நரேந்திர மோதி: ”சிறந்த பேச்சாளர் அவர்” - பேட்டி எடுத்த பத்திரிகையாளர்களின் அனுபவம்

  • ஆஷிஷ் தீக்ஷித்
  • பிபிசி மராத்தி ஆசிரியர்
நரேந்திர மோதியை பேட்டி எடுத்த பத்திரிகையாளர்களின் அனுபவம்

பட மூலாதாரம், Hindustan Times / Getty

பிரதமர் நரேந்திர மோதியை பேட்டி எடுத்தவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறார்கள். அவர் பேச்சில் சிறந்தவர் என்பதுதான் அது.

ஆனால், அவர் எப்படி பேசுவார்? அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பாரா? பொருத்தமாக பதிலளிப்பாரா அல்லது அவர் என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்வாரா?

நரேந்திர மோதியின் 70வது பிறந்தநாள் இன்று. அவர் நேர்காணல் அளிப்பது என்பது அரிதான ஒரு விஷயமாகி விட்டது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணலும், தீவிரமாக எடுக்கப்படவில்லை, சரியான கேள்விகள் கேட்கப்படவில்லை என்ற விமர்சனத்திற்கு உள்ளானது.

பிரதமராகி ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இதுவரை ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடைபெறாததும் விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த காலத்தில் அவரை பேட்டி எடுத்த சில செய்தியாளர்களிடம் பேசினோம்.

மோதியிடம் பேட்டி எடுத்த ஸ்மிதா பிரகாஷ், விஜய் திரிவேதி, ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் நவ்தீப் தாரிவாலிடம் அவர்களது அனுபவம் குறித்து கேட்டறிந்தோம்.

ஸ்மிதா பிரகாஷ் (ஏஎன்ஐ செய்தி நிறுவனம்)

நான் நரேந்திர மோதியை இருமுறை பேட்டி எடுத்துள்ளேன். 2014ல் அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஒருமுறை மற்றும் 2019 ஜனவரி மாதம் மக்களவை தேர்தல் நடக்கவிருந்த 5 மாதங்களுக்கு முன்பு.

முதல் நேர்காணல் சிறப்பாக இருந்தது என்று நான் கூறுவேன்.

2014ஆம் ஆண்டுக்கு முன்பும் நான் ஒருமுறை அவரை நேர்காணல் எடுக்க சென்றேன். ஆனால், அது நடக்கவில்லை. அதனால் 2014ல் என்ன நடக்கும் என்று தெரியாமல் இருந்தேன். செய்தியாளர்கள் குறித்த அச்சம் அவருக்கு இருப்பதாகவும் நான் கேள்விப்பட்டேன்.

ஆனால், அவர் மிக புத்திசாலித்தனமாக பதில் அளித்தார். 'அதை கேட்காதீர்கள், இதை கேட்காதீர்கள்' என்றெல்லாம் கூறவில்லை. நான் அப்போது சிங்கப்பூரை சேர்ந்த செய்தி நிறுவனமான நியூஸ் ஏஷியாவிற்கு பணிபுரிந்தேன். அதற்காக அந்த பேட்டியை எடுத்தேன்.

வெளியுறவுக் கொள்கைகள் குறித்து மோதிக்கு சில விஷயங்கள் தெரிந்திருந்தது எனக்கு ஆச்சரியம் அளித்தது. அவர் பிரதமராகும் முன், மோதிக்கு வெளியுறவுக் கொள்கைபற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று மக்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், அவர் அப்போது சிங்கப்பூர் மக்களை மனதில் வைத்து, சிறப்பாக பேசினார்.

எனக்கு ஒரு நேர்காணல் என்பது ரேட்டிங்கை பொறுத்தது அல்ல. அது அனைவருக்கும் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். எனது நேர்காணல் கரண் தாபர் நேர்காணல் மாதிரி இருக்காது. ஆனால், அது அனைத்து செய்தி சேனல்களும் பயன்படுத்திக் கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

இது மோதிக்கு சங்கடமான கேள்வியாக இருக்கும் என்று நினைத்து கேட்கும் கேள்விக்கும் அவர் பதிலளிப்பார். ஆனால், அவரது பாணியில் அவருக்கு எப்படி வேண்டுமோ அப்படி பதிலளிப்பார்.

நேர்காணலுக்கு முன்பும் பின்பும், அவரிடம் எந்த மாற்றத்தையும் காண முடியாது. வெறும் தண்ணீர் மட்டுமே குடிப்பார். நீண்ட நேர்காணலுக்கு பிறகான சோர்வு கூட அவரிடம் தெரியாது. ஏன் இந்தக் கேள்வியை இரண்டு, மூன்று முறை கேட்டீர்கள் என்றெல்லாம் கேட்க மாட்டார். நேர்காணல் முடிந்து அமைதியாக சென்றுவிடுவார்.

2014 நேர்காணலுக்கு பின்பு மோதி என்னை தொடர்பு கொண்டார். ஒரே நேரத்தில் பல சேனல்களில் அவரது பேட்டி ஒளிபரப்பாகும் என்று தனக்கு தெரியாது என அவர் என்னிடம் கூறினார்.

விஜய் திரிவேதி

(என்.டி.டி.வி இந்தியாவில் இருக்கும்போது நரேந்திர மோதியை பேட்டி எடுத்தார். தற்போது சத்யா இந்தியில் பணியாற்றுகிறார்)

2009ஆம் ஆண்டு ஏப்ரல். நரேந்திர மோதியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என்னை ஆமதாபாத் வருமாறு கூறினார். அப்போது நான் அவருடன் 20 ஆண்டுகளாக சிறப்பான உறவில் இருந்தேன். டெல்லியில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது, நான் அவரை பலமுறை பேட்டி எடுத்துள்ளேன்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் அழைத்து வாழ்த்து சொல்வார்.

விருந்தினர்களை நன்கு கவனித்துக்கொள்வார்.

அதிகாலை சிறிய ஹெலிகாப்டர் ஒன்றில் ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றோம். அதில் 4-5 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

அந்த காலத்தில் நரேந்திர மோதியை நேர்காணல் எடுப்பது மிகவும் சுவாரஸ்யமானது. வலுவாகவும், எந்த தயக்கமுமின்றி அவரது மனதில் தோன்றியதை கூறுவார்.

உதாரணமாக 2008ல் பாஜகவில் பலரும், அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த விரும்பம் தெரிவிக்காத போதிலும், அத்வானிதான் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மோதி கூறினார்.

நாங்கள் அம்ரேலிக்கு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தோம்.

'பயணத்திற்கு 45 நிமிடங்கள் ஆகும் என்றும், அதன் பிறகு 30 நிமிடங்கள் இருப்பதாகவும், எப்போது வேண்டுமோ நேர்காணல் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று என்னிடம் கூறினார்.

பேட்டியை தொடங்கிய நான், 2002ல் நடந்த குஜராத் கலவரத்திற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்றும் கேள்வி எழுப்பினேன்.

உடனே அவர், '1984 கலவரத்திற்கு மன்னிப்பு கேட்க முடியுமா என்று சோனியா காந்தியிடம் சென்று கேட்கும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?' என்று கேட்டார்.

நான் சோனியா காந்தியை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால், அந்தக் கேள்வியை கேட்பேன் என்று கூறினேன்.

எனது முதல் கேள்வியையே மீண்டும் மோதியிடம் கேட்டேன். அவருக்கு என்ன வேண்டுமோ அந்த பதிலை சொன்னார். நான் மீண்டும் கேட்டேன். அமைதியாக இருந்த அவர், என் கேமிரா முன்பு கைகளை வைத்தார். என்னை தவிர்த்து, அவரது ஆவணங்களை பார்க்க ஆரம்பித்தார்.

பின்னர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டு வந்தார்.

ஹெலிகாப்டர் சத்தத்தில் அங்கு மௌனம் மட்டுமே நிலவியது.

ஹெலிகாப்டரை விட்டு கீழே இறங்கியவுடன் என் தோல்களில் கைகளை வைத்து, 'இதுதான் நாம் பேசும் கடைசி பேச்சாக இருக்கும்' என்று கூறினார்.

பேரணியில் செய்தி சேகரித்துவிட்டு திரும்பியபோது, அவரது ஹெலிகாப்டர் என்னை ஏற்றிச் செல்லாமல் சென்றுவிட்டார். நரேந்திர மோதி நான் திரும்பி செல்ல எனக்கு கார் ஏற்பாடு செய்துள்ளதாக அவரது உதவியாளர் என்னிடம் வந்து கூறினார். நான் அதில் பயணம் செய்ய மறுத்து, ஒரு டிராக்டர் ஏறி திரும்பினேன்.

அந்த பேட்டியின் ஒளிபரப்பை நிறுத்த நரேந்திர மோதி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாங்கள் அதை முழுவதுமாக ஒளிபரப்பினோம்.

அந்த நேர்காணல் இவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

அந்த நேர்காணலுக்கு பிறகு இன்றுவரை நரேந்திர மோதி என்னிடம் பேசவில்லை. நான் அவரது பல நிகழ்ச்சிகளுக்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளேன், அவரது அமெரிக்க அலுவல்பூர்வ பயணத்தின்போதும் நான் சென்றேன். ஒரே ஒரு முறை நாங்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது வணக்கம் கூறினார். அவ்வளவுதான்.

இன்று, எனக்கு மோதிக்கு எதிராக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இருந்ததும் இல்லை. இன்றும் நான் அவரைப் பார்த்தால், அதையே தான் சேய்வேன் - கேள்வி கேட்பது.

ராஜ்தீப் சர்தேசாய்

(என்.டி.டி.வி மற்றும் சிஎன்என்-ஐபிஎன்னுக்காக மோதியை நேர்காணல் செய்தார். தற்போது இந்தியா டுடேவில் ஆலோசனை ஆசிரியராக உள்ளார்)

நரேந்திர மோதி குஜராத் பிரதமராக இருந்தபோது நான் அவரை பலமுறை பேட்டி எடுத்துள்ளேன். ஆனால், ஆழமாக நினைவில் இருப்பது நான் அவரை எடுத்த கடைசி நேர்காணல். 2012 செப்டம்பரில், அவரது பேருந்தில் கீழே எங்களை அமர வைத்திருந்தார்.

அப்போது செய்தியாளர்கள் மீது கோபம் இருந்தது. எச்சரிக்கையுடனே இருந்தார்.

1990ஆம் ஆண்டு ரத யாத்திரையின்போதுதான் நான் அவரை முதன்முதலில் பேட்டி எடுத்தேன். வெள்ளை நிற குர்தா பைஜாமா அணிந்திருந்தார். அது தொலைக்காட்சிகள் எல்லாம் இல்லாத காலம்.

அப்போது மோதி, வலுவாக மற்றும் திறமையாக பேசக்கூடிய நபராக அனைவருக்கும் தோன்றினார்.

2001ஆம் ஆண்டு 9/11 தாக்குதல் முடிந்த 3 அல்லது 4 நாட்களில், தீவிரவாத நடவடிக்கைகளை குறித்த நிகழ்ச்சி ஒன்றை ரெகார்ட் செய்துவந்தோம். அரசாங்கப் பொறுப்பில் இருந்ததால் பிரமோத் மகாஜன், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார்.

அப்போது சாஸ்திரி பவனில் மோதியை சந்தித்தேன். இந்த விவாத நிகழ்ச்சிக்கு உடனே ஒப்புக் கொண்ட மோதி, இது தொடர்பாக விவாதம் நடத்த தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பான விஷயம் என்று என்னிடம் கூறினார்.

அவர் எப்போதும் விவாதத்திற்கு தயாராகவே இருந்தார். அனைத்து கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இருக்கும். முன்கூட்டியே கேள்விகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறமாட்டார்.

தற்போதெல்லாம் பேட்டி என்பது மக்கள் தொடர்பு மற்றும் கவனத்தை ஈர்க்க நடத்தப்படும் ஒன்று போல ஆகிவிட்டது. ஆனால், அந்த காலத்தில் நரேந்திர மோதியை பேட்டி எடுப்பது சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும்.

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, மோதி மாநில முதலமைச்சராக இருந்தார். அப்போது நான் அவரை பேட்டி எடுத்தேன். அலுவலகம் வந்து பார்த்த பிறகுதான் நேர்காணல் பதிவாகியிருந்த டேப், சேதமாகியது தெரிய வந்தது. அதனால், அதே நாளில் காலை 11 மணி அளவில் மீண்டும் நேர்காணலை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம். அப்போது மீண்டும் அதே கேள்விகளுக்கு மோதி பதிலளித்தார்.

இன்று யாரேனும் இப்படி செய்வார்களா?

நவ்தீப் தாரிவால்

(பிபிசியில் பணியாற்றும்போது நரேந்திர மோதியை பேட்டி எடுத்தார்)

குஜராத் தொழில்முனைவோர் கூட்ட நிகழ்வின்போது நரேந்திர மோதியை நான் பேட்டி எடுத்தேன். கூட்டம் குறித்து அவர் உற்சாகமாக இருந்தார்.

முதலீடு செய்வதற்கு குஜராத் மிகச்சிறந்த மாநிலம் என்பதை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

நேர்காணலுக்காக அவர் வந்த பிறகு இருவரும் கைக்குலுக்கிக் கொண்டோம். நேர்காணலுக்கு முன்பு சாதாரணமாக சிறு பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் நேர்காணலை தொடங்கினோம்.

தொழில்முனைவோர் கூட்டம் குறித்தும், குஜராத் கலவரம் குறித்தும் அவரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஒரு செய்தியாளராக எனக்கு அது சரி என்று பட்டது.

உலகம் முழுக்க இருக்கும் மக்கள், அது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இந்தக் கேள்வியை கேட்க இந்த நேர்காணல் ஒரு சிறப்பான வாய்ப்பாக எனக்கு தெரிந்தது.

'ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உங்கள் மாநிலத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உங்கள் மாநிலத்தில் மக்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களே…' என்பதே என் கேள்வியாக இருந்தது.

அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. நான் மீண்டும் அழுத்தமாக அதைப்பற்றி கேட்டேன்.

மைக்கை எடுத்துவிட்டு நேர்காணலில் இருந்து நரேந்திர மோதி சென்றுவிட்டார்.

நான் தொழில்முனைவோர் கூட்டம் குறித்து பேச வந்திருக்கிறேன். மற்ற விஷயங்களை பேசமாட்டேன் என்பதே அவரது தெரிவிக்க விரும்பும் செய்தியாக இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :