நரேந்திர மோதியின் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கிலிருந்து நன்கொடை கோரிக்கை

பட மூலாதாரம், Getty images
மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தனிப்பட்ட டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதை ட்விட்டர் உறுதி செய்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோதியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அடுத்தடுத்து ட்வீட்டுகளில், தன்னை பின் தொடர்பவர்களிடம், க்ரிப்டோ கரன்ஸி மூலம் நன்கொடை கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட பல பிரபலமானவர்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹேக் செய்யப்பட்டது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்துவிட்டது என்றும், கணக்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
”நாங்கள் இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். இந்த சமயத்தில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கூடுதல் கணக்கு குறித்து எங்களுக்கு தெரியவில்லை,” என ட்விட்டரின் செய்திதொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மோதியின் வலைத்தளமான www.narendramodi.in வலைதளத்தின் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கு இது. மேலும் இதை 25 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.
பிரதமர் மோதியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த கணக்கை சுமார் 61 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் கருத்து தெரிவிக்கவில்லை என ராய்ட்டர்ஸ் முகமை தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: