UPSC தேர்வுகளில் இஸ்லாமியர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறதா? #BBCFactCheck

  • மொஹம்மத் ஷாஹித்
  • உண்மை சரிபார்ப்புக் குழு, பிபிசி
தேர்வுகள்

பட மூலாதாரம், Getty Images

நாட்டின் மிக உயர்ந்த தேர்வாகக் கருதப்படும் சிவில் சர்வீஸஸ் தேர்வு தொடர்பாக அண்மைக் காலத்தில் பல டிவீட்டுகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் குறித்து ஒரு பிரிவினர், சமூக ஊடகங்களில் கேள்விகளை எழுப்புகின்றனர்.

'யுபிஎஸ்சி ஜிஹாத்' ஹேஷ்டேகுடன் பல டிவீட்டுகள் நீண்ட காலமாக பிரபலமாகி வருகின்றன. இவை முஸ்லிம் தேர்வாளர்களுக்கு என்று தனியான அளவுகோல்களைக் கொண்டுள்ளதாக இந்த டிவீட்டுகள் குறிப்பிடுகின்றன.

இவற்றில் சில டிவீட்டுகளைப் பார்ப்போம்:-

"யுபிஎஸ்சியில் இந்துக்களுக்கு 6 வாய்ப்புகள் என்றால், இஸ்லாமியர்களுக்கு 9 வாய்ப்புகள்",

"யுபிஎஸ்சியில் இந்துக்களின் அதிகபட்ச வயது 32 ஆண்டுகள், முஸ்லிம்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்".

இது தவிர, உருது மொழி வழியில் தேர்வெழுதுவோரின் வெற்றி விகிதம், இஸ்லாமியர்களுக்காக நடத்தப்படும் பயிற்சி மையங்களின் வெற்றி விகிதம் குறித்தும் இந்த டிவீட்டுகளில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் யுபிஎஸ்சி தேர்வில் 'இஸ்லாமிய ஆய்வுகள்' என்ற தலைப்பும் மிகவும் அதிகம் பேசப்படும் பொருளாகி வருகிறது.

பட மூலாதாரம், PTI

'இஸ்லாமிய ஆய்வுகள்' என்ற பாடத்தைத் தேர்வு செய்த இஸ்லாமியர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளாகி வருகிறார்கள் என்றும் மாறாக வேதம் அல்லது இந்துமதம் குறித்த ஆய்வுகள் போன்ற பாடங்கள் இத்தேர்வில் இல்லை என்றும் சமூக ஊடகங்களில் கூறப்பட்டது.

பிபிசியின் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்று, சமூக ஊடகங்களில் வரும் இந்த கூற்றுக்களை ஒவ்வொன்றாக விசாரித்தது.

யுபிஎஸ்சியின் மதிப்புமிக்க சிவில் சர்வீசஸ் தேர்வின் அளவுகோல்கள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

யுபிஎஸ்சி-க்குத் தேவைப்படும் தகுதி என்ன?

இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி, யுபிஎஸ்சி, குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது, அதில் தகுதி, வயது, இடஒதுக்கீடு மற்றும் தேர்வின் பாடங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கியது.

யார் ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ் அல்லது ஐ.பி.எஸ் ஆக முடியும்?

இந்தக் கேள்வி குறித்து இந்த அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் தகுதி, இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்பது தானேயன்றி, மதம், சாதி, இனம் ஆகிய எந்தப் பாகுபாடும் அதில் இல்லை.

இதற்குப் பிறகு வயது வரம்பு பற்றிய கேள்வி வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு யுபிஎஸ்சி தெளிவாகக் கூறும் வயது வரம்பு, குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள், அதிகபட்சம் 32 ஆண்டுகள். ஆனால் இதில் எஸ்சி, எஸ்டி, ஏனைய பின்தங்கிய வகுப்பு (ஓபிசி), மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே வயது வரம்புத் தளர்வு உள்ளது.

எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்திற்கு அதிகபட்ச வயது 37 ஆண்டுகள், ஓபிசி சமூகத்திற்கு அதிகபட்சம் 36 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 42 ஆண்டுகள். இது தவிர, சிவில் சர்வீசஸின் பிரதான தேர்வுக்குப் பட்டதாரியாக இருப்பது அவசியம்.

அதில் முஸ்லிம் அல்லது வேறு எந்த சமூகத்தின் பெயரும் இல்லை. வயது வரம்புத் தளர்வு என்பது, சமூகத்தின் அடிப்படையில் அமைந்ததே தவிர மதத்தின் அடிப்படையில் அல்ல.

இஸ்லாமியர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா?

சமூக ஊடகங்களில், யுபிஎஸ்சி தேர்வில் முஸ்லிம்கள் 9 முறை வாய்ப்பு பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தக் கூற்றை உண்மை என்று நம்புவதற்கு முன், யுபிஎஸ்சி அறிவிக்கையைப் படியுங்கள். அதில் விண்ணப்பதாரர்களுக்கு 6 வாய்ப்புகள் உள்ளன என்றும் எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உச்ச வரம்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, ஓபிசி சமூகத்தினர் இந்தத் தேர்வை 9 முறை எழுதலாம் என்று உள்ளது. அதாவது, யுபிஎஸ்சி எந்த மதத்தின் அடிப்படையிலும் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, இஸ்லாமியர்களுக்கு 9 வாய்ப்புகள் வழங்கப்படுவதாகக் கூறுவது தவறானது.

இது தவிர, சிவில் சர்வீசஸின் பிரதான தேர்வின் 26 விருப்ப பாடங்களில் இஸ்லாமிய ஆய்வுகள் என்ற பாடம் எதுவும் இல்லை. போபாலில் சிவில் சர்வீசஸ் பயிற்சியாளராக இருந்த லட்சுமி ஷரண் மிஸ்ரா, இஸ்லாமிய ஆய்வுகள் என்ற பாடம் குறித்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று கூறுகிறார்.

"யுபிஎஸ்சியில் இஸ்லாமிய ஆய்வுகள் என்ற பாடம் இல்லை. உருது இலக்கியம் என்ற தலைப்பில் இலக்கியம் தொடர்பான வினாக்கள் உள்ளன. அவை இஸ்லாமியர்களுடன் தொடர்புடையவை அல்ல. வரலாற்றில் முகலாய காலம் தொடர்பான கேள்விகள் கூடக் கேட்கப்படுவதில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். முகலாய வரலாறு குறித்த கேள்விகளே இல்லை எனும் போது, இதைப் படித்து அவர்கள் தேர்வாவதாகக் கூறப்படுவது விந்தையாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

நேர்காணல்களில் இஸ்லாமியர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் ஒரு கூற்று உள்ளது. இது குறித்து, "நேர்காணல் வாரியத்தின் தலைவராக ஒரு இஸ்லாமியர் இருப்பது அரிதாகவே நிகழ்ந்துள்ளது. குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான மதிப்பிடும் அதிகாரமே உள்ளது. நேர்காணல் என்பது 275 மதிப்பெண்களுக்கானது. தேர்வாவது என்பது, முக்கியத் தேர்வில் 1750-க்குப் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தெ அமைகிறது." என்று லட்சுமி ஷரண் மிஸ்ரா கூறுகிறார்.

உருது மொழிவழித் தேர்வால் என்ன பயன்?

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் கூற்றுக்களில், உருது இலக்கியம் மற்றும் உருது மொழி வழியில் தேர்வு என்ற காரணங்களால் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வாவதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில், மசூரியில் ஐஏஎஸ் விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் 94 ஆவது முதல் நிலைப் பாடத்தில், 326 பேர் பயிற்சி பெற்றனர். இவர்களில் 315 பேர் ஆங்கில வழியிலும் 8 பேர் ஹிந்தியிலும் குஜராத்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் தலா ஒருவரும் தேர்வெழுதினர். அதாவது இவர்களில் உருது வழியில் தேர்வான ஒருவர் கூட இல்லை.

இதேபோல், 2018, 2017 மற்றும் 2016ஆம் ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், அவற்றிலும் ஒருவர் கூட உருது மொழி வழியில் தேர்வாகவில்லை. உருது இலக்கியப்பாடத்தைப் படித்த மாணவர்களின் வெற்றி விகிதம் குறித்தும் சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது.

இந்தியாவின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள 22 மொழிகளை பிரதான தேர்வில் விருப்பப் பாடங்களாக எடுத்துக் கொள்ளலாம்.

யுபிஎஸ்சி ஒரு தரவை வெளியிட்டுள்ளது, இது முக்கிய தேர்வில் எந்த மொழி இலக்கியத்தை விருப்ப பாடமாக எத்தனை பேர் எடுத்தார்கள் என்று கூறுகிறது.

2017 ஆம் ஆண்டில், 265 பேர் இந்தி இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தனர், 114 பேர் கன்னடத்தையும், 111 பேர் மலையாளத்தையும், 106 பேர் தமிழ் இலக்கியங்களையும் தேர்வு செய்தனர். வெறும் 26 பேர் மட்டுமே உருது இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தனர். 2018 ஆம் ஆண்டில், உருது இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்வு செய்தவர்கள் 16 பேர் மட்டுமே.

இது குறித்து லக்ஷ்மி மிஸ்ரா, "மாணவர்கள் பல அளவுருக்களை மனதில் வைத்து இலக்கியத்துக்கான விருப்ப மொழியைத் தேர்வு செய்கிறார்கள். இது பாலி மொழியிலிருந்து தொடங்கியது. இதற்குக் காரணம் பாலியின் பாடத்திட்டம் குறைவானதாகும். மேலும் இதை அறிந்தவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். இதன் பின்னர், தென்னிந்திய மாணவர்கள் காரணமாக, சிவில் சர்வீசஸ் தேர்வில் தென்னிந்திய மொழிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. கன்னட மாணவர்கள் அதிக பயன் பெற்றனர். கடந்த பத்தாண்டுகளில் சமஸ்கிருத இலக்கிய மாணவர்கள் தாம் அதிக பயனடைந்துள்ளனர்." என்று கூறுகிறார்.

"உருது மற்றும் சிந்தி இலக்கியங்கள் அண்மையில் மிக வேகமாக வளர்ந்து வரும் பாடங்களாக இருக்கின்றன, ஆனால் அதைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் மிகக் குறைவு. இதைத் தேர்வு செய்தால் எளிமையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர்களும் இதை எடுக்கிறார்கள். தேர்வாகும் இஸ்லாமியர்களில் 80% பேரும் உருது மொழி இலக்கியத்தை விருப்பத் தேர்வாக எடுக்காதவர்கள் தாம்." என்று அவர் கூறுகிறார்.

உருது இலக்கியங்களின் வெற்றி விகிதம் ஏன் அதிகரித்துள்ளது போல் காணப்படுகிறது? இந்தக் கேள்விக்கு, லக்ஷ்மி ஷரன் மிஸ்ரா, "அரசியல் அறிவியல் பாடத்தைப் பத்தாயிரம் மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஒரு சில மாணவர்கள் மட்டுமே அதில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் உருது பாடம் தேர்ந்தெடுக்கும் மிகச் சிலரில் பெரும்பாலானோர் அதில் தேர்ச்சி பெறுகிறார்கள். அதனால், அந்தப் பாடத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாகத் தெரிகிறது." என்று விளக்குகிறார்.

பட மூலாதாரம், Hindustan Times

லக்ஷ்மி ஷரண் மிஸ்ராவின் கூற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், பின்வரும் புள்ளி விவரங்களின் மூலம் விளக்கலாம். 2017 ஆம் ஆண்டில், இந்தி இலக்கியத்தில் 265 பேரில் 19 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் உருது இலக்கியத்தில் எழுதிய 26 பேரில் 5 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதில் இந்தி இலக்கியத்தின் வெற்றி விகிதம் 7.1 சதவீதமாகவும், உருது இலக்கியத்தின் வெற்றி விகிதம் 19.2 சதவீதமாகவும் உள்ளது. தரவைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் குழப்பம் ஏற்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கு மட்டும் இலவச பயிற்சியா?

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இஸ்லாமியர்களுக்கு அரசாங்கம் இலவசமாகப் பயிற்சி அளிக்கிறது என்றும் சமூக ஊடகங்களில் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் உட்பட பல அமைச்சகங்கள் உள்ளன, அவை சிவில் சர்வீசஸ் தேர்வின் பல பயிற்சித் திட்டங்களுக்கு நிதியுதவியும் பயிற்சியும் வழங்குகின்றன. இது இஸ்லாமியர்களுக்கானதல்ல. மாறாக, பெண்கள், சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தினருக்கானது. சமீபத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, எஸ்சி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி அளிப்பதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது, அதில் அமைச்சகம் பணம் தருவதோடு உதவித்தொகையும் வழங்கும்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், ஜாமியா ஹம்தர்த் பல்கலைக்கழகம் மற்றும் ஜகாத் அறக்கட்டளை போன்ற பல அரசு சாரா நிறுவனங்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கின்றன. இவை அனைத்தும் சிறுபான்மையினர், பெண்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள், எஸ்சி மற்றும் எஸ்.டி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன.

இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் தான் இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

லக்ஷ்மி ஷரண் மிஸ்ரா இதற்குப் பதிலளிக்கையில், "இம்முறை சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் ஜெயின் சமூக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்காக யுபிஎஸ்சி ஜெயின் சமூகத்திற்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்று கூறி விட முடியுமா?" என்று கேட்கிறார்.

"ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு" என்பது ஜெயின மதத்தின் ஒரு அமைப்பாகும், இது ரூ.1,000 கோடி நிதியைக் கொண்டுள்ளது. இந்த நிதியத்தின் கீழ், இந்த அமைப்பு ஜெய்ப்பூர், இந்தோர், டெல்லி, சென்னை ஆகிய இடங்களில் தங்கும் வசதி கொண்ட பயிற்சி மையங்களைத் திறந்துள்ளது. தன் சமூக மாணவர்களுக்கு மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தின் பிஎஸ்சி.யில், ஜெயின் சமூக மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களின் வெற்றி விகிதம் 20-25% ஆகும். "

பட மூலாதாரம், The India Today Group

"ஒவ்வொரு சமூகமும் மாநிலமும் தங்கள் மக்கள் சிவில் சர்வீசஸ் -ல் சிறப்படைய வேண்டும் என்று விரும்புகின்றன. குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது, சர்தார் படேல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், சிவில் சர்வீசஸ் தேர்வில் பயிற்சியளிக்கத் தொடங்கியது. இதன் நோக்கம், குஜராத்திகள் சிவில் சேவையில் அதிகம் சென்றடைய வேண்டும் என்பது தான். மகாராஷ்டிராவில் மகாராஷ்டிரா நவ் நிர்மாண் சேனா தொகுதி மட்டத்தில் பயிற்சியைத் தொடங்கியது. ஆர்.எஸ்.எஸ்ஸின் சங்கல்ப் சன்ஸ்தா பற்றி அனைவருக்கும் தெரியும். இதுவும் பயிற்சி அளித்து வருகிறது. ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு சாதியும், ஒவ்வொரு சமூகமும் சிவில் சேவைகளில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முயற்சிக்கிறது. "

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் முஸ்லிம்களின் வெற்றி விகிதம் மிகக் குறைவு. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு -2019 முடிவுகளில் வெற்றி பெற்ற மொத்தம் 829 பேரில் 42 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள். இது ஐந்து சதவீதம் மட்டுமே. ஆனால், நாட்டின் மக்கள் தொகையில், இஸ்லாமியர்கள் 15 சதவீதம்.

2018 ஆம் ஆண்டில், 28, 2017 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தலா 50 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் இஸ்லாமியர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறுவது முற்றிலும் தவறானது என்பதை பிபிசி-யின் உண்மை சரிபார்ப்புக் குழு கண்டறிந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :