லோங்கி புய்யான்: 30 ஆண்டுகளாக மலையை குடைந்து 3 கி.மீ நீள கால்வாயை உருவாக்கியவர்

  • நீரஜ் பிரியதர்ஷி
  • பிபிசி இந்திக்காக
தனிஆளாக மண்வெட்டியால் வெட்டி, மூன்று கிலோமீட்டர் நீளமும், 5 அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்ட ஒரு கால்வாயை லோங்கி உருவாக்கினார்.

பட மூலாதாரம், NEERAJ PRIYADARSHI / BBC

படக்குறிப்பு,

தனிஆளாக மண்வெட்டியால் வெட்டி, மூன்று கிலோமீட்டர் நீளமும், 5 அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்ட ஒரு கால்வாயை லோங்கி உருவாக்கினார்.

பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள கயா மாவட்டத்தின் பங்கேபஜார் வட்டார மக்களின் முக்கிய தொழில் விவசாயம்,

ஆனால் இங்குள்ள மக்களால் நெல் மற்றும் கோதுமையை பயிரிட முடியவில்லை, ஏனெனில் நீர்ப்பாசன வசதி இல்லை.

இதன் காரணமாக இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

கோடில்வா கிராமத்தில் வசிக்கும் லோங்கி புய்யானின் மகனும் வேலை தேடி வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்.

தனது கிராமத்தை ஒட்டியுள்ள பங்கேட்டா மலையில் ஆடு மேய்க்கும் போது, லோங்கி புய்யானின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. கிராமத்தில் தண்ணீர் வசதி ஏற்பட்டால் மக்களின் குடிபெயர்வு நிற்கும், விவசாயமும் செய்ய முடியும் என்று அவர் நினைத்தார்.

மழை காலத்தில் வழக்கமாக மழை பெய்கிறது, ஆனால் எல்லா தண்ணீரும் பங்கேட்டா மலையின் நடுவில் தங்கிவிடுகிறது என்பதை லோங்கி புய்யான் கண்டார். அதிலிருந்து நம்பிக்கையின் ஒளி அவருக்கு தென்பட்டது.

பின்னர் முழுப் பகுதியிலும் அலைந்து திரிந்து மலையின் நடுவே தேங்கி நிற்கும் தண்ணீரை வயலுக்கு எடுத்துச் செல்ல ஒரு வரைபடத்தைத் தயாரித்தார். மேலும் மலையை வெட்டி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

பட மூலாதாரம், NEERAJ PRIYADARSHI / BBC

ஒன்று, இரண்டு, மூன்று அல்ல, ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளும் அல்ல. முப்பது வருட கடின உழைப்புக்குப் பிறகு, மலையின் நீரை கிராமக் குளத்திற்கு அவர் கொண்டு சென்றார்.

தனி ஆளாக மண் வெட்டியால் வெட்டி, மூன்று கிலோமீட்டர் நீளமும், 5 அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்ட ஒரு கால்வாயை உருவாக்கினார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், லோங்கி புய்யானின் இந்தப்பணி நிறைவடைந்துள்ளது. அவரது கடின உழைப்பின் பலன், இந்த மழைக்காலத்தில் தெரிகிறது.

அருகிலுள்ள மூன்று கிராமங்களின் விவசாயிகள் இதன் பலனைப் பெறுகிறார்கள், மக்களும் இந்த முறை நெல்லை பயிரிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், NEERAJ PRIYADARSHI / BBC

"நான் ஒரு முறை மனதில் ஒன்றை நினைத்துவிட்டால், அதிலிருந்து பின்வாங்கமாட்டேன். என் வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கும்போதெல்லாம், நான் கால்வாய் வெட்டுவதில் ஈடுபட்டேன். என்னால் முடியாது என்று என் மனைவி நினைத்தார், ஆனால், முடியும் என்று நான் நம்பினேன்," என்று தொலைபேசியில் பிபிசியிடம் பேசிய 70 வயதான லோங்கி புய்யான் தெரிவித்தார்.

'புதிய மலை மனிதர்' பெயர் குறித்த விவாதம்

கயாவின் தசரத் மாஞ்சி, மலை மனிதர் என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறார். அவர் மலையை வெட்டி பாதை அமைத்தார். ஆனால் இப்போது மக்கள் லோங்கி புய்யானை 'புதிய மலை மனிதர்' என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

"நான் தசரத் மாஞ்சியைப் பற்றி பின்னர்தான் அறிந்தேன், நான் இந்த முடிவை எடுத்தபோது, அவரைப் பற்றி எனக்கு தெரியாது. தண்ணீர் கிடைத்தால் விவசாயம் செய்யமுடியுமே என்பதுதான் என் மனதில் இருந்த ஒரே எண்ணாம். குழந்தைகள் கிராமத்தைவிட்டு வெளியே செல்ல மாட்டார்கள். தானியங்கள் இருக்கும் குறைந்த பட்சம் வயிற்றை நிரப்ப அது போதுமானதாக இருக்கும், "என்கிறார் லோங்கி புய்யான்.

லோங்கி புய்யானுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்களில் மூன்றுபேர், வெளியே வாழ்கின்றனர். வீட்டில் லோங்கியின் மனைவி, ஒரு மகன், மருமகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆனால் இப்போது மற்ற மகன்களும் வீடு திரும்புவார்கள் என்று அவர் நம்புகிறார். மகன்கள் அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளனர்.

பட மூலாதாரம், NEERAJ PRIYADARSHI / BBC

கிராம மக்களின் மகிழ்ச்சி

மலையை வெட்டி கால்வாய் அமைத்த லோங்கி புய்யானின் பணியில் மிக அதிகமான மகிழ்ச்சியை அடைந்தவர்கள் யாரென்று பார்த்தால், அது அவருடைய கிராமத்தின் விவசாயிகள்தான். புய்யான் கட்டிய கால்வாயின் நீர் இப்போது அவர்களின் வயல்களை எட்டுகிறது, இப்போது அவர்கள் எல்லா வகையான பயிர்களையும் விளைவிக்கமுடியும் என்று நம்புகிறார்கள்.

"லோங்கி புய்யான் செய்திருக்கும் இந்த வேலை, ஒரு அதிசயத்திற்கு குறைவானதல்ல. மலைகளை குடைந்து கால்வாய் வெட்டுவது மிகவும் கடினம். நமது வருங்கால சந்ததியினர் இதை என்றுமே நினைவில் கொள்வார்கள்,"என்று உள்ளூர்வாசி உமேஷ் ராம் கூறுகிறார்.

"லோங்கி பணியில் ஈடுபட்டிருந்தபோது, உள்ளூர் நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பிரச்சனைகளை பற்றி எடுத்துக்கூறினோம். ஆனால் எங்களுக்காக யாரிடமும் நேரமில்லை. யாருமே உதவவில்லை. இது ஒரு சாத்தியமற்ற காரியம் என்று லோங்கியிடம் நாங்கள் பல முறை சொன்னோம். ஆனால் அது எங்களுடைய தவறு என்று அவர் நிரூபித்துவிட்டார்,"என்று கோடில்வா கிராமத்தில் வசிக்கும் ஜீவன் மான்ஜி தெரிவித்தார்.

பட மூலாதாரம், NEERAJ PRIYADARSHI / BBC

லோங்கி புய்யான் நிகழ்த்தியுள்ள இந்த சாதனை பற்றிய பேச்சு, இப்போது வெளியேயும் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் லோங்கியை சந்திக்க வருவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.

லோங்கி புய்யான், மிகவும் பின்தங்கிய முசாஹர் சமூகத்தை சேர்ந்தவர். அவரது கிராமத்தின் பெரும்பான்மை மக்களும், இதே சமூகத்தை சேர்ந்தவர்கள்.

ஏன் உதவி கிடைக்கவில்லை? இந்த கேள்வி நிர்வாகத்திடம் கேட்கப்பட்டது.

மலையின் நீர் தங்கள் வயல்களை எட்டியதில் லோங்கி புய்யாவும் அவரது கிராம மக்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் பல முறை உதவி கேட்ட பிறகும் நிர்வாகத்தின் உதவி கிடைக்கவில்லை என்பதில் அவர்கள் சினம் கொண்டுள்ளனர்.

"அப்போது யாரும் வரவில்லை, இன்று வருபவர்களும் வெறும் வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கின்றனர். என் வேலை முடிந்துவிட்டது, இப்போது எனக்கு எதுவும் தேவையில்லை. ஆனால் எனது குடும்பத்திற்கு ஒரு வீடும், கழிப்பறையும் கிடைக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் வீடு மண்ணால் ஆனது. அது இப்போது இடிந்துவிழும் நிலையில் உள்ளது. நான் மலையை வெட்டும் வேலையைச் செய்திருக்காவிட்டல் இதற்குள்ளாக ஒரு வீட்டைக் கட்டியிருப்பேன். எனக்கு பதக்கம் தேவையில்லை. ஒரு டிராக்டர்தான் வேண்டும், இதனால் விவசாயம் செய்வது எளிதாகும், "என்று லோங்கி புய்யான் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், NEERAJ PRIYADARSHI / BBC

"லோங்கியை பற்றி கேள்விப்பட்டவுடன் இந்த பகுதியின் எஸ்.டி.ஓ (உதவி வட்டார அதிகாரி) அவரை சந்திக்கவும், வேலையைப் பார்க்கவும் வந்தார். லோங்கியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்துள்ளார்," என்று உள்ளூர்வாசியான உமேஷ் ராம் குறிப்பிட்டார்.

லோங்கி புய்யான் பற்றிய செய்தி பரவியதை அடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை கவுரவிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

"லோங்கி பூயான் ஒரு துணிச்சலான வீரரைப்போலவே பணி செய்திருக்கிறார். அவர் பாராட்டுகளுக்குத் தகுதியானவர். மக்கள் அவரிடமிருந்து உத்வேகம் பெற வேண்டும். இவரைப்போன்றவர்கள் கவுரவிக்கப்படவேண்டும். மாநில அரசின் ஜல் ஜீவன் ஹரியாலி திட்டத்தை பொறுத்தவரை லோங்கி புய்யானின் இந்த பணி மிகவும் முக்கியமானது மற்றும் ஊக்கமளிப்பதாக உள்ளது , "என்று கயாவின் இமாம்கஞ்சின் பிடிஓ (வட்டார வளர்ச்சி அதிகாரி ) தெரிவிக்கிறார். அவரது அதிகார வரப்பு பகுதியில் தான் லோங்கி புய்யான் கட்டிய கால்வாயின் ஒரு பகுதி அமைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :