ரஃபால் போர் விமானங்கள்: இந்திய விமானப்படை சேவையில் அர்ப்பணிக்கப்படும் 5 விமானங்கள்

ரஃபால் போர் விமானங்கள்: இந்திய விமானப்படை சேவையில் நாளை அர்ப்பணிக்கப்படும் 5 விமானங்கள்

பட மூலாதாரம், IAF

இந்திய விமானப்படையில் ரஃபால் போர் விமானங்கள் இன்று முறைப்படி இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதையொட்டி ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டின் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் ஃபுளோரென்ஸ் பார்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்திய விமானப்படையில் ரஃபால் போர் விமானங்கள் இணைந்திருப்பது மொத்த உலகிற்கும் குறிப்பாக இந்திய இறையாண்மையை இலக்காக வைத்திருப்பவர்களுக்கு கூறப்படும் வலுவான செய்தி. எல்லையில் நிலவும் சூழல், அல்லது எல்லையில் உருவாக்கப்பட்ட சூழல் என்றே கூறுவேன். இந்த நேரத்தில் இந்த இணைப்பு முக்கியம் பெறுகிறது" கூறினார்.

இந்திய விமானப்படையினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அவர், சமீபத்தில் எல்லையில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவத்தின்போது, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் விரைந்து நடவடிக்கை எடுத்தது, அவர்களின் அர்ப்பணிப்பை காட்டுவதாக குறிப்பிட்டார்.

இந்திய விமானப்படையின் பலத்தை பெருக்கும் நோக்குடன் பிரான்ஸ் நாட்டின் ரஃபால் விமான நிறுவனத்திடம் இருந்து இரட்டை எஞ்சின்கள் கொண்ட 36 போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

அதில் தயாரிக்கப்பட்ட முதல் 10 விமானங்களில் முதலாவது விமானம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் நான்கு விமானங்கள் பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் வசம் ஒப்படைக்கப்பட்டன.

பிறகு மேலும் ஐந்து விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதில் பிரான்ஸில் உள்ள ஐந்து விமானங்களில் இந்திய விமானப்படையணியைச் சேர்ந்த வீரர்கள், விமானத்தை இயக்கும் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.

மற்ற ஐந்து விமானங்கள் இந்தியாவின் அம்பாலாவில் உள்ள விமான படைத்தளத்துக்கு கடந்த ஜூலை 27ஆம் தேதி வந்தன.

அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் ஃபுளோரென்ஸ் பார்லி, இந்திய பாதுகாப்புப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், விமானப்படை தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா, பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை செயலாளர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பிரான்ஸ் தரப்பில் அந்நாட்டுக்கான தூதர் எமானுவேல் லெனாயின், பிரான்ஸ் விமானப்படை துணைத் தளபதி ஏர் ஜெனரல் எரிக் ஆட்டுலெட், டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்திய விமானப்படை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ரஃபால் போர் விமானங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது கருதப்படுகிறது. இதையொட்டி ரஃபால் மற்றும் தேஜாஸ் போர் விமானங்கள் பங்குபெறும் வான் சாகச காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் 5 ரஃபால் போர் விமானங்கள் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படையின் 17ஆவது படையணியான கோல்டன் ஏரோஸ் (Golden arrows) பணியில் சேர்க்கப்படும் என்று இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 1 ஜூன், 2022, பிற்பகல் 2:54 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: