கேள்வி நேரம் என்றால் என்ன? நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் இவ்வாண்டு கொரோனா பாதிப்பால் சற்று தாமதமாகவே தொடங்குகிறது. இதன் காரணமாகவே, இம்முறை கூட்டத்தொடரில் பல மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
மழைக் காலக் கூட்டத்தொடர் இன்று, (செப்டம்பர் 14) தொடங்குகிறது. முதல் நாள் தவிர்த்து மற்ற நாட்களில் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் பிற்பகல் மூன்று மணி முதல் மாலை 7 மணி வரை அலுவல் நடைபெறும். முதல் நாளன்று இரு அவைகளும் காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இயங்கும்.
அவைகளில் அமரும் இடங்களில் கூட, கொரொனா கால தனி நபர் இடைவெளி பின்பற்றப்படும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கூட்டத் தொடரின் அலுவல் நேரத்தில் குறை ஏற்படாத வகையில், இம்முறை சனி, ஞாயிற்று, கிழமைகளில் கூட கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் தனி நபர் மசோதா அனுமதிக்கப்படவில்லை, பூஜ்ஜிய நேரம் இருக்கும். பொதுமக்களின் முக்கியமான பிரச்சனைகள் குறித்த விவாதங்களை உறுப்பினர்கள் எழுப்ப முடியும். ஆனால் அதற்கான கால அவகாசம் 30 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty images
வெப்பநிலை பரிசோதனைக்கு உள்ளாகும் மாநிலங்களவை தலைவர் வெங்கய நாயுடு
ஆனால் இது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தின் முக்கியமான ஒரு அம்சமாக விளங்கும் கேள்வி நேரம், இந்த அமர்வில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்வி நேரம் என்றால் என்ன?
மக்களவையின் அமர்வில் முதல் ஒரு மணி நேரம் கேள்விகள் எழுப்புவதற்கான நேரம். இதுவே கேள்வி நேரம் எனப்படும்.
கேள்வி நேரத்தின்போது, மக்களவை உறுப்பினர்கள் நிர்வாகம் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் கேள்வி எழுப்பலாம். கேள்வி நேரத்தின் போது, அரசின் நடவடிக்கைகள் சோதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அமைச்சரும் தத்தம் துறை குறித்த கேள்விகளுக்கு அவையில் எழுந்து நின்று பதிலளிக்க வேண்டும்.
கேள்வி நேரத்தின் போது மூன்று வகையான கேள்விகள் எழுப்பப்படுகின்றன – உடு (ஸ்டார்) குறியிட்டவை, உடுக் குறியில்லாதவை மற்றும் குறுகிய கால அறிவிப்பு கேள்விகள்.
உடுக் குறியிடப்பட்டகேள்வி – வாய்மொழி பதில் வேண்டும் கேள்விகள் உடுக் குறியிடப்பட்டிருக்கும்..
உடுக் குறியிடப்படாத கேள்வி– வாய்மொழி பதிலல்லாமல் எழுத்துப் பூர்வமான பதிலை வேண்டும் கேள்வி உடுக் குறியிடப்படாத கேள்வியாகும். இவை குறித்த துணைக் கேள்விகள் எழுப்ப முடியாது. மேலும் இவை எந்த நாளுக்கென்று குறிக்கப்படுகின்றனவோ அந்த நாளின் சபைக் குறிப்பில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படுகின்றன..
குறுகியகாலஅறிவிப்புகேள்விகள்– உடுக் குறியிடப்பட்ட மற்றும் இடப்படாத கேள்விகளுக்கான பதில்களைப் பெற, ஒரு உறுப்பினர் 10 நாட்களுக்கு முன்பே கேள்விகளைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் குறுகிய கால அறிவிப்பு கேள்விகளை அதை விடக் குறுகிய கால முன்னறிவிப்பிலேயே கேட்கலாம்.
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு கேள்வியையும் 10 நாட்களுக்குக் குறைவான கால அவகாசத்தில் கேட்க முடியும் என்றும், இதற்கான பதில் அளிக்க அதிக காலம் எடுத்துக் கொள்ள முடியாது என்று சபாநாயகர் கருதினால், அமைச்சர் இது குறித்து பதிலளிக்கத் தயாராக இருக்கிறாரா என்றும் இருந்தால், எந்தத் தேதியில் பதிலளிப்பார் என்றும் கேள்வி எழுப்பலாம். அதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்க ஒப்புக்கொண்டால், குறிப்பிட்ட கேள்விக்கு அவர் குறிப்பிட்ட நாளில் பதிலளிக்கப்படவேண்டும்.
மேலும் கேள்விப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள உடுக் குறியிடப்பட்ட கேள்விகளுக்கான பதில் அளிக்கப்பட்டவுடன் முதல் கேள்வியாக இது கேட்கப்படும். ஒரு வேளை, இதற்கு பதிலளிக்க அமைச்சரால் இயலாத பட்சத்தில், இது பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி என்று சபாநாயகர் கருதினால், பத்து நாட்களுக்குள் இதற்கான பதிலை வாய்மொழியாக அளிக்க அமைச்சருக்கு அவர் உத்தரவிடலாம். மேலும் குறிப்பிட்ட அந்த நாளுக்கான கேள்விகள் பட்டியலில் இது முதற்கேள்வியாகவும் பட்டியலிடப்படும்.
கேள்வி நேரம் எவ்வாறு தொடங்கியது?
பட மூலாதாரம், getty images
மாநிலங்களவை
1721 இல் முதன் முதலில் இந்த முறை, இங்கிலாந்தில் தொடங்கியது. அதை இந்தியா ஏற்றுக்கொண்டது. 1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டத்தின் கீழ் இந்தியாவில் நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பது என்ற நடைமுறை தொடங்கியது.
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு வரை, கேள்வி கேட்கும் உரிமைக்குப் பல கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் விடுதலைக்குப் பிறகு அந்தக் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் சிறப்பு கவனத்தில் உள்ள, பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு விவகாரத்திலும் தகவல்களைப் பெற, கேள்விகளைக் கேட்கலாம்.
கேள்வி நேரத்தில் எம்மாதிரி கேள்விகளைக் கேட்கலாம்?
மக்களவையின் நடைமுறை மற்றும் நடத்தை விதி 41 (2), கேள்வி நேரத்தின் போது என்ன மாதிரியான கேள்விகளை எழுப்பலாம் என்பதை விளக்கியுள்ளது.
அனுமானம், நையாண்டி, குற்றச்சாட்டு-எதிர்க் குற்றச்சாட்டு மற்றும் அவமானப்படுத்தும் சொற்கள் பயன்படுத்தப்படாத, பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்பலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், எந்த ஒரு மனிதரின் சமூக அந்தஸ்து மட்டுமல்ல, ஒரு நபரின் தன்மை அல்லது நடத்தை குறித்தும் எந்த கேள்வியும் கேட்கப்படக்கூடாது. தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் கூறப்படக் கூடாது. இந்தக் கேள்விகள் தனி மனித நிந்தனை போலத் தோன்றுவதாக இருக்கவும் கூடாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: