கும் நோக்குடனோ வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காகவோ ஒறு சில கும்பலால் உள்நோக்குடன் மீறும்போது பயன்படுத்தலாம் என்று கட்டுப்பாடு உள்ளது.
இந்த நிலையில், சிறார்கள் மீதான லத்தி தாக்குதல்கள், பொதுவெளியில் கவனத்தை ஈர்த்து சர்ச்சையாகி வருவது காவல்துறையினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியம்: நினைவுடன் இருக்கிறார், தாளமிடுகிறார் - மகன் எஸ்.பி. சரண்
- கொரோனா சிகிச்சை முடிந்து திரும்பியவர் வீடு அடைப்பு - சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்
- கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிப்பதால் குழந்தைக்கு சிக்கலா?
- அரசர் பற்றி கேள்வி: 10 லட்சம் பேர் இருந்த குழுவை தடை செய்த ஃபேஸ்புக்
- புல்வாமா: "ஜெய்ஷ்" தாக்குதல் பற்றி என்ஐஏ குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: