பாஜக எம்எல்ஏ ராஜாசிங்: இல்லாத பக்கத்தை எப்படி முடக்குவார்கள்? பேஸ்புக் நடவடிக்கை பற்றி கேள்வி

பட மூலாதாரம், ராஜா சிங்
இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை கண்டுகொள்வதில்லை என்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஃபேஸ்புக் நிறுவனம், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜாசிங்குக்கு, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை பயன்படுத்த தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், தனக்கு கடந்த ஓராண்டாக பேஸ்புக் கணக்கே இல்லாத நிலையில், இல்லாத பக்கத்தை எப்படி அவர்கள் முடக்குவார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தியாவில் சுமார் 30 கோடி பயனர்களை கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், ஆளும் பாஜக தலைவர்கள் மற்றும் அக்கட்சியினரின் சர்ச்சைக்குரிய வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் மற்றும் காணொளிகளை முடக்காமல் அலட்சியம் காட்டுவதாக காங்கிரஸ் தலைவர்கள் சமீப காலமாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இதேபோல, இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் ஃபேஸ்புக்கின் செயல்பாடு மற்றும் தேர்தல் காலங்களில் பிரதமர் நரேந்திர மோதியின் நற்பெயரை மட்டுப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்குக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் எம்.பி சஷி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண் இயக்குநர் அஜித் மோகன் புதன்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இந்த நிலையில், வெறுப்புணர்வு பேச்சுகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக கருதப்படும் தெலங்கானாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங், அவரது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை பயன்படுத்தாத வகையில் அவருக்கு தடை விதித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு செய்தித்தொடர்பாளர், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் தொடர்பான தமது கொள்கையை மீறும் வகையில் அவரது செயல்பாடு இருப்பதாக கருதப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
பட மூலாதாரம், AFP
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்குடன் பிரதமர் நரேந்திர மோதி
இதேவேளை, தனது ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது குறித்து கருத்து வெளியிட்ட ராஜாசிங், இது பற்றி எனது ஆதரவாளர்கள் கூறித்தான் எனக்கே தெரியும். அவர்கள்தான் எனது பெயரில் ஒரு பக்கத்தை தொடங்கினார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி எனது பேஸ்புக் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டதாக ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் செய்துள்ளேன். 2019-ம் ஆண்டு ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை எனது ஆதரவாளர்கள் தொடங்கினார்கள். அதையும் அ்பபோதே நீக்கிவிட்டேன்" என்று கூறினார்.
மேலும் அவர், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி, புதிதாகக் கணக்கு தொடங்க அனுமதி கோருவேன். எல்லா விதிகளுக்கும் கட்டுப்படுகிறேன் என கூறுவேன். அந்த உரிமை எனக்கு இருக்கிறது" என்று ராஜாசிங் தெரிவித்தார்.
வெுப்புணர்வு பேச்சுகளை தூண்டுவதாக எழுந்த சர்ச்சை குறித்து கேட்டதற்கு, "ஏதோ நான் மட்டும்தான் ஆட்சேபகர கருத்துகளை பேசுவதாக ஃபேஸ்புக் இன்றைக்கு முடிவு செய்திருக்கிறது. அது சரி கிடையாது. ஏனென்றால் இன்றை காலகட்டத்தில் பல சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். அது பற்றியும் ஃபேஸ்புக் சிந்திக்க வேண்டும்" என்று ராஜா சிங் கூறினார்.
பிற செய்திகள்:
- மதுரா சிறையில் சித்ரவதை செய்தனர்" - கஃபீல் கான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்கள்
- "ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவத்துக்கு முன்பே போலீசால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர்"
- நாடாளுமன்ற கேள்வி நேரம் என்றால் என்ன? அந்த முறை எப்போது தொடங்கியது?
- சாமிக்கண்ணு வின்சென்ட்: நீங்கள் இவரை அறிந்திருக்க வேண்டும் - ஏன் தெரியுமா?
- ”பி.எம்.கேர்ஸ் நிதியில் ஐந்தே நாளில் ரூ.3000 கோடிக்கும் மேல் குவிந்துள்ளது"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: