ரஃபால் போர் விமானங்கள் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

ரஃபால் போர் விமானங்கள் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், PUNIT PARANJPE / Getty

இந்தியா, சீனா இடையே கிழக்கு லடாக் பிராந்தியத்தில் மாதக்கணக்கில் பதற்றம் தொடரும் வேளையில், ரஃபால் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

தற்போது பணியில் சேர்க்கப்பட்டுள்ள 5 போர் விமானங்கள், இந்திய விமானப்படை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்திய விமானப்படை சேவையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் தயாரிப்பான ரஃபால் போர் விமானங்கள், ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை 17ஆவது படையணியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த படையணி 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது நாட்டின் முதலாவது போர் விமானமும் இதே படையணி வசம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த விமானங்களின் சிறப்பு மற்றும் தயாரிப்பு நடவடிக்கையின் பின்னணியில் தொடரும் சர்ச்சைகள் பற்றிய 10 முக்கிய குறிப்புகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

1. 2016ஆம் ஆண்டில் 36 ரஃபால் போர் விமானங்களை வாங்க பிரான்ஸின் முன்னோடி போர் விமான தயாரிப்பாளரான டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மதிப்பு ரூ. 59 ஆயிரம் கோடி ஆக இறுதி செய்யப்பட்டது. தொடக்கத்தில் இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துடன் போர் விமான தயாரிப்பை இணைந்து மேற்கொள்ள டஸ்ஸோ நிறுவனம் தீர்மானித்திருந்தது. ஆனால், அழியும் நிலையில் அந்த நிறுவனம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, அந்த முடிவை டஸ்ஸோ ஏவியேஷன்ஸ் திரும்பப் பெற்றுக் கொண்டது.

2. இந்தியா கொள்முதல் செய்யும் 36 போர் விமானங்களில் 30 விமானங்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்படும். மீதமுள்ள 6 விமானங்கள் பயிற்சி விமானங்களாக செயல்படும். இதுவரை 10 விமானங்கள் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் 5 விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. மற்றவை பிரான்ஸில் உள்ள இந்திய தூதரக கட்டுப்பாட்டில் உள்ளன.

3. இரட்டை எஞ்சின்கள் கொண்ட இந்த விமானம், 2000 லிட்டர் எரிபொருள் கொள்ளளவைக் கொண்டது. தன்னைச்சுற்றி 350 கிலோ மீட்டர் அளவுக்கு வானில் உள்ள நடமாட்டங்களை கண்காணிக்கவும், எதிரி இலக்கை சுடும் திறனையும் இந்த விமானம் பெற்றுள்ளது. இதற்காக ஆக்டிவ் எலக்டிரானிக் ஸ்கேன்ட் அர்ரே எனப்படும் அதிநவீன ராடர் தொழில்நுட்பம் இதில் நிறுவப்பட்டுள்ளது. போர்க்காலங்களில் விமானிக்கு ஏதேனும் நேர்ந்தால், தானியங்கியாக படைத்தளத்துக்கு திரும்பும் சிறப்பு மின்னணு தொழில்நுட்ப மென்பொருள் இந்த விமானத்தில் உள்ளது.

4. வானில் இருந்து வானில் உள்ள எதிரி இலக்கை தாக்கும் ஏவுகணையை தாங்கும் வல்லமை இந்த போர் விமானத்துக்கு உண்டு. ஒவ்வொரு விமானத்திலும் 6 ஏவுகணைகள், 6 மேம்பட்ட வெடிகுண்டுகளை தாங்கும் கலன்கள் பொருத்தப்பட்டுள்ளன. எம்பிடிஏ எனப்படும் கண் பார்வைத்திறனுக்கு அப்பால் உள்ள இலக்கை குறிபார்த்து தாக்கும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகள், இந்த ரக தொழில்நுட்பத்தை அவற்றின் போர் விமானங்களில் பயன்படுத்துகின்றன.

பட மூலாதாரம், IAF

5. இஸ்ரேலி தரத்திலான மேல்புற கவச கூம்பு, எதிரியின் தொலைத்தொடர்பு வட்டத்தை முடக்கும் அலைவரிசை ஜாமர் கருவிகள், எதிரி இலக்கை எச்சரிக்கும் ராடார் சாதனம், உடன் வரும் ஜோடி போர் விமான இருப்பையும் நடமாட்டத்தையும் கண்காணிக்கும் கண்காணிப்பு சாதனங்கள் இதில் நிறுவப்பட்டுள்ளன. இவை தேவைப்படும் காலத்தில் வான் வழி கட்டுப்பாட்டு அறையின் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படும்.

6. வானில் பயணம் செய்யும்போதே எரிபொருள் தீரும் கட்டத்தில் மற்றொரு ஜெட் விமானத்தில் இருந்து எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் போர்த்தளவாட தேவைகளுக்கு ஏற்ப இந்த வசதியை டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம் நிறுவியிருக்கிறது.

7. உலக அளவில் ரஃபால் போர் விமானங்களை இந்தியாவுக்கு முன்பாக கத்தார், பிரான்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் அவற்றின் விமானப்படையில் சேர்த்துள்ளன. இந்திய விமானப்படை பணியில் ஏற்கெனவே பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் உள்ளன.

8. இந்திய விமானப்படையில் வான் வழி அச்சுறுத்தலை எதிர்கொள்ள போதிய நவீன போர் வி்மானங்கள் இல்லை எனக்கூறி இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்து கொண்டது. ஆனால், தொடக்கத்தில் 126 போர் விமானங்கள் தேவை என மதிப்பிடப்பட்ட நிலையில் 36 போர் விமானங்களுக்கான கொள்முதல் ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டது.

9. ரஃபால் போர் விமானங்கள் கொள்முதலில் தயாரிப்பு தொழில்நுட்ப பரிமாற்றம் செய்து கொள்ள இந்தியா நிர்பந்தித்தபோதும், அதை வழங்க கடைசிவரை டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம் மறுத்து விட்டது. அதே சமயம், இந்தியாவில் தயாரிப்போம் என்ற இந்திய அரசின் கொள்கை முடிவின்படி தொழில்நுட்ப ஆற்றலை வழங்கி எதிர்கால தயாரிப்புப் பணியை நாக்பூரில் பதிவு பெற்ற அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் (ஆர்டிஎல்) மூலம் நிறைவேற்ற அந்நிறுவனத்துடன் டஸ்ஸோ ஏவியேஷன்ஸ் நிறுவனம் கூட்டு மேற்கொண்டது.

10. போர் விமான தயாரிப்பில் முன்னனுபவம் இல்லாத அனில் அம்பானியின் நிறுவனம் எவ்வாறு டஸ்ஸோ நிறுவனத்துடன் கூட்டு வைத்தது என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, அது டஸ்ஸோ ஏவியேஷனுக்கும் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கும் இடையே நடந்த கூட்டு ஒப்பந்தம் என்றும் தயாரிப்பு ஒப்பந்தத்தின்படி போர் விமான விநியோகம் உறுதி செய்யப்படாவிட்டால் மட்டுமே அது பற்றிய கேள்வி எழும் என்று இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த பதிலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டபோதும், அனில் அம்பானி நிறுவனத்துக்கு கிடைத்த போர் விமான தயாரிப்புக்கான வாய்ப்பு தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: