மதுரை அருகே மாணவர் மர்ம சாவு - போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்டாரா?

ரமேஷ்

மதுரை பேரயூர் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவரை காவலர்கள் அடித்துக் கொன்றதாகக் கூறி வாழைத்தோப்பு கிராமத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த வாலிபரின் உடலை காவல்துறையினர் எடுக்க விடாமல் கிராமவாசிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், சம்பவ பகுதிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து வாலிபர் மரணம் தொடர்பாக உதவி ஆய்வாளர் ஜெய கண்ணன் உள்பட 4 காவலர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அங்கு வாலிபரின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். அவர்களிடம் இருந்து வாலிபரின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோப்பு கிராமம் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் - பாண்டியம்மாள் தம்பதிக்கு இதயக்கனி, சந்தோஷ், ரமேஷ் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மூத்த மகனான இதயக்கனி, அதே ஊரைச் சேர்ந்த பாண்டி- மகேஸ்வரி தம்பதியின் மகளான புனிதா என்பவரை காதலித்து வந்துள்ளார். இதில் மகேஸ்வரி இதயக்கனி தந்தை கன்னியப்பனின் உடன் பிறந்த சகோதரி ஆவார்.

இவர்கள் இருவரும் பழகுவதற்கு புனிதா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாகவும், இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் புனிதாவை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டார்.

இதனால் புனிதாவின் குடும்பத்தினர் இதயக்கனி குடும்பத்தினர் மீது சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெய கண்ணன், அடிக்கடி விசாரணை என்ற பெயரில் இதயக்கனியின் சகோதரர்களான சந்தோஷ், ரமேஷ் ஆகியோரை அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு இதயக்கனி வீட்டிற்கு வந்த உதவி ஆய்வாளர் ஜெய கண்ணன், ரமேஷை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். அதற்கு ரமேஷின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை அடித்து கீழே தள்ளி விட்டு ரமேஷ் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் விசாரணைக்கு சென்ற ரமேஷ் காலை வரை வீடு திரும்பவில்லை அவரது செல்பேசிக்கு தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் உறவினர்கள் ரமேஷை காணாமல் தேடி வந்தனர். காவல் நிலையத்தில் சென்று கேட்ட பொழுது அவர் இரவே வீட்டிற்குச் சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்த நிலையில் வாழைத்தோப்பு கிராமத்தில் உள்ள பெருமாள் கூட்டம் மலை மீது மரத்தில் தூக்கிட்ட நிலையில் ரமேஷ இறந்து கிடப்பதாக அப்பகுதி வழியாகச் சென்ற ஒருவர் கிராம மக்களிடம் தெரிவித்தார்

இதனை அடுத்து உறவினர்கள் மலைமீது இறந்து கிடந்த ரமேஷின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் ரமேஷ் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சாப்டூர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அவர்களை நுழைய விடாமல் கிராமவாசிகள் தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக உடலைக் கைப்பற்ற விடாமல் மக்கள் மறியலில் ஈடுபட்டதால் மாவட்ட எஸ்பி சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்பியின் நேரடி பார்வையில் ரமேஷின் உடலை கைரேகை நிபுணர்கள் பரிசோதனை செய்தனர். இந்த நிலையில், உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல முற்பட்டபோது காவல்துறையினர் முற்றுகையிட்ட கிராமவாசிகள், உதவி ஆய்வாளர் ஜெயகண்ணன், சாப்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடலை இறக்க அனுமதிப்போம் என வாக்குவாதம் செய்தனர்.இதற்கிடையே, உயிரிழந்த ரமேஷின் உடலில் காயங்கள் ஏதும் உள்ளதா? என அறிய அவரது உடல் விடியோ பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ரமேஷ், நாகர்கோவில் அருகே உள்ள அடக்கவிலை தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும் தற்போது பொது முடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு வந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். நாளை கல்லூரிக்கு செல்ல முடிவு செய்திருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று விட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :