கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடருமா? தமிழக நிலைப்பாடு என்ன?

ஐசிஎம்ஆர்

பட மூலாதாரம், Getty Images

கோவிட்-19 வைரஸ் உயிரிழப்புகள் குறைய பிளாஸ்மா சகிச்சை உதவவில்லை என்று இந்திய மருத்தவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்தியா முழுவதும் 39 மருத்துவமனைகளில் ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்மா சிகிச்சையின் செயல் திறனை ஆய்வு செய்ததாகவும் கடந்த ஏப்ரல் 22 முதல் ஜூலை 14ஆம் தேதிவரை பல தரப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை கண்காணிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய பரிசோதனை மருத்துவ பதிவகத்தில் முறைப்படி தெரிவிக்கப்பட்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 25 நகரங்களில் இருந்து மிதமான சுகவீனத்துடன் கூடிய 464 பேர் பரிசோதனை மருத்துவ மையங்களில் சேர்க்கப்பட்டதாகவும், அதில் 29 இடங்கள் பொது மருத்துவமனை கல்லூரிகள் மற்றும் 10 இடங்கள் தனியார் மருத்துவமனைகள் என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

இந்த 464 பேர் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டனர். முதலாவதாக 235 பேர் ஆய்வாளர்கள் குறிப்பிட்ட பிளாஸ்மா சிகிச்சைக்கும், 229 பேர் கட்டுப்படுத்தப்பட்ட பிளாஸ்மா அல்லாத சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

அவர்களின் உடல்நிலையை ஐசிஎம்ஆர் நியமித்த கோவிட்-19 செயல் நடவடிக்கை குழு கண்காணித்தது.

இதில் ஆய்வாளர்கள் குறிப்பிட்ட பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்பட்டவர்களுக்கு 200 மி.லி அளவுக்கு இரண்டு டோஸ் மருந்துகள் 24 மணி நேர இடைவெளியில் செலுத்தப்பட்டன.

முடிவில், ஆய்வாளர்கள் குறிப்பிட்ட பிளாஸ்மா சிகிச்சைக்கு ஆளானவர்களின் உடல்நிலை பற்றி தன்னிச்சையான ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இரு தரப்பு குழுக்களின் சிகிச்சை முடிவுகள் மூலம், உயிரிழப்பை தடுக்கக் கூடிய அளவுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலன் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

ஆன்டிபாடிஸ் மற்றும் இம்யூனோ மாட்யுலேட்டர்கள் எனப்படும் பழங்கால தொற்று நோய்க்கு தரப்படும் தெராப்பி வாய்ப்புகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை, எதிர்ப்பணுக்களை சமன்படுத்தும் ஆதாரமாக இருக்குமே தவிர அது உயிரிழப்பை தடுப்பதில் உதவாது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இதேபோல, பிளாஸ்மா சிகிச்சை ஆய்வை நெதர்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். ஆனால், இறுதி முடிவு எட்டப்படாமல் அவர்களின் ஆய்வு பாதியிலேயே நின்று போனது.

இதையடுத்து அந்த முயற்சியை தொடர்ந்த இந்திய மருத்தவ ஆராய்ச்சி கவுன்சில், உயிரிழப்பை குறைக்கவோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளியின் உடல்நிலையிலோ பிளாஸ்மா சிகிச்சையால் முன்னேற்றம் கொண்டு வர முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

இந்த நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரியின் ரத்த மாற்று சிகிச்சைத் துறையின் பேராசிரியர் டாக்டர் சுபாஷ் பிபிசியிடம் கூறுகையில், "இப்போதைய நிலையில் இந்த சிகிச்சையை ஐசிஎம்ஆர் தடை செய்யவில்லை. 'limited use' என்றுதான் சொல்லியிருக்கிறது. ஆகவே கோவிட் - 19ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் இதனைப் பரிந்துரைத்தால் செய்வோம். இல்லாவிட்டால் செய்ய மாட்டோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு" என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராஜிவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் 2.34 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்மா வங்கி ஒன்றை மாநில சுகாதாரத்துறை அமைத்தது. அங்கு இதுவரை சுமார் 150 பேர் வரை பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.

டெல்லியிலும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடரும் என்று அதன் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லியிலும் பிளாஸ்மா சிகிச்சை தொடரும்

பிளாஸ்மா சிகிச்சையால் பயனே இல்லை என்று ஐசிஎம்ஆர் கூறவில்லை என்பதை சுட்டிக்காட்டும் டெல்லி அமைச்சர், சுவாசக்கருவிகள் பொருத்தப்படும் அவசியம் ஏற்படும் நோயாளிக்குத்தான் அந்த சிகிச்சை பயன் தராது என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. கோவிட்-19 சிகிச்சை முடிந்து வீட்டுத்தனிமை காலத்தை முடித்த பிறகு சமீபத்தில்தான் அவர் அமைச்சர் பொறுப்புகளை கவனிக்கத்தொடங்கினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: