கொரோனா விவாதம்: "உணர்வை வெளிப்படுத்த முடியாவிட்டால் டெல்லி வருவதில் பயனில்லை" - மாநிலங்களவையில் கொந்தளித்த திருச்சி சிவா

சிவா

பட மூலாதாரம், RSTV

இந்திய மாநிலங்களவையில் கொரோனா வைரஸ் பற்றி விவாதிக்க கூடுதல் நேரம் வழங்காததை எதிர்த்து திமுக எம்.பி திருச்சி சிவா கடுமையாக எதிர்வினையாற்றினார்.

மாநிலங்களவையில் கொரோனா சூழ்நிலை குறித்து அவையில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியதும் அது தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. அப்போது திருச்சி சிவா பேசினார்.

"கொரோனாவுக்கு எதிரான போர் முடிவு பெற இன்னும் பல காலம் ஆகும் என மிகத்தெளிவான எச்சரிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் அளித்திருக்கிறார். அனுபவம், அறிக்கைகள், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் நாம் இன்னும் ஆபத்தான கட்டத்திலேயே இருக்கிறோம். இந்தியாவில் 50 லட்சத்தை கோவிட்-19 பாதிப்புகள் கடந்துள்ளன. நேற்றுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 80 ஆயிரமாக இருந்தது. இன்று அது 82 ஆயிரம் ஆகியுள்ளது. இந்த உலகில் உயிரிழப்புகள் வெறும் எண்ணிக்கையாக பார்க்கப்படுகின்றன. வைரஸ் தொற்று ஏற்பட்ட நபருக்கு அருகே கூட குடும்ப உறுப்பினர்களால் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால், இதை மிக, மிக எளிதாக எடுத்துக் கொள்கிறோம்."

"இன்று இந்த அவையில் பாருங்கள் நாம் எல்லாம் எப்படி அமர்ந்திருக்கிறோம். நேற்று டெல்லி சட்டமன்றத்தில் இரு உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்ததால் சட்டமன்ற அலுவலில் பங்கேற்றனர். பிறகு ஆர்டிபிசிஆர் அறிக்கையில் அவர்களுக்கு முடிவு பாசிட்டிவ் என வந்தது. நேற்று முன்தினம் நாங்கள் நாடாளுமன்ற முகப்பு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அதில் ஒரு உறுப்பினருக்கு பாசிட்டிவ் என கொரோனா பரிசோதனை முடிவு வந்துள்ளது. மக்களின் முடிவு நிச்சயமற்று உள்ளதை நீங்களே அறிவீர்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதிக்க நேரம் கேட்டு நாங்கள் போராட வேண்டியுள்ளது."

"இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு தழுவிய பொது முடக்கத்தை அறிவித்த நடவடிக்கை துணிச்சலானது என்று மிகவும் பெருமையாக அமைச்சர் பேசுகிறார். சமூகம் சார்ந்த சமூகத்தை உள்ளடக்கிய பொது முடக்கத்தை அமல்படுத்துவோம் எனக்கூறி மக்கள் ஊரடங்கு முயற்சியை முதலில் முன்னெடுத்தவர் பிரதமர். அந்த நடவடிக்கைக்கு அவரே சாட்சி. ஆனால், அந்த கொரோனா பொது முடக்கத்தை எப்போது அறிவித்தீர்கள்?"

"மார்ச் 23, 2020இல் தான் அந்த அறிவிப்பு வெளிவந்தது. ஆனால், கொரோனா வைரஸின் முதலாவது பரவல் ஜனவரி மாத மத்தியில் கண்டறியப்பட்டது. அதுவரை என்ன செய்தோம்?"

"நாடாளுமன்றம் கூட அப்போது இயங்கி வந்தது. எல்லா விமானங்களும் அங்குமிங்குமாக சென்று வந்து கொண்டிருந்தன. ரயில்கள் இயங்கி வந்தன. மக்களின் நடமாட்டம் எங்குமிருந்தது. திரையரங்குகள், மால்கள், சந்தைகள் அனைத்தும் செயல்பட்டன."

"மார்ச் 22ஆம் தேதி நான் சென்னையில் இருந்தேன். அப்போது என்னை அழைத்த இரண்டு அமைச்சர்கள் உடனடியாக நான் டெல்லிக்கு வர வேண்டும் என்றனர். சூழ்நிலை சரியாக இல்லை என்று நான் கூறியபோது, அப்படியெல்லாம் இல்லை என்று அவர்கள் பதில் அளித்தார்கள்."

"அப்படியென்றால் அதுவரை அரசிடம் எந்த திட்டமும் இருக்கவில்லையா? இப்படி ஒரு நிலையை நீங்கள் ஊகிக்கவில்லையா? நீங்கள் கொரோனா பொது முடக்கத்தை அறிவிக்காமல் தாமதப்படுத்தியதற்கான காரணம், இந்தியாவில் திட்டமிடப்பட்ட டொனால்ட் டிரம்புக்கான மிகப்பெரிய நிகழ்ச்சி."

பட மூலாதாரம், Getty Images

"லட்சக்கணக்கான மக்களை அந்த நிகழ்வில் திரட்டியிருந்தீர்கள். அது மட்டுமே ஒரே காரணம். அதனால்தான் நீங்கள் பொது முடக்க அறிவிப்பை தாமதித்திக் கொண்டே வந்தீர்கள்."

"ஒரு அரசின் தலையாய கடமை, அதன் குடிமக்களை பாதுகாப்பது. ஒரு பாடகி லண்டனில் இருந்து வந்து ஏதோவொரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கு வந்து சென்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. அதன் பிறகே அரசாங்கம் விழித்தெழுந்து. பொது முடக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது."

"மிகக்கடுமையான பொது முடக்கத்தை இந்தியா அறிவித்தது. மிக குறைவான பொருளாதார வளர்ச்சியை நாடு எதிர்கொண்டது. ஆனால், கிடைத்த தீர்வு என்ன? பொது முடக்கத்துக்கு பிந்தைய நாட்டின் நிலைமை, வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக போய் விட்டது" என்று திருச்சி சிவா பேசினார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, "உங்களுக்கு ஒதுக்கிய ஆறு நிமிடங்கள் முடிந்து விட்டன" என்று அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, "இந்தியாவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்படுகிறது. இந்தியாவில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களின் நிலை என்ன? கொரோனா வார்டுகளில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் கால இடைவெளியில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், இப்போது அவர்கள் பொது வார்டுகளில் பணியாற்ற வைக்கப்படுகிறார்கள். முன்கள பணியாளர்களின் நிலையை அரசு கண்டுகொள்வதில்லை. பிளாஸ்மா தெராப்பி பற்றி முன்பு அரசு கூறியது. அதன் சிகிச்சையை பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. அமைச்சரின் விளக்கம், அரசின் செயல்பாட்டை போற்றும் வகையிலேயே இருக்கிறது" என்றார்.

இதைத்தொடர்ந்து திருச்சி சிவா பேசுவதற்கான நேரத்தை நீட்டிக்க முடியாது என்று மாநிலங்களவை துணைத் தலைவர் கூறியபோது, "எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவே இங்கு வருகிறோம். அதுவும் முடியாமல் போனால் இங்கு வருவதில் எந்த பயனும் கிடையாது என கருதுகிறேன். மிக, மிக முக்கியமான பிரச்னையை கூட எங்களால் வெளிப்படுத்த முடியவில்லை" என்று மிகவும் கோபமாக திருச்சி சிவா பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :