நடிகை ராகினி கைதால் கலக்கத்தில் திரை பிரபலங்கள் - போதைப்பொருள் புழக்கத்தில் யாருக்கு தொடர்பு? விரிவான தகவல்கள்

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி இந்தி
கோப்புப்படம்

பட மூலாதாரம், Vinod Pillai / EyeEm/ Getty

படக்குறிப்பு,

சித்தரிப்புக்காக

திரைப்பட நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் நடித்த நடிகை ராகினி துவிவேதி மற்றும் சந்தோஷுடன் தமிழ் படத்தில் அறிமுகமான சஞ்சனா கல்ரானி ஆகியோருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்படும் விவகாரம், தென்னிந்திய திரைத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் ஒரு ஊழியரை பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சமீபத்தில் விசாரித்த போது, இந்த பெயர்கள் வெளிவந்துள்ளன. இதையடுத்து நகரின் சில குறிப்பிட்ட இடங்களில் உயர்தர நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர். ரவீந்திரன், மொஹ்ஹமத் அனூப் ஆகியோருடன் அனிகா என்ற பெண்ணை கைது செய்த போதுதான், போதைப் பொருள் தடுப்பு அமைப்பான என்சிபிக்கு ராகினி என்ற பெயர் இந்த விவகாரத்தில் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

அனூபின் செல்பேசி தொடர்புகளில் ராகினியின் பெயர் இருந்ததைப் போலவே பீனீஷ் கொடியேறி என்பவரின் பெயரும் இருந்தது. இவர் கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான கொடியேறி பாலகிருஷ்ணாவின் மகன்.

பட மூலாதாரம், NCB

கைது செய்யப்பட்ட மூவர் வசம் இருந்து சின்தெட்டிக் போதை பொருட்களான எம்டிஎம்ஏ மாத்திரைகள், எல்எஸ்டி ப்ளாட்கள் ஆகியவற்றை என்சிபி, பெரிய அளவில் பறிமுதல் செய்தது.

இந்த போதை பொருட்களை சமூகத்தின் பணக்கார பிரிவினரிடம், குறிப்பாக இசையமைப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் விநியோகம் செய்துள்ளனர் என்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அவை விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்றும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக என்சிபியின் மண்டல இயக்குநரான அமித் கவாடே தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

என்சிபியின் அறிக்கையுடன் ஒத்துப்போகும் வகையில் போதைப்பொருள் விநியோகம் தொடர்பாக சுமார் 150 முதல் 200 நபர்களின் பெயர்களை காவல்துறையிடம் இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்துள்ளார்.

"எல்எஸ்டி மற்றும் கொகெய்ன் போன்ற போதைப்பொருட்கள், தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் கிடைப்பதால் தான் இந்த முக்கியமான விவகாரத்தை நான் எடுத்துக்கொண்டேன். இது மிகவும் அபாயகரமானது" என்று லங்கேஷ் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், NCB

காவல்துறையினருடனான லங்கேஷின் சந்திப்பு காரணமாக, போதைப்பொருள் புழங்கும் விவகாரம், மிகப்பெரிய அளவிலான விசாரணைக்கு வழிவகுத்தது.

இந்த வழக்கில் ராகினியின் நண்பர் சிவபிரகாஷ், வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் (ஆர்.டி.ஓ) ஊழியர் ரவிசங்கர், சஞ்சனா கால்ரானியின் நண்பரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான ராகுல் ஷெட்டி ஆகியோரை கைது செய்ததன் காரணமாக இந்த விவகாரத்தில் பலருக்கும் தொடர்புள்ளதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.

டெல்லியில் விரேன் கன்னாவையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் பெங்களூரில் உயர்மட்ட விருந்துகளை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறை சீருடையில் கன்னா இருக்கும் படமும் அங்கிருந்ததை காவல்துறையினர் பார்த்தனர்.

இதுவரை இந்த விவகாரத்தில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தலைமறைவாக உள்ள ஆதித்யா ஆல்வாவும் ஒருவர். மறைந்த அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன்தான் இந்த ஆதித்யா.

இந்த விவகாரத்தில் கூடுதல் விவரங்களை வெளியிட காவல்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்; ராகினி, சஞ்சனா உள்ளிட்ட கைது செய்யப்பட்டவர்களின் குடியிருப்புகளில் என்ன வகையான போதை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன, பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளின் அளவு என்ன, அவற்றை பயன்படுத்தியது யார், அதற்கான விநியோகம் எப்படி நடந்தது என்பன போன்ற தகவல்களை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை.

ரவிசங்கருக்கும் மற்றவர்களுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலில் நல்ல பொருட்களை சப்ளையர்களிடம் இருந்து பெறுவது தொடர்பாக பரிமாறிக்கொள்ளப்பட்ட செய்திகள் நீதிமன்றத்தில் ராகினிக்கான ரிமாண்ட் தொடர்பான மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

எந்தவொரு தயாரிக்கப்பட்ட மருந்தையும் வைத்திருத்தல் அல்லது வாங்குவது, கொகெய்ன் போன்ற போதைப்பொருள் அல்லது மனோவியல் பாதிப்புக்கான பொருட்களின் நுகர்வு மற்றும் குற்றச்சதி திட்டத்திற்கு தூண்டுதல் ஆகியவை அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களாகும்.

பட மூலாதாரம், NCB

ஆனால், பெங்களூரு காவல்துறை ஆணையர் கமல் பந்த் பிபிசி இந்தியிடம் கூறும்போது, `` குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்வரை அனைத்தையும் வெளியிட முடியாது. யாரும் தனிமையில் வேலை செய்யவில்லை, நீங்கள் ஒரு வெங்காயத்தை உரிக்கும்போது, ஒவ்வொரு தோலாக ஒன்றன்பின் ஒன்றாக நீக்குவீர்கள். இதை நாங்கள் மிகச்சிறப்பாக செய்கிறோம்' என்றார்.'

ராகினி மற்றும் சஞ்சனாவின் வக்கீல்கள் இந்த கைது சம்பவம் குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

``ராகினியின் இல்லத்தில் நடந்த தேடுதல், நடைமுறை ரீதியாக தவறானது. குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), சோதனை நடத்தப்படும் வேளையில் குறைந்தபட்சம் இரண்டு மரியாதைக்குரிய குடிமக்கள் அங்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை'' என்று தேடுதல் வேட்டை நேரத்தில் இருந்த வக்கீல் பவன் ஷியாம் பிபிசி இந்திக்கு தெரிவித்தார்.

கன்னடத்தில் எழுதப்பட்ட உள்ளடக்கங்களை ராகினியால் புரிந்து கொள்ள முடியாத நிலையில், பறிமுதல் அறிக்கையில் கையெழுத்திட காவல்துறையினர் அவரை கட்டாயப்படுத்தியதாக ஷியாம் கூறினார்.

`` மெமோவில் அதைப் பார்த்தபோது குறிப்பிட்ட போதைப்பொருள் பற்றிய குறிப்புகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை, '' என்று அவர் கூறுகிறார்.

சஞ்சனாவின் வழக்கறிஞர் எஸ்.எஸ். சீனிவாஸ் ராவ் பிபிசி இந்தியிடம் கூறியது என்னவென்றால் `` அவரை காவலில் வைக்க கோரப்பட்ட விண்ணப்பத்தில், அவர் செய்த குற்றம் என்ன என்பதை காவல்துறை குறிப்பிடவில்லை. சஞ்சனா ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூட குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் கூட அவரை காவலில் வைக்க அனுமதி கோரப்பட்டதும் அதற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்'' என்று அவர் குறிப்பிட்டார்.

ராகினி "மிஸ் இந்தியா" போட்டியில் முன்னாள் ரன்னர் அப் ஆன பிறகு வெற்றிகரமான மாடலாக இருந்தார்.

சந்தன மரம் என்று அழைக்கப்படும் அவர், 2009 ஆம் ஆண்டில் கன்னட திரையுலகில் "வீரா மடகாரி" படத்தில் நடித்தார். மம்முட்டியுடன் "ஃபேஸ் டூ ஃபேஸ்" படத்திலும், மோகன்லாலுடன் "கந்தஹார்" என்ற படத்திலும் நடித்துள்ளார். அவர் விரைவிலேயே பெரிய நடிகர்களுடன் நடித்தார் என்று கன்னட நடிகர் ஒருவர் கூறினார்.

மறுபுறம், பன்மொழி நடிகையான சஞ்சனா, 2006 ஆம் ஆண்டில் சந்தோஷுக்கு ஜோடியாக `` ஒரு காதல் செய்வீர் '' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

அவர் கன்னட திரைப்படமான காந்தா ஹெந்ததியிலும் நடித்தார், இது ஹிந்தியில் மல்லிகா ஷெராவத் மற்றும் எம்ரான் ஹாஷ்மி ஆகியோர் நடித்த "மர்டர்" என்ற வசூலை குவித்த படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஜாமீன் பெறும் சட்ட வாய்ப்புகளை அவர்களின் வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: