நரேந்திர மோதியின் 70வது பிறந்த நாள்: உலக தலைவராக உருப்பெற காத்திருக்கும் சவால்கள் என்ன?

  • அங்கூர் ஜெயின்
  • பிபிசி குஜராத்தி, ஆசிரியர்
மோடி

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசியல்வாதிகளுக்கு ஓய்வுபெறும் வயது கிடையாது. ஆனால், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி 70 வயதை எட்டும் சமயத்தில், வரக் கூடிய காலங்களில் அவர் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை எல்லோரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவில் அரசியல்வாதிகளுக்கு விருப்ப ஓய்வு வயது 75 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மோதி விட்டுச் செல்லப்போகும் ஆளுமை எந்த மாதிரியானதாக இருக்கும் என்பதை அடுத்த சில ஆண்டுகள் முடிவு செய்யப் போகின்றன. அதாவது மோதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளன, 2024 தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன.

70வது வயதில் மோதியின் கனவுகளில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, தனது பாணி அரசியல் ஆகியவைதான் முக்கியமான அம்சங்களாக இருக்கப் போகின்றன.

நரேந்திர மோதியின் கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சியில், விமர்சகர்களிடம் அதிருப்தி அதிகரித்துள்ளது., இந்தியாவின் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மத்தியில் குவிக்கப்பட்டுள்ளன.

மறுபுறம் அவருடைய பாணியிலான செயல்பாட்டால் ஊழல் களையெடுக்கப்பட்டுள்ளது என்றும், அதன் பலன்கள் ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைத்துள்ளன என்றும் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் மீது கண் வைத்துள்ளார் மோதி

இந்திய எல்லைக்கோட்டில் சீன ராணுவங்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய வெளியுறவுக் கொள்கைதான் உண்மையான பரிசோதனைக்கு ஆளாகப் போகிறது. 2014ல் மோதி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, மோதியும் ஷி ஜின்பிங்கும் 18 முறை சந்தித்துப் பேசியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

`வெளிநாட்டுக் கொள்கையின் இந்தியாவின் தன்னாட்சித்துவம் பாதிக்கப்பட்டதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, புதிதாக உருவாகும் உலக அதிகாரக் கட்டமைப்பில் சமன் நிலையை பராமரிப்பதற்கான புதிய உத்திகளை உருவாக்க வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மறு ஏற்பாடு செய்ய வேண்டும், அதற்குப் புதிய சிந்தனைகள் பிரதமருக்குத் தேவைப்படும்'' என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சேஷாத்ரி சாரி கூறியுள்ளார்.

வெளியுறவுக் கொள்கை நிபுணராகவும், ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராகவும் உள்ள சாரி, கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிந்தைய சூழலில் பிரதமர், பல வெளியுறவுக் கொள்கை சவால்களை சந்திக்க வேண்டிய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

`2014ல் இருந்து அருகில் உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை என்பது பிரதமர் மோதியின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. ஆனால் ஆறாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், புதிய சவால்களை ஏற்படுத்துபவையாக உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு, அமெரிக்கா - சீனா வர்த்தகப் போட்டியின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும். இரானுடன் இந்தியாவின் உறவையும், ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்புத் தளவாடங்கள் இறக்குமதி குறித்தும் அது தீர்மானிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, சீனாவுடன் போட்டியிடுவதற்காக, இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் வர்த்தக உறவுகளை தீர்மானிப்பதாகவும், சீரற்ற பொருளாதார பாதிப்பைக் குறைக்க உதவுவதாகவும் இருக்கும்'' என்று சாரி கூறுகிறார்.

உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் சீன ராணுவம் குவிக்கப்பட்டிருப்பது மிகவும் அவசரமான சவாலாக இருக்கும் நிலையில், கோவிட்-19 பாதிப்பால் தொடர்ந்து எழும் மற்ற சவால்களும் இருக்கும் என்று தி இந்து பத்திரிகையின் தேசிய மற்றும் தூதரக விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் சுஹாசினி ஹைதர் கூறியுள்ளார்.

``கொரோனாவக்கு பிந்தைய காலத்தில் உலகமயமாக்கலுக்கு எதிரான மற்றும் தற்காப்பு நிலை அணுகுமுறை அதிகரிக்கும். இந்தியாவில் குடிபெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்புகள் குறையும். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பிப் பெறப்படும் சூழ்நிலைக்கு இந்தியா ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், அண்டை நாடுகளின் பட்டியலில் தாலிபானை கொண்டு வருவது பற்றி யோசிக்க வேண்டியிருக்கும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உலகம் நரேந்திர மோதியை எப்படி பார்க்கிறது என்ற பார்வையை உருவாக்குவதில், பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஏஜென்சிகள் உள்ளிட்ட நரேந்திர மோதியின் குழு பணியாற்றி வருகிறது.

இருந்தபோதிலும், 2002 குஜராத் கலவரங்கள், குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு, அரசியல் சாசனத்தின் 370வது சட்டப் பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஆகியவை, உலக அரங்கில் மோதிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

``உள்நாட்டுக் கொள்கைகள் மூலம் ஏற்பட்ட சில சவால்களையும் அவர் சந்திக்க வேண்டியிருக்கும். ஜம்மு காஷ்மீரை பிரிப்பது, சி.ஏ.ஏ. / என்.ஆர்.சி. விவகாரங்களில் பக்கத்து நாடுகளின் கருத்துகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டியிருக்கும்'' என்றார் ஹைதர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொருளாதார ரீதியில் தோல்வி அடைந்துவிட்டது என்று கூறி, பெரிய ஆதரவு அலையுடன் ஆட்சியைப் பிடித்தார் நரேந்திர மோதி. ஆனால் மோதி உறுதியளித்த `தூய்மையான நிர்வாகம்' என்பது இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.

மோதி மற்றும் அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் வேலைவாய்ப்பு உருவாக்கலுக்கு எதிரானவையாக உள்ளன என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, நோய்களுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டியது மோதியின் அரசுக்கு உடனடி தேவையாக உள்ளது.

ராஜதந்திரமும் அரசியலும் மோதியின் பலங்கள்

மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்குவதில் மோதி வெற்றி அடைந்துள்ளார் என்றும், அவருடைய ஆட்சி சரியான பாதையில் செல்கிறது என்றும் மாநிலங்களவை உறுப்பினர், எழுத்தாளர் மற்றும் பொருளாதார நிபுணரான ஸ்வப்பன் தாஸ்குப்தா கூறியுள்ளார்.

``இது அசாதாரணமான சூழ்நிலை, பொருளாதாரத்தின் பெரும்பகுதி இயல்பு நிலையில் இல்லை. சந்தையில் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதில் நரேந்திர மோதி அரசு வெற்றி கண்டுள்ளது. மோதி நல்லபடியாக செயல்பட்டு வருகிறார் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவிட் பாதிப்புக்குப் பிந்தைய சூழ்நிலையில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் கோவிட் பாதிப்புக்குப் பிந்தைய காலத்தில் மருத்துவ ரீதியிலோ அல்லது பொருளாதாரத்தை எப்படி மீட்பது என்பது குறித்தோ யாரிடமும் முழுமையான செயல் திட்டம் கிடையாது'' என்று ஸ்வப்பன் தாஸ்குப்தா கூறியுள்ளார்.

உலக அரங்கிலான வாய்ப்புகளில் இருந்து வெளியேறிவிடாமல், தற்சார்பு இந்தியா என்ற மோதியின் சிந்தனைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரியான திசையில் அது செல்வதாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் தாஸ்குப்தா குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் `அரசு நிர்வாகத்தில் நம்பிக்கையை பராமரிக்க வேண்டும், எதிர்கால வாழ்வியல் குறித்த பதற்றத்தால் தனிப்பட்ட நலன் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளதற்குப் பொறுப்பேற்கும் நிலையில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி தப்பிக் கொண்டார் என்று Lost Decade ஆசிரியரும் பத்திரிகையாளருமான பூஜா மெஹ்ரா கூறியுள்ளார்.

``அரசின் வருவாய்கள் சரிந்துவிட்டதால், வாய்ப்புகள் குறைந்துவிட்டன, மக்களைக் கவரும் திட்டங்களுக்கு செலவிடுதலுக்கு நிதி கிடைக்காது. பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவியிருக்க வேண்டிய தங்கம், பட்டுவாடாக்கள் மற்றும் நிலுவைகளை வேகமாக திருப்பிச் செலுத்த உதவியாக இல்லை. ஏற்கெனவே அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி முடக்கப்பட்டுள்ளது. அரசின் சம்பளங்களும், ஓய்வூதியங்களும் வழங்குவது கூட சிரமம் ஆகிவிடக் கூடிய நிலைமை வந்துவிடுமோ'' என்று அவர் அச்சம் தெரிவிக்கிறார்.

ஆனால் பிகார் மற்றும் மேற்குவங்கத் தேர்தல்களில், பொருளாதார விஷயங்கள் குறித்து வாக்காளர்கள் பேசுவார்களா?

``வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தருவதில் தோல்வி, விவசாயிகளுக்கு லாபகரமான விலைகள் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றில் தோல்வி அடைந்துவிட்ட போதிலும், மோதியின் மீதான வாக்காளர் நம்பிக்கை அப்படியே உள்ளது. ஆனால் இந்த பிரபலத்துவத்தை நம்பி எவ்வளவு காலத்துக்கு தேர்தலை சந்திக்க முடியும் என்பது தான் கேள்வியாக உள்ளது'' என்று மெஹ்ரா கூறியுள்ளார்.

பட மூலாதாரம், PTI

மோதியை பற்றி நன்கு அறிந்தவர்கள் ராஜதந்திரமும் அரசியலும்தான் அவருடைய பலங்கள் என்கிறார்கள். ஆனால் பொருளாதார விஷயங்களுக்கு அவர் ஆலோசகர்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த ஆலோசகர்கள் பற்றிதான் பிரச்சினை இருக்கிறது என்று மெஹ்ரா உள்ளிட்ட பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

``தீவிர பொருளாதாரம் அல்லது தொழில்முறை பொருளாதார நிபுணர்கள் மீது மோதிக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. பண மதிப்பு நீக்கம் என்பது போன்ற வழக்கத்துக்கு மாறான பரிசோதனைகளை மோதி மேற்கொண்டார். அதனால் பொருளாதாரத்திற்கு நல்லது நடப்பதைவிட கெட்டதுதான் அதிகமாக நடந்தது என்று அவருடைய நம்பிக்கைக்கு உரிய ஆலோசகர்கள் கூறியுள்ளனர்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் களம்

நரேந்திர மோதி 1980களில் அரசியலுக்கு வந்தார். அப்போதிலிருந்து தனக்காக அவர் உருவாக்கிய திட்டங்கள் எல்லாம் அவருக்குச் சாதகமான பலன்களைத் தந்துள்ளன. இன்றைக்கு, 50 வயது ராகுல் காந்தியுடன் ஒப்பிடும்போது 70 வயதான மோதி அரசியல் ரீதியாக பலமாக உள்ளார். ஆனால் அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

``அரசியல் அமைப்பு முறையில் தனக்கு எதிராக எந்த ஒரு நபர் அல்லது அமைப்பும் இல்லாத போது தான் ஜனநாயக நாடுகளில் பிரபலமான தலைவர்கள் மிகப் பெரிய சவால்களைச் சந்திக்கின்றனர். அது அவர்களை பலம் இழக்கச் செய்துவிடுகிறது. பலமான எதிர்க்கட்சிகள்தான் ஜனநாயகத்துக்கு நல்லதாக இருப்பது மட்டுமின்றி, தங்கள் தவறுகளில் கவனம் செலுத்த உதவுவதால் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் நல்லதாக இருக்கிறது'' என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் துணை ஆசிரியர் சீமா சிஸ்ட்டி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், The India Today Group

இந்தியாவில் `காங்கிரஸ் இல்லாத நிலையை உருவாக்கும்' பாஜக கனவில், மோதி உயர் தலைவராக இருக்கப் போகிறாரா? தன்னுடைய ஆளுமைத் திறனை பலப்படுத்த அடுத்த சில ஆண்டுகளில் மோதி பணியாற்றுவார். டெல்லியில் ராஜபாதையை மறு உருவாக்கம் செய்யக் கூடிய சென்ட்ரல் விஸ்ட்டா திட்டம் பிரதமர் நரேந்திர மோதியின் கனவுத் திட்டம் என்று நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி சமீபத்தில் கூறியுள்ளார்.

இதற்கான வடிவமைப்பு பணி அகமதாபாத்தைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் பிமல் பட்டேலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக மோதி இருந்த காலத்தில் இருந்தே அவருக்கு நெருக்கமானவராக இவர் இருந்து வருகிறார்.

ஆனால் தாம் ஓய்வு பெற்ற பிறகு என்ன விஷயங்களுக்காக உலகமும், இந்தியாவும் தம்மை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று மோதி விரும்புகிறார்? அவர் எதிர்நோக்கியுள்ள அரசியல் சவால்கள் என்ன?

``இந்துத்வா சித்தாந்தத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர் மோதி. ஆனால் காந்தியின் பெயரை முன்வைப்பது மற்றும் பங்கேற்புடன் கூடிய இந்தியா என்ற அணுகுமுறையை வெளிநாட்டில் வலியுறுத்துவதுதான் உலகத் தலைவராக அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். இந்தியாவில் ஒருவிதமான நிலைப்பாட்டை அமல் செய்து, அரசியல்சாசனத்தின்படி உறுதியாகச் செயல்படுவதாக வெளிநாடுகளில் கூறிக் கொள்வதில் பெரிய முரண்பாடுகள் உள்ளன'' என்று சிஸ்ட்டி கூறுகிறார்.

இருந்தபோதிலும், காங்கிரஸ் மீதான மக்களின் அபிமானம் மாறும் வரையில் மோதிக்கு எந்தவிதமான அரசியல் சவாலும் ஏற்படப் போவதில்லை என்று இந்தியா டுடே துணை ஆசிரியர் உதய் மஹுர்கர் கூறியுள்ளார்.

``சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வகையில் காங்கிரஸ் செயல்படும் வரையில் அவருக்கு எந்தச் சவாலும் இருக்காது. ஊழலுக்கு ஆட்படுத்த முடியாத தலைவர் என்று மோதி மீதுள்ள நன்மதிப்பு சாதாரண மக்களிடம் இன்னும் பலமாகவே உள்ளது'' என்று மஹுர்கர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், PRAKASH SINGH

``திட்டங்களை நிறைவேற்றும் வேகம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் பெரும்பாலான திட்டங்கள் விரைந்து அமல்படுத்தப்பட்டு, மக்கள் பயன்களைப் பெற்றுள்ளனர். மோதியின் எதிர்காலம் கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று அவரை விமர்சிப்பவர்கள் கருதுகின்றனர். ஆனால் நிலைமை அப்படியில்லை. கோவிட் பாதிப்புக்குப் பிந்தைய சூழலில் இன்னும் பலமான மோதியை இந்தியா பார்க்கப் போகிறது'' என்று அவர் கூறினார்.

ஆனால் தனது 70வது பிறந்த நாளில் தனக்கு அவர் என்ன வாழ்த்து சொல்லிக் கொள்வார்? பலமான மோதி, உலக தலைவராக மோதி, அதிக இந்துத்வா செயல்பாடுள்ள மோதி, அதிகம் ஏற்புடைய தன்மைகளுடன் கூடிய மோதியா அல்லது இவை அனைத்தும் சேர்ந்த மோதியாக இருக்க வேண்டும் என்றா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :