தமிழக அரசு: எஸ்.வி. சேகர் தெரிவித்த வருத்தம் ஏற்பு - தேசிய கொடி அவமதிப்பு விவகாரம்

எஸ்.வி. சேகர்: தேசியக் கொடி அவமதிப்பு குறித்து வருத்தம்

பட மூலாதாரம், S.Ve Sekar / FB

தேசிய கொடி அவமதிப்பு விவகாரத்தில் நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்த வருத்தத்தை ஏற்பதாக தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த காணொளி ஒன்றில் கருத்து தெரிவித்திருந்த எஸ்.வி. சேகர், தேசிய கொடியில் உள்ள மூன்று வண்ணங்களையும் மதங்களையும் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இது குறித்து வழக்குப் பதிவுசெய்தது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் எஸ்.வி. சேகரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எஸ்.வி. சேகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ. நடராஜன், எஸ்.வி. சேகர் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, எதிர்காலத்தில் இதுபோல செய்யமாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் கைது நடவடிக்கை இருக்காது என தெரிவித்தார். இருந்தபோதும் அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்படமாட்டாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து எஸ்.வி. சேகர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தேசிய கொடியை அவமதித்ததற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், எஸ்.வி. சேகரின் பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொள்வதாகவும் அதன்படி அவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்றும் கூறினார்.

இதையடுத்து வழக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை அவரைக் கைதுசெய்யக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

தேசிய மூவர்ண கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் நடிகர் எஸ்.வி. சேகர் செப்டம்பர் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அப்போது எஸ்.வி. சேகர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தேசிய கொடியை அவமதித்ததற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: