இந்தியா Vs சீனா: "தலை வணங்கவும் மாட்டோம் தலை எடுக்கவும் மாட்டோம்" - ராஜ்நாத் சிங் மீண்டும் திட்டவட்டம்

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், RSTV

இந்தியாவின் கிழக்கு லடாக் பிராந்தியத்துக்கு அப்பால் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே பதற்றம் நிலவும் விவகாரத்தில் இந்தியா தனது நிலையில் இருந்து பின்வாங்காது என்று அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று எல்லை பாதுகாப்பு சூழ்நிலை தொடர்பாக விளக்கம் அளித்த ராஜ்நாத் சிங், எல்லை பதற்ற விவகாரத்தில் இந்தியா தலை வணங்கவும் செய்யாது, பிறரது தலையை எடுக்கவும் செய்யாது என்று தெரிவித்தார்.

எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு சமரசம் செய்து கொள்ளப்படும் சூழல் எழுமானால், அந்த நிலையை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.

லடாக்கில் மிகவும் சவாலான கட்டத்தை நாடு எதிர்கொண்டு வருவதாக ஒப்புக் கொண்ட ராஜ்நாத் சிங், எந்த நிலையிலும் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்த மாட்டோம் என்றும் சீன ராணுவத்தை நேருக்கு நேராக இந்திய படையினர் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

சீனாவுடன் ஆன எல்லை பிரச்னைக்கு பரஸ்பரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று நம்பும் அதே சமயம், பாரம்பரியமாக எல்லை பிராந்தியங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் கண்காணிப்பை தடுத்து நிறுத்த உலகின் எந்த சக்தியாலும் முடியாது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, எல்லையில் இந்திய படையினரின் கண்காணிப்புச் சாவடியை நோக்கி சீன படையினர் ஆத்திரமூட்டல் செயல்பாடுகளில் ஈடுபட்டது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, பாரம்பரியமாக இந்திய படையினர் மேற்கொள்ளும் கண்காணிப்பு வடிவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

இந்த ஒரு காரணத்துக்காகவே இந்திய வீரர்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தனர் என்றும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, இந்திய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த உறுப்பினருமான ஏ.கே. ஆன்டனி பேசும்போது, எல்ஏசியில் பாரம்பரியமாக கண்காணிக்கும் பகுதிகளுக்கு இந்திய படையினர் தற்போது வர சீனா அனுமதிப்பதில்லையே என்று வினவினார்.

அதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தீர்க்கப்படாத எல்லை பிரச்னைகள் உள்ளன. 1950கள், 1960களில் கூட அது பற்றி விவாதிக்கப்பட்டது. எனினும் தீர்வு எட்டப்படவில்லை என்று கூறினார். 1990 முதல் 2003ஆம் ஆண்டுவரை எல்ஏசி எது என்பதை வரையறுக்க இரு தரப்பிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சீனா அதற்கு உடன்படாமல் இருப்பதால் எல்லை பதற்றம் தொடர்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த விவகாரத்துக்கு அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இதுநாள்வரை இரு தரப்பு எல்லை பகுதிகள் இவை தான் என பொதுவான அசல் கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் எல்லை வரையறுக்கப்படவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :