பேஸ்புக் Vs இந்திய கட்சிகள் - இந்திய பிரிவு அதிகாரியிடம் கேள்விகளால் துளைத்த நாடாளுமன்ற குழு

ஃபேஸ்புக்

பட மூலாதாரம், Getty Images

ஃபேஸ்புக், தமது சமூக ஊடக தளத்தில் அரசியல் பாகுபாடு காட்டுவதாகவும், குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை கண்டுகொள்வதில்லை என்றும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இதுபோன்ற விசாரணையை ஃபேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுள்ளதால், தற்போதைய குற்றச்சாட்டுகளை கையாளுவதில் அந்த நிறுவனத்துக்கு சிக்கல் இருக்காது என்றாலும், இந்தியாவில் ஒரு நாடாளுமன்ற குழு முன்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண் இயக்குநர் அஜித் மோகன் ஆஜராகி சாட்சியம் தருவது புதிய செயல்பாடாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளியிடும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை ஃபேஸ்புக் நிறுவனம் கண்டுகொள்வதில்லை அல்லது உதாசீனப்படுத்துகிறது என்பது அந்நிறுவனம் மீது காங்கிரஸ் கட்சி சுமத்தும் குற்றச்சாட்டு.

ஆனால், இத்தகைய குற்றச்சாட்டை காங்கிரஸ் மட்டுமின்றி பாஜகவும் முன்வைக்கிறது. ஆளும் பிரதமர் நரேந்திரமோதிக்கு எதிராக ஒரு சார்பு நடவடிக்கையை ஃபேஸ்புக் மேற்கொள்வதாக பாரதிய ஜனதா கட்சியும் தன் பங்குக்கு குற்றம்சாட்டுவதால், மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி என்பது போல இந்தியாவில் ஆளும் கட்சியின் கோபத்தையும், எதிர்கட்சியான காங்கிரஸின் குற்றச்சாட்டையும் ஒரே நேரத்தில் ஃபேஸ்புக் எதிர்கொண்டிருக்கிறது.

பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற ஃபேஸ்புக், குற்றச்சாட்டுகளை நிராகரித்து வரும் அதே சமயம், மிகப்பெரிய இந்திய சமூக ஊடக சந்தையில் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் நிலையை சமீபத்திய குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபேஸ்புக், 30 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. அதன் மற்றொரு நிறுவனமான வாட்ஸ்அப், 40 கோடிக்கும் அதிகமான பயனர்களை இந்தியாவில் கொண்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சஷி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற குழு அனுப்பிய சம்மனின்படி, ஃபேஸ்புக் நிறுவன இந்திய பிரிவு மேலாண் இயக்குநர் அஜித் மோகன் புதன்கிழமை நாடாளுமன்ற வளாக அறையில் நடைபெற்ற குழுவின் விசாரணைக்கு ஆஜரானார்.

மூடிய அறையில் நடைபெற்ற விசாரணை என்பதால் அதில் என்ன விவாதிக்கப்பட்டது, என்ன கேள்விகள் கேட்கப்பட்டன போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரியாவில்லை. இருந்தபோதும், ஃபேஸ்புக் நிறுவன உயரதிகாரியிடம் விசாரணை நடைபெற்றபோது, இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளையும் வரவழைத்த நாடாளுமன்ற குழு அவர்கள் முன்னிலையில், பல ஃபேஸ்புக் பதிவுகளை சுட்டிக்காட்டி ஏன் அவற்றின் மீது ஃபேஸ்புக் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டதாக பிபிசிக்கு தெரிய வருகிறது.

முன்னதாக, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்குக்கு கடந்த மாதம் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எழுதிய கடிதத்தில் எத்தகைய பதிவுகளை ஃபேஸ்புக் கண்டுகொள்ளத்தவறியது என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உலக அளவில் ஒரே சீரான கொள்கைகளை கையாளாமல் நாடுகள் சார்ந்தும் அவற்றில் உள்ள சமூகங்கள் சார்ந்தும் இருக்கக் கூடிய வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கை இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த விவகாரத்தில், கடந்த மாதம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்ட செய்தியில், அரசியல் கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, தனது தளங்களில் வெறுக்கத்தக்க பேச்சுகளோ கருத்துகளோ அனுமதிக்கப்படுவதில்லை என்று ஃபேஸ்புக் கூறியிருந்தது.

"வன்முறையைத் தூண்டும் வெறுப்புணர்வு பேச்சு மற்றும் இடுகைகளை நாங்கள் தடை செய்கிறோம், யாருடைய அரசியல் நிலைப்பாடு அல்லது கட்சி இணைப்பையும் பொருட்படுத்தாமல் உலகளவில் இந்த கொள்கைகளை நாங்கள் செயல்படுத்துகிறோம்" என்று ஃபேஸ்புக் சமீபத்தில் பிபிசிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியிருந்தது.

ஆனால் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளிப்படுத்திய புலனாய்வுச்செய்தி, ஃபேஸ்புக் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற குரலை இந்தியாவில் ஒலிக்கச்செய்ததது. அதன் அடிப்படையிலேயே இன்று புதன்கிழமை நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்பு ஃபேஸ்புக் இந்திய பிரிவின் மேலாண் இயக்குநர் அஜித் மோகன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

பேஸ்புக் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), முஸ்லிம்களுக்கு எதிரான சொல்லாடர்களை அதன் பக்கங்களிலும் பிற தளங்களிலும் வெளிப்படுத்துவதாகவும், அவற்றை அனுமதிப்பதே அந்த கட்சிக்கு சாதகமான ஃபேஸ்புக்கின் நிலைப்பாடு என்றும் அந்நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விசாரணை தேவை என குரல்கள் வலுத்தபிறகே, சர்ச்சைக்குரிய பாஜக உறுப்பினர் பதிவிட்ட முஸ்லிம் விரோத இடுகைகளை பேஸ்புக் நீக்கியதாக வால்ஸ்ட்ரீட் செய்தி கூறுகிறது.

மேலும், பாஜகவை ஆதரிக்கும் மேலும் மூன்று பேரின் இடுகைகள், ஃபேஸ்புக்கின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் தொடர்பான விதிகளை மீறும் வகையில் இருப்பதாக கூறப்பட்ட பிறகும் அவை நீக்கப்படவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகளின் மையத்தில் இருப்பவராகவும், சர்ச்சைக்குரிய அந்த இடுகைகளை நீக்க வேண்டாம் என முடிவெடுத்தவருமாக கூறப்படுபவர் - பேஸ்புக்கின் இந்திய பொது கொள்கை தலைமை நிர்வாகி அங்கி தாஸ்.

இது தொடர்பான அந்த நாளிதழ் செய்தியில், மோதியின் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பக்கங்களை நீக்கி அவர்களை தண்டிப்பது இந்தியாவில் ஃபேஸ்புக்கின் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என ஊழியர்களிடம் அங்கி தாஸ் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே விவகாரத்தில் வார இறுதியில் WSJ வெளியிட்ட இரண்டாவது செய்தியிலும் அங்கி தாஸின் நிலைப்பாடே மையமாக இடம்பெற்றிருந்தது. அங்கி தாஸ், பாஜக மற்றும் மோதியின் ஆதரவாளர் என்றும் நிறுவனத்தின் உள்ளூர பகிரப்படும் தகவல்களில் எதிர்கட்சிகளை மிகவும் அவமதிக்கும் வகையில் அவர் கருத்துகளை வெளியிடுவார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

எனினும், எந்தவொரு கட்சியையும் தமது நிறுவனம் ஆதரிக்காது என்று பேஸ்புக் கூறிய அதேசமயம், வால்ஸ்ட்ரீட் சுட்டிக்காட்டிய தகவல்கள், வேறொரு சூழலின்போது பதிவானவை என்றும் விளக்கம் அளிக்க முற்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

பேஸ்புக் செயல்பாட்டில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா?

தற்போதைக்கு ஃபேஸ்புக் மீதான நாடாளுமன்ற குழு விசாரணையில் எத்தகைய முடிவு எடுக்கப்படும் என்பது தெளிவற்று உள்ளது. ஆனால், சமூக ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவில் போதுமான சட்டங்கள் வலுவாக இல்லை என்பதும் அது அந்த நிறுவனத்துக்கு எதிரான சட்ட அமலாக்கத்தை கடினமாக்குகிறது என்பதும் களத்தில் உள்ள யதார்த்தம்.

நாடாளுமன்ற குழு விசாரணையின் விளைவாக என்ன இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இத்தகைய உலகளாவிய தளங்களை ஒழுங்குபடுத்தும் தெளிவான இந்திய சட்டங்கள் இல்லாதது எந்தவிதமான அமலாக்கத்தையும் கடினமாக்கும்.

ஆனால், பிரச்னைக்குரிய வகையில் தற்போதைய விவகாரம், எதிர்வரும் மாநில சட்டப்பேரவைகளின் தேர்தல்களின்போது கடுமையாக எதிரொலிக்கலாம் என்பது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் சிக்கலாகலாம்.

குறிப்பாக, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப், இந்திய அரசியலில் இப்போது பெரும் பங்கு வகிக்கின்றன. பல்வேறு கட்சிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆர்வமுள்ள தலைவர்கள் அனைவரும் வாக்காளர்களை அணி திரட்டவும் அவர்கள் இடையே உற்சாகத்தைத் தூண்டுவதற்கும், கருத்தை வடிவமைப்பதற்கும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய இரு தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் சமீபத்திய விவகாரத்தால் பேஸ்புக்கின் நற்பெயர் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுவதால், இழந்த நற்பெயரை பெற அந்த நிறுவனம் இனி இந்தியாவில் கடுமையாக போராட வேண்டியிருக்கும். அமெரிக்கா, பிரிட்டன் என மற்ற நாடுகளிலும் இதேபோன்ற சிக்கல்களை அந்நாடு எதிர்கொண்டது நினைவிருக்கலாம்.

இந்தியாவில் கவர்ச்சிகரமான மற்றும் அதிக பயனர்களை மேலும் ஈர்க்கும் ஃபேஸ்புக்கின் எதிர்கால திட்டம் மற்றும் லாபகரமான தளமாக இந்தியாவில் தமது இருப்பை வலுப்படுத்தலாம் என்ற அதன் திட்டமும் தற்போதைய அரசியல் குற்றச்சாட்டுகளால் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலி செய்திகள் மற்றும் வதந்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு மிக சொற்ப அளவில் ஈடுபாடு காட்டியது என ஃபேஸ்புக் முன்பு மற்ற நாடுகளில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. பொதுவெளியில் மக்களை அடித்துத்தாக்குவது போன்ற காணொளிகள் உட்பட வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட காட்சிகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

தனது லாபகர சந்தையை பெருக்கும் நோக்குடன் இந்தியர்களுக்கு இலவச இன்டர்நெட் வழங்க ஃபேஸ்புக் முற்பட்டபோது, அது இணைய சமநிலைக்கு பாதகமாகலாம் என குரல்கள் வலுத்தன இதனால் அந்த திட்டத்தை இந்திய அரசு ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியது.

அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த செவ்வாய்க்கிழமை ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க்குக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் ஃபேஸ்புக் ஊழியர்கள், பிரதமர் மோதி மற்றும் பிற மூத்த அமைச்சர்களை தவறாக நடத்துவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் அவர், 2019 தேர்தலின்போது, மக்களிடையே பாஜகவின் செல்வாக்கு எட்டாமல் தவிர்ப்பதில் "ஒருங்கிணைந்த முயற்சியை" ஃபேஸ்புக் மேற்கொண்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், ஜக்கர்பெர்க்குக்கு சமீபத்தில் அனுப்பிய கடிதத்தில், "இந்தியாவின் நிறுவன தலைவர்கள் எந்த நோக்கத்துக்காக உயிர் தியாகம் செய்தார்களோ அந்த உரிமைகளையும் மதிப்புகளையும் ஃபேஸ்புக் தகர்த்து விட்டதாக குற்றம்சாட்டியது.

இந்த விவகாரத்தில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் (ஃபேஸ்புக்) இந்தியாவின் சமூக இறையாண்மைக்கு எதிரான செயல்பாடுகலை தொடராமல் இருப்பதை உறுதிப்படுத்த சட்ட ரீதியாகவும், நாடாளுமன்ற ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருவதாக இரண்டாவது கடிதத்தில் காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: