மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் உதிரப்போக்கு - ஆபத்தின் அறிகுறியா?

  • சுஷிலா சிங்
  • பிபிசி இந்தி
மாதவிடாய் நின்ற பிறகு உதிரப் போக்கு ஆபத்தின் அறிகுறியா?

பட மூலாதாரம், Juanmonino / Getty

தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் 55 வயதான சரளாவிற்கு (பெயர் மாற்றப்பட்டது) மாதவிடாய் நின்று விட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக, தனக்கு பல முறை ரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறினார். மகளின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டிலும் மருத்துவமனையிலும் வேலை பளு அதிகமாக இருந்தது.

இது குறித்து தனது சக ஊழியரிடம் பேசியபோது, அவர், ஒரு மருத்துவரைச் சந்திக்க சரளாவுக்கு அறிவுறுத்தினார். ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று சரளாவும் உணர்ந்திருந்தார். ஆனால் அவரது வீட்டு மற்றும் மருத்துவமனை வேலைகளுக்கு மத்தியில், இந்தப் பிரச்சனை பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது.

இறுதியில், நிலைமை தீவிரமடைய, அவர் ஒரு மருத்துவரைச் சந்திக்க முடிவு செய்தார். மருத்துவ பரிசோதனையில் சரளாவுக்கு கருப்பைக்குள் எண்டோமெட்ரியல் புற்றுநோய் இருந்ததும் அது சற்று முற்றியிருந்ததும் தெரியவந்துள்ளது. சரளாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சரளா தனது சிகிச்சையை முன்பே தொடங்கியிருந்தால், புற்றுநோயாக மாறுவதற்கு முன்போ அல்லது ஆரம்ப கட்டத்திலோ அவருக்கு இது குறித்துத் தெரிந்திருக்கும்.

சரளா படித்த பெண்மணி. ஒரு மருத்துவமனையிலேயே பணியாற்றியும் வந்துள்ளார். ஆனால் பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து அக்கறை கொள்ளாமல் இருப்பது அல்லது தங்களுக்குள் உரையாடியே பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிப்பது பெரும்பாலும் நடக்கிறது. சில நேரங்களில், பெண்கள் கூச்சம் காரணமாக இந்த விஷயங்களைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். தங்கள் பிரச்சனையைப் பற்றி மருத்துவரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள்.

ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது சாதாரணமானதா? இந்தக் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்வதற்கு முன், மாதவிடாய் நிற்றல் என்றால் என்ன, இந்தியப் பெண்களில் சராசரியாக எந்த வயதில் இது நிகழ்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

இது குறித்து, மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.என். பாசு அவர்கள், "உங்கள் உடலில் உள்ள சினைப்பைகள் செயலிழக்கும்போது, கருப்பை சவ்வுகள் மெல்லியதாகி, இரத்தப்போக்கு நிறுத்தப்படும். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நின்றுவிட்டதா என்பதை அறிய எஃப் எச் எஸ் அளவைக் குறிக்கும் ரத்தப் பரிசோதனை (FHS) செய்யப்படுகிறது. அதன் அளவு, 30 க்கு மேல் இருந்தால், பெண்ணின் மாதவிடாய் நின்று விட்டதாகக் கொள்ளலாம்.

மாதவிடாய் நின்றதாக எப்படி அறியலாம்?

உலகில் பொதுவாகப் பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்தின் சராசரி வயது 49-51 எனக் கருதப்பட்டாலும், இந்தியப் பெண்களில் மாதவிடாய் நிறுத்தம் 47-49 வயதில் ஏற்படுகிறது. அதாவது உலகெங்கிலும் உள்ள பெண்களை விட இந்தியப் பெண்கள் மாதவிடாய் நிற்றல் விரைவாக ஏற்படுகிறது.

"எந்த ஒரு பெண்ணுக்கும் கருவுறும் காலமோ மாதவிடாய் நிற்கும் காலமோ அவரவர் உடல் வாகைப் பொறுத்தது. மற்ற எவருடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. சில பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முன்பு வரை, சாதாரண மாதவிடாய் இருக்கும். பின்னர், அது நின்றுவிடும்.

சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. மற்றும் சில பெண்களுக்குச் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு, இடைவெளி அதிகரிக்கிறது. இந்தக் காலகட்டம், ப்ரீமெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. இது, சில மாதங்கள் முதல் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை இருக்கலாம். கடைசி மாதவிடாய் காலத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு 12 மாதங்கள் வரை மாதவிடாய் வரவில்லை என்றால் அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் நின்றதாகக் கருதப்படுகிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஒரு பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டால், அது அசாதாரணமாகவே கருதப்படுகிறது." என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

புற்று நோய்க்கான அபாயம்

மகப்பேறு மருத்துவர் பாவ்னா செளத்ரி, மாதவிடாய் நின்ற பிறகும் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணத்தை விளக்குகிறார்.

"வயது அதிகரிக்க, அதிகரிக்க, பெண்களின் பிறப்புறுப்புகள் வறண்டு போகின்றன, கருப்பை வாய்க் கட்டி, கருப்பையின் புறணி தடித்தல் அல்லது மெலிந்து போதல், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அல்லது நோய்த்தொற்றுகளால் உதிரப்போக்கு ஏற்படலாம். மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு சில நேரங்களில் சிறிய காரணங்களாலும் இருக்கலாம். சில சமயங்களில் இது புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்" என்று பாவ்னா கூறுகிறார்.

டாக்டர் எஸ்.என். பாசு, "மாதவிடாய் நின்ற பிறகு, லேசான வடுவோ, அதிக இரத்தப்போக்கு அல்லது எந்தவிதமான இரத்தப்போக்கு இருந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இது புற்றுநோயாக இருக்க பத்து சதவீதம் வாய்ப்புள்ளது. இந்தப் புற்றுநோய் கருப்பையிலோ அல்லது அதன் வாயிலோ அல்லது சினைப்பையிலோ அல்லது யோனியிலோ ஏற்படலாம்." என்று எச்சரிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக, இரத்தப் பரிசோதனைகள், பேப் ஸ்மியர்ஸ், எண்டோமெட்ரியல் பயாப்ஸி, சோனோகிராபி மற்றும் டி.என்.சி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

"இரண்டு-மூன்று மாதங்களாக மாதவிடாய் ஏற்படவில்லை என்றால், மாதவிடாய் நின்று விட்டது என்று கருதும் பெண்கள், கருத்தடைச் சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிடுகிறார்கள். அதனால் அந்த வயதில் அவர்கள் கர்ப்பமடைகிறார்கள். அது சங்கடத்தை ஏற்படுத்துகிறது." என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சனைகளுடன் பல தம்பதியர் வருவதாகவும் அந்த நேரத்தில், கருக்கலைப்பு செய்வது மிகவும் கடினமாகிவிடுவதாகவும், இதனால், அவர்களுக்கு சங்கடம் ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எனவே, பெண்ணுக்கு மாதவிடாய் நின்றது மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்படும் வரை தம்பதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :